November 29, 2021

சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!

72வது குடியரசு தினத்தையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா இன்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 7.52 மணிக்கு அங்கு வந்தார். கடற்கரை வந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காமராஜர் சாலையில் சென்று விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கையசைத்தப்படி குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் காலை 7.54 மணிக்கு அங்கு வந்தார். அவரும் விழாவில் பங்கேற்றவர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். விழா மேடைக்கு அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச்செயலாளர் சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கவர்னரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தென்னிந்திய பகுதிகளின் ராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா, கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் புனீத் சதா, விமான படை அதிகாரி ஏர் கமோடர் விபுல் சிங், கடலோரக் காவல் படை கமாண்டர் எஸ். பரமேஷ், டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி, சிறப்பு காவல் துறை தலைமை இயக்குநர் ராஜேஷ் தாஸ், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரை கவர்னருக்கு முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.

காலை 8 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், காந்தி சிலை முன்பு இருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் நாட்டுப்பண் இசைத்தனர். அனைவரும் எழுந்து நின்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார்கள். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் அந்த பகுதியில் தாழ்வாக பறந்து மலர்களை தூவியது. அதைத் தொடர்ந்து ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்று கொண்டார்.

இதனையடுத்து வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், ஆளுமையில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருது, வர்த்தகத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது என்ற பெயரில் முதல் முறையாக புதிதாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்டம் வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விவசாயி க.செல்வகுமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அதன் பின்னர் பதக்கம் பெற்ற அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னர், காவல் துறையினரின் மோட்டார் சைக்கிள் சாகசம், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி, மக்கள் தொடர்பு துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நடைபெற்றன.

இந்த கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கவர்னர், முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவரும் கைத்தட்டி, ரசித்தனர்.

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.