November 30, 2022

சினிமாக்களில் எண்ட்ரி ஆகும் போது அப்பாவி போல் நடிக்கும் நடிகர்கள் ஒரு சில படம் வெற்றியடைந்து விட்டால் எப்படியாவது மாஸ் படமான கேங்ஸ்டர் படத்தில் நடித்து விட வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நடிகர்களுக்கு மட்டுமின்றி திரைக்கதையாசிரியர்களுக்கு ஐ மீன் டைரக்டர்களுக்கு கேங்ஸ்டர் படம் என்பது ஒரு லட்சியமாக இருக்கிறது. பெரும்பான்மையான எண்ணிக்கையில் உள்ள மற்றவர்கள் கேங்ஸ்டர் திரைப்படங்கள் பார்க்கும் போது ஒரு வித மன அமைதி அடைகிறார்கள். அதற்கு காரணம் தங்களால் நிஜ வாழ்க்கையில் சாதிக்க முடியாத பிரச்சினைகளை (தனிப்பட்ட, குடும்ப, சமூகம் சார்ந்த அனைத்தும்) எண்ணி மனம் வருந்தி வாழும் ஒருவனுக்கு கேங்ஸ்டர் திரைப்படங்கள் நிச்சயமாக ஒரு வித மன அமைதியை கொடுப்பதுதான் என்று சொன்னால் அது மிகையல்ல. அதை எல்லாம் கவனத்தில் கொண்டு தமிழ் உள்பட எத்தனையோ மொழிகளில் ஏகப்பட்ட கேங்ஸ்டர் படங்களைப் பார்த்திருக்கிறோம். அவைகளில் சொல்லாத புது வகை கேங்ஸ்டர் படமே ‘ரெண்டகம்’.பக்காவான பாம்பே ரவுடிகளின் வாழ்க்கைதான் என்றாலும் கிளைமாக்ஸ் வரை ரத்தம், வெட்டு, அடிதடி, ஆக்ஷன், கொலை அது , இது மட்டுமே என்று காட்டாத  ஒரு படமாக்கும் இது.

அதாவது மும்பையில் பெரிய தாதாவாக இருந்தவரின் வலது கரமாக செயல்பட்டவர் அரவிந்த்சாமி. தங்கக் கடத்தல் ஒன்று நடந்த போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனது நினைவுகளை இழந்தவர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்கத்தைப் பற்றிய தகவல்களை அவரிடமிருந்து எப்படியாவது பெற வேண்டும் என ஒரு கும்பல் குஞ்சாக்கோ போபனை அனுப்புகிறது. அவரும் அரவிந்த்சாமியுடன் நெருங்கிப் பழகி, அவரிடமிருந்து தகவலைப் பெற முயற்சிக்கிறார். ஆனால், ஒரு குறிப்பிட்ட சூழலில் அரவிந்த் சாமி குஞ்சக்கோ போபனை மிரட்டி தங்கம் பதுக்கிய இடத்தை சொல்லும்படி துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார். குஞ்சக்கோ அதிர்ச்சி அடைகிறார். தன்னை அரவிந்த்சாமி மிரட்டுவது ஏன் என்று புரியாமல் திகைக்கிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் அதிரடியாக பதிலளிக்கிறது. அது சரி ரெண்டகம் என்றால் என்ன? என்கிறீர்களா?“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் “என்ற பழமொழியை நினைவுப்படுத்தினால் ரெண்டகம் என்பது துரோகம் என்று புரிந்து விடும்

தியேட்டரில் பாப்கார்ன் நினைவுகளை இழந்த கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்தவராக அரவிந்த்சாமி. அமைதியாக, சாந்தமாக, அப்பாவியாக படத்தில் அறிமுகமாகிறார். முன் பாதி வரை அவரின் அப்பாவித்தனமான முகமும் அளந்து பேசும் வார்த்தைகளும் என அளவான நடிப்பு நமக்கு புதிது. கடைசியில் அவர் யார் என்று தெரிய வரும் போதும், அதன்பின் அவருடைய நடவடிக்கைகளும் அதிரடியாக அமைந்து ரசிக்க வைக்கின்றன.

குஞ்சக்கோ போபன், காதல் காட்சிகளில் மட்டும் இன்றி ஆக்‌ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார். அரவிந்த்சாமியுடனான பயணம், சாச்சாவிடம் காட்டும் பாசம், என சாமானிய மனிதராக நேர்த்தியாக நடித்திருப்பவர், தான் யார்? என்பதை தெரிந்து கொண்ட பிறகு நடிப்பில் காட்டும் வேகம் படத்தையும் வேகமாக பயணிக்க வைக்கிறது.

குஞ்சக்கோ போபனின் காதலியாக வரும் ஈஷா ரெப்பாவின் அழகிலும், கவர்ச்சியிலும் உரைந்து போகும் ரசிகர்கள், அவருடைய சுயரூபம் தெரிய வரும்போது அதிர்ச்சியில் உரைந்துபோகிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் ஜாக்கி ஷெராப்பின் தோற்றமும், நடிப்பும் ஏதோ ஹாலிவுட் பட நடிகரை பார்ப்பது போல் இருப்பதோடு, அவரது ஸ்டைலிஷான நடிப்பு படத்திற்கும் பலம் சேர்க்கிறது. ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ், ஜின்ஸ் பாஸ்கர், சியாத் யாது, அனீஷ் கோபால், லபான் ரனே, ஸ்ரீகுமார் மேனன் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகளும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

அரவிந்ந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் இருவரைச் சுற்றியே கதை நகர்கிறது. இருந்தாலும் சில காட்சிகளில் வந்தாலும் முக்கியக் கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ் நடித்திருக்கிறார்கள். குஞ்சாக்கோவின் காதலியாக ஈஷா ரெப்பா, இவருக்கும் சில காட்சிகள்தான். சிறப்புத் தோற்றத்தில் ஒரே ஒரு காட்சியில் ஜாக்கி ஷெராப். அருள்ராஜ் கென்னடி, ஏ.எச்.காஷிஃப்கா, கைலாஸ் மேனன் இசை காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது.

கவுதம் சங்கர் கேமரா ஒர்க் ரெண்டகத்துக்கு சப்போர்ட் செய்கிறது.

மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புகைப்பிடிக்கும் பழக்கத்தை மையப்படுத்தி வித்தியாசமான கோணத்தில் தீவண்டி என்கிற படத்தை இயக்கி பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் டிபி.பெலினி என்பவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆர்டினரியான கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான முறையில் இயக்கியிருப்பதோடு, காட்சிகளில் மட்டும் இன்றி கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் ட்விஸ்ட் மேல் ட்விட்ஸ் வைத்து (பல ஊகிக்க முடிந்தாலும்) ரசிக்கும்படியான ஒரு த்ரில்லர் (தொடர்) படத்தை வழங்கி அபெளவ் அவ்ரேஜ் டைரக்டர் லிஸ்டில் சேர்ந்து விட்டார்.

மொத்தத்தில் ரெண்டகம் – அடடே சொல்ல வைக்கும் சினிமா

மார்க் 3.25/5