January 27, 2023

அடிக்கடி சுடுகாட்டு விஜயம் செய்த டி.எம்.எஸ்.!

து “தினமணி”யில் இதழாசிரியராகப் பணியாற்றிய காலம். “தினமணி கதிர்” இதழில் சுதந்திரப் பத்திரிகையாளர்களுக்கு கட்டுரை எழுத வாய்ப்பளிப்பது வழக்கம். அந்த வகையில், கவிஞர் ஜெயபாஸ்கரனிடம் ஒருமுறை டி.எம்.எஸ். அவர்களைப் பேட்டி கண்டு தாருங்கள், வெளியிடலாம் என்றேன். சிறுவயதிலிருந்தே இலங்கை வானொலியில் டி.எம்.எஸ். பாடல்களைக் கேட்டு வளர்ந்த நானும் டி.எம்.எஸ். அவர்களைச் சந்திக்க விரும்பினேன். அதனால் இருவரும் மந்தை வெளியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். அது 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள்.

இருவரும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் டி.எம்.எஸ். அவர்களுடன் உரையாடினோம். உண்மை யிலேயே மனம் திறந்து பேசினார். மிகப் பெரும் நடிகர்களின் படங்களுக்குப் பாடியும் உரிய அரசு அங்கீகாரம் கிடைக்காத ஆதங்கம் உள்பட அவர் காலத்துக்குப் பிந்தைய குரல்களின் தன்மை வரை பலவற்றையும் பகிர்ந்துகொண்டார்.

ஜெயபாஸ்கரன் எழுதியதை “கள்ளத்தொண்டைக்கே காலம்” என்று தலைப்பிட்டு “தினமணி கதிர்” இதழில் முகப்புக் கட்டுரையாக வெளியிட்டேன். எனது உரையாடலின் சுருக்கம் “எனக்கு நானே ரசிகன்” என்ற தலைப்பில் அத்துடன் வெளியானது.

மெல்ல, திரை வாழ்க்கையிலிருந்து அவரது தனி வாழ்க்கை சார்ந்து உரையாடலைத் திருப்பினேன். டி.எம்.எஸ். என்ற மனிதனின் உள்பக்கங்களை உணர முடிந்தது.

உரையாடலின் இடையே அவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் இன்றும் மறக்க முடியாதது:

“மாசக் கடைசில ஒரு கூடை நிறைய பழங்கள வாங்கிட்டு ஜி.எச்.க்கு போவேன் தம்பி. யாருக்கும் அடையாளம் தெரியாத மாதிரி தலைப்பா கட்டியிருப்பேன். உள்ளே ஒவ்வொரு நோயாளியின் படுக்கையைப் பார்த்துக்கொண்டே போவேன். கூட யாருமே இல்லாம தனியா ஒரு நோயாளி படுத்திருப்பான். அவன் பக்கத்திலே போய், இந்தப்பா பழம்னு கொஞ்சம் கொடுப்பேன். அவன் வாங்கிட்டு “யாருய்யா நீங்க?” ன்னு கேட்பான். நான் யாரா இருந்தா என்னப்பா… உடம்ப பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு அதே போல் தனியாக இருக்கும் இன்னொரு நோயாளியிடம் சென்றுவிடுவேன். இப்படியே நான்கைந்து நோயாளிகளுக்கு கொடுத்தவுடன், எவனாவது ஒருவன் கண்டுபிடித்துவிடுவான். “சார், நீங்க டி.எம்.எஸ்.தானே…” என்று கேட்பான். ஆமாப்பா என்பேன். எல்லோரும் கூடிவிடுவார்கள். என் மீது அன்பு மழை பொழிவார்கள். சார், ஒரு பாட்டு பாடுங்க … என்று கேட்பார்கள். அது ஆஸ்பத்திரியாச்சே… ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சிக்காக “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்….நான் வாழ யார் பாடுவார்..” பாடுவேன். அவர்கள் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு, அவர்கள் விரும்பிய பாடல்களையெல்லாம் கேட்பார்கள். அடுத்த முறை பாடுகிறேனப்பா என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவேன்.”

அவரது இன்னொரு வழக்கம்:

“எப்பெல்லாம் தோணுதோ அப்பல்லாம் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுக்கு போவேன். யாருக்கும் எளிதில் கண்ணில் படாத மாதிரி தள்ளி ஓரமாக உட்கார்ந்து கொள்வேன். ஆட்டம், பாட்டத்தோடு பிணத்தைக் கொண்டு வருவார்கள். சிலருக்கு ஏகப்பட்ட கூட்டம் வரும். தகன மேடையில் வைத்து சடங்கெல்லாம் செய்த பிறகு கொள்ளி வைத்துவிட்டு, சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்துவிடும். வெட்டியான் பிணம் எரிவதை சரிசெய்து கொண்டிருப்பார். நான் மட்டும் இருப்பதைப் பார்த்து அருகில் வந்து “ஐயா, உங்க கூட வந்தவங்கெல்லாம் போய்ட்டாங்களே… நீங்க மட்டும் இருக்கீங்க…. நீங்க அவருக்கு அவ்வளவு நெரு்க்கமா?” என்று கேட்பான். பதில் சொல்லாமல் நடையைக் கட்டுவேன்.”

