September 18, 2021

அமெரிக்க அதிபரின் அகதிகள் விவகாரத்துக்கு ஆர்டருக்கு தடை போட்டது நியூயார்க கோர்ட்!

அமெரிக்காவில் அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு தற்காலிகமாக தடைவிதிக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். அகதிகளை குடியமர்த்தும் திட்டத்தின் செயல்பாடுகள் 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வழங்குவது 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த ஐ.நா. அகதிகளை வரவேற்கும் அமெரிக்காவின் நீண்ட பாரம்பரியம் தொடர வேண்டும் என வலியுறுத்தி இருந்த நிலையில் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று நியூயார்க், வெர்ஜினியா நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

trumb jan 29

டிரம்ப் பொறுபேற்ற ஒரு வாரத்தில் மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோரை தடுக்க 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்ப உத்தரவிட்டுள்ளார். அதற்கு மெக்சிகோ பணம் தர மறுப்பதால், அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது 20 சதவீத கூடுதல் வரி விதிக்க முடிவு எடுத்துள்ளார். அடுத்த அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்திருக்கிறார்.

உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை போட்டுள்ளார். அதாவது, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் சிரியா அகதிகள், அமெரிக்காவில் நுழைய முடியாது. அடுத்து, ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நாடுகளைப் பொறுத்தமட்டில் தூதரக ரீதியிலான ‘ராஜ்ய விசா’ மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். மற்றபடி தனி நபர்களுக்கு விசா வழங்கப்படாது.

இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, ‘‘மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நுழைய விடாமல் தடுப்பதே இதன் நோக்கம்’’ என்று குறிப்பிட்டார்.இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை ஈடுபட்டது. இந்த தடை உத்தரவு காரணமாக நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட அமெரிக்க விமான நிலையங்களில் நேற்று தரையிறங்கிய 300-க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து அமெரிக்க மனித உரிமை அமைப்பு சார்பில் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டோன்லே, 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகளை நாடு கடத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

இதேவிவகாரம் தொடர்பாக வெர்ஜினியா மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, அடுத்த 7 நாட்களுக்கு அகதிகள், சுற்றுலா பயணிகளை வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட்டார். அமெரிக்க ஜனநாயகத்துக்கு நீதிமன்றங்கள் அரணாக இருக்கும் என்று நம்புவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே அமெரிக்கா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு அதிபர் ட்ரம்புக்கு எதிராக கோஷமிட்டனர். இந்தப் போராட்டம் வலுவடைந்து வருகிறது.இதேபோல அமெரிக்காவில் வசிக்கும் மெக்ஸிகோ மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்களும் ட்ரம்புக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.