October 25, 2021

வெற்றிப் பயணத்தின் சிறகை ஒடித்திருக்கும் றெக்க..

சுட்டுப்போட்டாலும் ஆக்ஷன் மட்டும் வரலைன்னா விட்டுடனும் இப்படி அடம்புடிச்சி பண்றேன்னு உசரத்துக்கு போற யதார்த்த ஹீரோ கேரியரை காலிபண்ணிக்கக் கூடாது விஜயசேதுபதி. முந்தா நாள் அடிச்ச போதை இன்னும் தெளியாத மாதிரியே ஒரு பொத பொத வீங்கிப்போனது மாதிரியான முகத்தோட ஹீரோயின் லட்சுமிமேனன். அறிமுக படத்துல எல்லாம் எவ்ளோ அழகா இருந்த லட்சுமி…!?

rekka oct 8

சரி… சரி… விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னாடி ஒருவரி கதைக்கு போகலாம்…

கதை: படிக்கிற வயசில் பாடம் சொல்லிக் கொடுத்த டியூஷன் டீச்சர் மாலாக்காவை காதலிக்கும் சின்னப்பையன். அந்த டீச்சரை ஊரே காதலிக்கிறது. காதல் கடுதாசிகளை எல்லாம் இந்த சின்னப்பையன்களிடம்தான் கொடுத்தனுப்புகிறார்கள். அந்த டீச்சருக்கு ஒரு டாக்டர் மீது காதல். திடீரென டியூஷன் டீச்சர் ஒரு கடிதத்தை சின்னப்பையனிடம் தந்து டாக்டரிடம் தரச் சொல்லிவிட்டு மாயமாகிறார். டாக்டர் பைத்தியம் ஆகிறார். இதில் பாதிப்படையும் சின்னப்பையன் வளர்ந்து பெரியவன்(விஜயசேதுபதி) ஆனதும் கண்ணில் சிக்கும் காதல் வரும் காதல் ஜோடிகளை எல்லாம் தூக்கி வந்து சேர்த்து வைக்கிறான். ஒரு கட்டத்தில் தன் வீட்டு கல்யாணத்தில் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக வில்லன் சொல்லும் பெண்ணை தூக்கி வருகிறான்.

அந்த வில்லனுக்கு இன்னொருவன் வில்லன் அவனை பழிவாங்க ஹீரோவை வைத்து அந்த பெண்ணை(ஹீரோயின்) தூக்கச் சொல்கிறான் இந்த வில்லன். ஆனால், ஹீரோ தூக்கி வரும் அந்த பெண் நிஜத்தில் ஹீரோவை காதலிக்கிறார். இது தெரியாமலேயே அவளை வில்லனிடம் விட்டு விட்டு வெளியேறும்போது ரவுடிகள் துரத்திவர உதவி கேட்டு ஒரு பெண் ஓடிவருகிறார். அதிர்ச்சியில் பார்க்கிறான் அது மாயமான டியூஷன் டீச்சர். வில்லனிடம் சிக்கிய அந்த பெண் காப்பாற்றப்பட்டாரா… டியூஷன் டீச்சர் மாயமானதால் பைத்தியம் ஆனவரும் டியூஷன் டீச்சரும் ஒன்று சேர்ந்தார்களா… இதுதான் விஜயசேதுபதி நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘றெக்க’ படம்.

நடிகர் விஜயசேதுபதி தமிழ் சினிமாவில் யதார்த்த கதைகளின் ராஜாவாகதானே வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை தேவையே இல்லாமல் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றுகிறேன் என்று காமெடி பீஸ் ஆக்கியிருக்கிறார் இயக்குனர். என்னதான் வில்லனிடம் ஆக்ரோஷம் காட்ட முயற்சித்தாலும் சேதுபதி உங்களுக்கு அது மட்டும் வரவே இல்லை… இனி இதுபோல முயற்சிகள் எல்லாம் உங்கள் கேரியருக்கு வேட்டு வைக்கும் ஜாக்கிரதை. பொதுவாக தான் நடிக்கும் படங்களின் கதையில் அதிக கவனம் செலுத்தும் ஹீரோக்களில் ஒருவராக இருந்த விஜயசேதுபதி இதில் மட்டும் ஏன் கோட்டை விட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம்.

ஒரு சினிமா எதையாவது ஒரு முடிவை நோக்கி போக வேண்டும். இது எதை நோக்கி போகிறது…. அரை டிரவுசர் போட்டு டியூஷனுக்கு போகும் வயசில் பாடம் சொல்லிக் கொடுக்கும் டியூஷன் டீச்சரை காதலிப்பதாக சொல்லும் கேவலமான செயலை நியாயப்படுத்துகிறாரா டைரக்டர்…

அல்லது டியூஷனுக்கு பாடம் படிக்க வந்த சின்னப்பையனிடம் தன் காதலனுக்கு கடுதாசி கொடுத்தனுப்பும் செயலை நியாயப்படுத்துகிறாரா இயக்குனர்…

அல்லது ஊரோ பயப்படும் கட்சித்தலைவர் மகளை முன்பின் முகம் அறியாத ஒருவன் வீட்டுக்குள் புகுந்து தூக்கி வருவதும்… தடுக்க வருபவர்களை ஒரே ஆளாக அடித்து பறக்கவிடுவதுதான் ஆக்ஷன் ஹீரோயிசம் என்கிறாரா இயக்குனர்….