எதற்கு இந்த சுடுகாட்டு விஜயம் என்று டி.எம்.எஸ்.ஸிடம் கேட்டேன்.

“பெரிய மனுஷனா இருப்பாரு. ஆரவாரமா ஆர்ப்பாட்டத்தோடு கூட்டமா கொண்டு வருவாங்க. கொஞ்ச நேரத்தில அவர் பிணம் தனியா எரியும். யாரும் சுற்றிலும் இருக்கமாட்டார்கள். அதைப் பார்க்க, பார்க்க மனித வாழ்வின் உண்மை புரியும். அகந்தை ஒடுங்கும்…. அதற்காகத்தான் சுடுகாடு செல்வேன்” என்றார்.

டி.எம்.எஸ். என்ற மாபெரும் கலைஞன் தனது கடைசிக் காலத்தில் மனித வாழ்வின் அகம் தேடி எப்படியெல்லாம் அலைந்திருக்கிறான் என்பது புரிந்தது.

திரை வாழ்வின் உச்சத்தில் இருந்த காலத்தில் எப்படி இருந்திருக்கிறார்?

“நாள் முழுவதும் ரிகார்டிங். ரொம்ப பிஸியா இருந்தேன். நைட் ரிகார்டிங் முடிஞ்சு வரும் போது மவுண்ட் ரோடு வழியா காரை விடச் சொல்வேன். டிரைவர்கிட்ட சொல்லி ஒரு ஆஃப். கூடவே பிலால் பிரியாணி பார்சல். வீட்டுக்கு வருவேன். அந்த வாரம் பதிவான புதுப் பாடலின் ரிகார்ட் கொடுத்திருப்பாங்க. சாப்டுகிட்டே அந்தப் பாடல்களைக் கேட்பேன். “மெழுகுவர்த்தி எரிகின்றது… எதிர்காலம் தெரிகின்றது…” அது ஒரு காலம். இப்பல்லாம் எதுவும் கிடையாது. சைவ சாப்பாடும் முருகன் பாட்டும்தான்” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார்.

உரையாடலின் இடையே எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றார் டி.எம்.எஸ். சுற்றிலும் அவர் பாடிய இசைத் தட்டுகள். கிட்டத்தட்ட 8000 எல்.பி. ரிகார்டுகள் வைத்திருப்பதாகச் சொல்கிறார். “யாரையும் இங்கே விடமாட்டேன். நீங்க நல்ல பசங்களா தெரியறதாலே கூட்டிட்டு வந்தேன்…” என்றார்.

அறையின் நடுவில் சிறிய கட்டில். அதுதான் மேடை மாதிரி. அதில் ஒரு ஹார்மோனியம். கண்களை மூடியவாறு, வாசித்துக்கொண்டே பாடுகிறார். “ஆறு மனமே ஆறு… ஆண்டவன் கட்டளை ஆறு…” பாடுகிறார். கண் திறந்து சிரிக்கிறார். “எனக்கு நானே ரசிகன்” என்கிறார். ஒரு வெளிநாட்டு இசை நிகழ்ச்சிக்காக தயாராகிறார். இவர் 22 பாட்டுகள் பாட வேண்டும். அத்தனைப் பாடல்களையும் அங்கே அமர்ந்து தினசரி பயிற்சி செய்திருக்கிறார். இத்தனைக்கும் 12,000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய மாபெரும் கலைஞன். ஒவ்வொரு பாடலின் ஆரம்ப வரிகளையும் எழுதி 5, 3… என்று ஒரு தாளில் குறித்து வைத்திருக்கிறார். இது எதற்கு என்றால், எத்தனை கட்டையில் அந்தப் பாடலைப் பாட வேண்டும் என்று தெரிவதற்காக என்றார்.

“தினசரி மாலை 6 மணிக்கு இந்த அறைக்கு வந்துவிடுவேன். நேரம் போவது தெரியாமல் மெடிடேஷன் செய்துகொண்டிருப்பேன்” என்றார்.

பாடுவதைத்தான் அப்படிச் சொன்னார்.

“கண்போன போக்கிலே கால் போகலாமா.. கால்போன போக்கிலே கண்போகலாமா….” பாவத்துடன் பாடிக் காட்டுகிறார்.

அந்தப் பிற்பகல் வேளை அமைதியில், டி.எம்.எஸ். என்ற சாதனைக் கலைஞனின் அடிநாதம் நமக்குக் கேட்கிறது.

*****
இன்று (மார்ச் 24) டி.எம்.எஸ். பிறந்த நாள்.

இளையபெருமாள் சுகதேவ்