அயல் மொழி கற்பதற்கான அருமையான இணையதளம் – ரீடினி!
’ரீடினி’ ( https://readini.com/) இணையதளம் இப்போது தான் அறிமுகம் ஆகியிருக்கிறது. இன்னமும் முழு வீச்சில் உருவாகாமல் ஆரம்ப நிலையில் இருக்கிறது என்பதை மீறி இந்த தளத்தை அருமையான தளம் என வர்ணிக்கலாம். இதன் அடிப்படை கருத்தாக்கம் அத்தனை அற்புதமாக இருப்பதே காரணம். வாசிப்பின் மூலம் பயனாளிகள் அயல் மொழி ஒன்றை கற்றுக்கொள்ள உதவும் வகையில் இந்த தளத்தின் கருத்தாக்கம் அமைந்துள்ளது.
அயல் மொழியை கற்றுக்கொள்ள உதவும் இணையதள பிரிவில் டுலிங்கோ உள்ளிட்ட பல இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன. அயல் மொழி கற்பதை புதுமையாக அணுகும் தளங்களும் கூட இருக்கின்றன. எனினும், இதுவரை இல்லாத புதுமையாக ரீடினி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலக்கிய வாசிப்பு மூலம் அயல் மொழியை கற்றுக்கொள்ளும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது. பயனாளிகள் தாங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை தேர்வு செய்து அதை வாசிக்க முயற்சிப்பதன் மூலம் அந்த மொழியை கற்றுக்கொள்ள துவங்கலாம்.
கற்றுக்கொள்ள இருக்கும் அயல் மொழியில் உள்ள இலக்கிய புத்தகத்தை அந்த மொழி தெரியாதவர்கள் எப்படி வாசிப்பது எனும் கேள்விக்கு பதிலாக மொழிபெயர்ப்பு அமைகிறது. ஆம், ரீடினி இணையதளம், பிற மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் மற்றும் மூல மொழியில் எழுதப்பட்ட புத்தகம் இரண்டையும் அருகருகே அளித்து, பயனாளி தான் அறிந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தை வாசிக்க வழி காட்டுகிறது.
அது மட்டும் அல்ல, புத்தகங்களை ஒலி வடிவிலும் கேட்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே வார்த்தைகள் உச்சரிப்பை கேட்கலாம். மேலும், வார்த்தைகளுக்கு பொருள் காண்பதற்கான இணைய அகராதி வசதியும் இருக்கிறது. ஆக, ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சொற்களை நினைவில் நிறுத்திக்கொள்ள பிளேஷ்கார்டு வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
கணவன் – மனைவி ஜோடி இந்த தளத்தை உருவாக்கியுள்ளதாக ஹேக்கர்நியூஸ் பகிர்வு மூலம் அறிய முடிகிறது.
இப்போதைக்கு ஆங்கிலம்- ஸ்பானிஷ், போலிஷ் உள்ளிட்ட ஒரு சில மொழிகளே இருக்கின்றன. ஆனால், உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உதவும் வகையில் இந்த தளத்தின் கருத்தாக்கம் விரிவாக்கப்படலாம். இரு மொழி புத்தகங்கள் அவற்றின் ஒலி புத்தகம் மற்றும் ஆன்லைன் அகராதி என அமைந்துள்ள இந்த தளத்தின் மைய கருத்து அருமையாக தானே இருக்கிறது!