இரண்டு வில்லன்களை உருவாக்க வேண்டும் என்று மட்டுமே டைரக்டர் யோசித்திருக்கிறார். அந்த இரண்டு வில்லனையும் எப்படி மோத விடுவது அவர்களுக்குள்ளான ஆக்ரோஷ வில்லத்தனத்திற்கான அழுத்தமான காரணங்கள் எதுவும் பெருசாய் இல்லை. தம்பியை கொன்றவனை பழிவாங்க கும்பகோணம் வில்லன் வருகிறான் என்றால் கோயம்புத்தூர் வில்லன் எப்ப பாத்தாலும் யாரையாவது அடித்து துவைத்து ரத்தமும் சதையுமாக கொன்று கொண்டே இருக்கிறான். இதுதான் ஆக்ஷன் படத்தின் லட்சணம் என்று இயக்குனருக்கு யார் சொல்லிக் கொடுத்தது…

கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டு வில்லன்களையும் ஹீரோ அடித்து துவைத்து போடுகிறார்… பறந்து பறந்து ஆக்ஷன் காட்ட முயற்சிக்கிறார். ஹீரோ போன பிறகு கும்பகோணம் வில்லன் தம்பியை கொன்ற கோயம்புத்தூர் வில்லனை வெட்டப்போகிறான்… என்ன மாதிரி டிசைன் கதை இது டைரக்டர்…

அழகுபதுமையாக இருந்த லட்சுமிமேனன் முந்தாள் அடித்த சரக்கின் போதை தெளியாத மாதிரியே வீங்கிப்போன முகத்தோடு படம் முழுக்க வருகிறார்… இடை இடையே ‘என்னை லூசு மாதிரி நினைச்சிடாதே’ என்று டயலாக் வேறு… படத்துலயே பாதியிலதான் ஹீரோயின் என்ட்ரி… ஒரு சில காட்சிகள் மட்டுமே… கெஸ்ட் ரோலுக்கு கூட தேறாத ஹீரோயின் கதாபாத்திரம்.

காமெடி பண்ணுகிறேன் என்று வந்திருக்கும் சதீஷ் பல நேரங்களில் கவுண்டர் பன்ச் டயலாக் பேசி காதில் ரத்தம் வர வைக்கும் சந்தானம் ஆக முயற்சித்து தோற்றுப் போகிறார்… காமெடியன் ரோல் என்று சொல்லிவிட்டு ஆக்ஷன் ரோல் பண்ண (டயலாக்கில் மட்டும்) முயற்சிக்கிறார்… ஹூஹூம்… இன்னும் நிறைய எதிர்பார்க்கிறாங்க சதீஷ்… இன்னும்…

நல்ல நடிகர் கிஷோர்… அவரை பைத்தியமாக்கி கதையையும் அப்படியே ஆக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.

ஆக்ரோஷமாக ஹீரோ சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது பேக்ரவுண்ட் இசையோடு சேர்த்து பாட்டு போட்டு ஆக்ஷன்(?!) படத்துக்கு புது டிரெண்ட் கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வழக்கம்போல அவருக்கு கொடுத்த அப்பா ரோலை கனகச்சிதமாக நடித்திருக்கிறார். இமானின் இசையை பொறுத்தவரை ‘கண்ண காட்டு போதும்’ பாடலை கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ரசிக்க முடியும்… கண்ணை திறந்தால் போதை தெளியாத வீங்கிப்போனது போன்ற லட்சுமிமேனின் முகம் குளோசப்பில் வந்து பாட்டின் ரசனையை காலி பண்ணிவிடும்…

ஒரே ஆறுதல்… சினிமா பிஆர்ஓ உதவியாளராக இருந்து பிஆர்ஓ ஆக இருக்கும் சக்திவேல் நடிகராக களம் இறங்கியிருப்பதுதான்… தம்பி சக்தி நல்ல எதிர்காலம் இருக்குடா…

யதார்த்த சினிமாவின் வெற்றி வியாபார பொருளாக இருக்கிற விஜயசேதுபதி என்ற கமர்ஷியல் ஹீரோ… நல்ல நடிகர் கிஷோர்… இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்… லட்சுமிமேனன் என ஒரு டீமை வைத்துக் கொண்டு பிரமாண்ட செலவில் ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதை அநியாயமாக கோட்டை விட்டிருக்கும் இயக்குனர் ரத்தினசிவா இனி முயற்சிக்கும் அடுத்த நகர்விலாவது நல்ல சினிமாவை தரட்டும்.

மொத்தத்தில் றெக்க படம் யதார்த்தத்தை மீறி சினிமாத்தனம் நிறைந்திருப்பதால் பறக்க வாய்ப்பு இல்லை. விஜயசேதுபதியின் வெற்றிப் பயணத்தின் சிறகை ஒடித்திருக்கிற இந்த றெக்க..!

கோடங்கி