October 16, 2021

‘ரெமோ’ மினு மினுப்பான சீன ‘வெங்காயம்’

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் ரெமோ. ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு சிவாவுடன் கீர்த்தி ஜோடிசேர்ந்திருக்கிற படம். சரண்யா பொண்வண்ணன், யோகிபாபு, நான்கடவுள் ராஜேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ், பிரதாப்போத்தன் என பலரும் இருக்கிறார்கள்.

remo review oct 8

ஒருவரி கதை: படிக்க விரும்பாமல் வேலைக்கும் போகாமல் ஊதாரியாக திரியும் ஒருவன் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலிப்பதுதான். இதற்காக அவன் போடும் திருட்டுத்தனங்கள், ஏமாற்று வேலைகள் தான் ‘ரெமோ’.

ரிலீசுக்கு முன்பு: ரெமோ அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தி பணத்தை தண்ணீராய் செலவு செய்து விளம்பரப்படுத்தினார்கள். சிவகார்த்தியேன் பெண் வேஷம்போட்ட படங்கள் வெளியாகி படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதன் விளைவாக இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் வியாபாரம் சுமார் 35 கோடியை தாண்டியது.

இனி நேராக விமர்சனத்திற்குள் போகலாம்…. ‘ரெஜினா மோத்வானி’யை சுருக்கி ‘ரெமோ’ ஆக்கியிருக்கிறார்கள். சிவாவுக்கு இந்த கதை ஒட்டவே இல்லை. அதை விட இதில் கதையே ஒருவரி கூட இல்லை. மிகப்பெரிய வியாபார கருவியாக இருக்கிற சிவாவை ஜோக்கர் இல்லாத சூதாட்டத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள். சிவாவின் அதீத நம்பிக்கைதான் இந்த படத்தை இந்தளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

ஒரு வரி கதைகூட சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. தமிழகத்தின் அடிப்படை கலாச்சாரத்தையே கேலிக்கூத்தாக்கும் விதத்தில் கதையை? அமைத்திருக்கிறார் இயக்குனர்.

திருமணம் நிச்சயித்த பெண்ணை ஊதாரியாக சுற்றித்திரியும் ஒரு உதவாக்கரை பையன் காதலிப்பதாக கதை சொன்ன இயக்குனர் தமிழ் கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாக கேவலப்படுத்தியிருக்கிறார். அவர் கதையை கேட்டு அதில் பெண் வேஷம்போட்டு நடித்து பெண்களின் ஆதரவை இழந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சாதாரண மிடில்கிளாஸ் மாதவனாக வரும் சிவா வெளிநாட்டு மேக்கப்மேனை அழைத்து பெண் வேஷம்போடுவது நம்பும்படியாகவே இல்லை.

இயக்குனர் அவ்வைசண்முகி படத்தை ஷாட் பை ஷாட் ஆக பார்த்திருப்பார் போல அப்படியே பல இடங்களில் ‘அவ்வைசண்முகி’யை காப்பி அடித்திருக்கிறார்… பல இடங்களில் அந்த காப்பி அடித்ததையும் ஒழுங்காக செய்யாமல் சொதப்பி இருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனராகவே வருகிறார்.

பிரதாப்போத்தன் தலைமை மருத்துவர் அவ்வளவே.

ரஜினி முருகன் படத்தில் இருந்ததை விட ஒருபடி அழகை கூட்டியிருக்கிறார் கீர்த்தி. ஆனால், நடிப்பதற்கு பெருசாக மெனக்கெடவில்லை.

கதையே இல்லாத ஒரு படம் திரைக்கதை வடிவமைக்கத் தெரியாத ஒரு படம். காதலிக்கத் தெரியாத ஒரு கதாநாயகன். ஒரே மாதிரியான மொக்கையா வசனங்கள். மாடுலேஷன்கள்.கமல் படத்தில் இருந்து கொஞ்சம்… ரஜினியிடம் இருந்து கொஞ்சம்… தன் படத்தில் இருந்தே கொஞ்சம் என சீன்களை எடுத்திருக்கிறார்கள். கதையின் கரு காதலுக்காக பெண் வேஷம் போட்ட ஹீரோ.

நிச்சயம் பண்ணும்வரை மாப்பிள்ளை நல்லவராக தெரியும். காதல் வந்துவிட்டால் அதே மாப்பிள்ளை கெட்டவனாகத்தான் மாறுவான் என்ற அரதபழசு பார்முலா.

சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு நடித்த படங்களில் இருந்தெல்லாம் டயலாக்குகளை, காட்சிகளை களவாண்டிருக்கிறார்கள்.

சிவா போட்ட பெண் வேஷம்போடுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை கதையிலும், திரைக்கதையிலும் செலவு செய்திருந்தால் நிச்சயம் ரெமோ வித்தியாசமான வெற்றி பட வரிசையில் சேர்ந்திருக்கும்.

ரிலீசுக்கு முன்பாக ரெமோ படக்குழு கொடுத்த பில்டப், பரபரப்புகளுக்கு நிஜத்தில் ஊசி பட்டாசு வெடிக்கக் கூட தகுதியில்லாத படம்தான் ரெமோ.

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கை பதையை ரெமோ கட்டாயம் தடுக்கும்…

நிஜத்தில் ‘ரெமோ’ இயக்குனர் தெரிந்தோ தெரியாமலோ சிவகார்த்திகேயனுக்கு ‘மெமோ’ கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் நிஜ ரிசல்ட்டை வைத்து இனி வரும் படங்களிலாவது கதை இருக்கும்படி திரைக்கதை அமைத்துக் கொண்டு நடிப்பது நல்லது.

சதீஷ் காமெடிகள் சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டுகிறது… சிவகார்த்திகேயனை விட படத்தின் ஹீரோவுக்கு தகுதியானவர் யோகிபாபுதான். அவலட்சணமாக இருந்தாலும் அழகாக நடிக்கிறார்.

அனிரூத் இசையில் புதுசாக எதுவும் இல்லை. பாடல்கள் எதுவும் மனசில் நிற்கவில்லை. அட்மாஸ்பியரை அத்தனை அழகாக திரையில் கொடுத்திருக்கிறது கேமரா.

மொத்தத்தில் ரெமோ படத்தால் சிவகார்த்திகேயனின் பட வியாபார தந்திரம் வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம். ரசிகர்கள் மனசில் ஏற்கனவே உயர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்றே இறக்கிவிடும். ரிலீசுக்கு முன்பாக பண்ண பில்டப் பரபரப்புகளுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை… அவ்வளவே.

சிவாவின் படங்கள் பெரும்பாலும் ‘வெங்காயம்’ ஆகவே இருக்கும்… தோல் மட்டும் மினுமினுப்பாக காணப்படும் சீன வெங்காயம் ஆக இருக்கிறது.

கோடங்கி