October 17, 2021

வங்கிகளுக்கு ரூ.50,000 கோடி நிதி : ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

தேதோ வகையில் தடுப்புகள் போட்டாலும் அதிகரித்துக் கொண்டே போகும் கோவிட் 19 இரண்டாம் அலையை எதிர்கொள்ள நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.50,000 கோடி வழங்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். அத்துடன் கோவிட் 19 கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள், சிறு, குறு, நடுத்தர வர்த்தகர்கள் உள்ளிட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் சக்தி காந்த தாஸ் வெளியிட்டார்.

நாடெங்கும் கோவிட் 19 தொற்றின் 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.06 கோடியாக உயர்ந்துள்ளது. கோவிட் 19 தொற்று காரணமாக இந்தியாவில் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறைகளில் கடும் நிதி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளால் சிறு, குறு, நடுத்தர வர்த்தகர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவிட் 19 தொற்றால் திண்டாடி வரும் நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்ய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்தி காந்த தாஸ், “இந்திய ரிசர்வ் வங்கி வளர்ந்து வரும் கோவிட் 19 நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கோவிட் 19 வைரஸ் தொற்று அதிகரிப்பால் பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது. இதை சமாளிக்க ரிசர்வ் வங்கி தன் அனைத்து வளங்களையும் அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக குடிமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் இரண்டாவது அலைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும்’’ என தெரிவித்தார்.

மேலும் கோவிட் 19 தொற்றை சமாளிக்கும் விதமாக சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மார்ச் 2022 வரை மேம்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி ரூ.50,000 கோடி பணப்புழக்கத்தை அறிவிக்கிறது என்று ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். மேலும் ரிசர்வ் வங்கியின் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் வெளியிட்டார் அதன் விவரம் :

ரிசர்வ் வங்கி 2022 மார்ச் 31 வரை 3 ஆண்டுகளுக்கு ரூ .50,000 கோடிக்கான ஒரு செயல்முறையைத் திறந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மருத்துவ வசதிகள், மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கு வங்கிகள் உதவும். வங்கிகள் விரும்பினால், இதற்காக ஒரு கோவிட் கடன் புத்தகத்தையும் உருவாக்கலாம்.

ரூ. 35000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் (GSAP) வாங்குவதற்கான இரண்டாம் கட்டம் மே 20 ஆம் தேதி தொடங்கப்படும். முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு உடனடி கடன்கள் மற்றும் சலுகைகளை வழங்கப்படும்.

ரூ .500 கோடி வரை சொத்துக்கள் கொண்ட எம்.எஃப்.ஐ.க்கள் முன்னுரிமைத் துறை கடனில் சேர்க்கப்படும். சிறு நிதி வங்கிகள் சிறிய நுண் நிதி நிறுவனத்திற்கு ரூ .500 கோடி கடன்களை வழங்க முடியும்.

சிறு நிதி வங்கிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ .10,000 கோடி எஸ்.எல்.டி.ஆர்.ஓ கடன் வழங்கப்படும். இதில் கடன் வாங்கும் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் என்ற வரம்பு இருக்கும். 2022 மார்ச் 31 வரை இந்த கடனுக்கு கால அவகாசம் கிடைக்கும்

தனிநபர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்கள், 2021 மார்ச் 31ம் தேதி வரை எந்த திட்டத்தின் கீழும் கடன் பெறாமல் இருப்பவர்கள் தீர்வு திட்டம் 2.0-ன் கீழ் ரூ.25 கோடி வரை கடன் பெற தகுதியுடைவர்களாக கருதப்படுவர்.

தீர்வு திட்டம் 1.0-ன் கீழ் மாற்றியமைக்கப்பட்ட கடன்களை பெற்ற தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்ளுக்கு கடன் தவணையை திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்பட்டது. தற்போது கடன் வழங்கிய நிறுவனங்கள் இந்த காலத்தை அதிகரிக்கலாம். மீதமுள்ள காலத்தை மொத்தம் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்”என்று சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.