மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் இதோ!

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ்குமார், எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதைய நிலையில் ஒரு எம்பி வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவைப்படும். எனவே, 159 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள திமுக 4 எம்பிக்களை பெற முடியும். இதேபோல், 75 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள அதிமுக கூட்டணிக்கு 2 எம்பிக்கள் கிடைக்கக் கூடும்.வெற்றிபெறும் வாய்ப்பு உள்ள நிலையில், ஒரு இடத்தை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்துள்ளது திமுக.

மீதமுள்ள மூன்று இடங்களில் போட்டியிடுபவர்களின் பெயரை திமுக தலைவம் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, திமுக சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிட தஞ்சை கல்யாண சுந்தரம், கிரி ராஜன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரின் பதவிக்காலம் ஓராண்டுக்குள் நிறைவு பெற்றதால் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்ற குறையை போக்க வடக்கு மாவட்டச் செயலாளரான கல்யாண சுந்தரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக மாநிலங்களவைத் தேர்தல்களின்போது ஒரு வழக்கறிஞருக்கு வாய்ப்பளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. வில்சன், என்.ஆர்.இளங்கோ என்ற அந்த வரிசையில் சட்டத்துறை செயலாளர் கிரிராஜனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவைப் பொறுத்தமட்டில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பதைத் தீர்மானிப்பதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.