April 11, 2021

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வணிகத்தில் 40 சதவீத பங்குகளை அமேசான் வாங்கப் போகுதாம்!

நாட்டில் அம்புட்டு தொழில்களும் முடங்கி நொந்து போயிருக்கும் காலச்சூழலில் நம்ம நாட்டு தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனம், அதன் சில்லரை விற்பனை வணிகத்தில், 40 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனத்திற்கு விற்க ஆர்வமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தன்னுடைய ஜியோ பிளாட்பார்ம் வணிகத்தில் பேஸ்புக், குவால்கம் போன்ற பல முக்கிய நிறுவனங்களின் முதலீடுகளை திரட்டியது. அதைத் தொடர்ந்து தற்போது சில்லரை விற்பனை வணிகத்திலும் முதலீடுகளை திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.இதன் காரணமாக, தற்போது அமெரிக்காவை சேர்ந்த ‘சில்வர் லேக் பார்ட்னர்ஸ்’ என்ற நிறுவனம், ரூ.7,500 கோடியை, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸில் முதலீடு செய்துள்ளது.

சில்வர் லேக்கை தொடர்ந்து கே.கே. ஆர் என்ற நிறுவனமும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸில் 150 கோடி டாலர் முதலீடு செய்ய போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சூழ்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனத்திடம் தன் 40 சதவீத பங்குகளை விற்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து விசாரித்த போது ‘‘அமேசானுக்கு, 40 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியில் ரிலையன்ஸ் இறங்கி இருக்கிறது. இதன் மூலம், 20 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட, 1 லட்சத்து, 48 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். அமேசான் நிறுவனமும் ரிலையன்சில் முதலீடு செய்வது குறித்து பேச்சு நடத்தி வருகிறது’’ எனத் தகவல் கிடைத்து உள்ளது .இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் மற்றும் அமேசான் நிறுவனம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் முதலீட்டு நிறுவனங்களும், ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.குறிப்பாக அபுதாபி முதலீட்டு ஆணையம், சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் ஆகியவை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லரை வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அபுதாபி முதலீட்டு ஆணையம், 5,500 கோடி ரூபாயும்; சவுதி முதலீட்டு நிதியம், 11 ஆயிரத்து, 100 கோடி ரூபாயும் முதலீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவை தவிர, அபுதாபியை சேர்ந்த,’முபதாலா’ நிறுவனமும் முதலீடு செய்வது குறித்த யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.