October 22, 2021

இளவயதினரின் மனநலக்குழப்பத்திற்கு தீர்வு சொல்லும் ஹெல்ப்லைன்!

நம் நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 ஆயிரத்து 934 பேர் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஸ்வாகா எழுத்துப்பூர்வமாக பதிலளித் தில், கடந்த 2015ஆம் ஆண்டு, தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக, தமிழகத்தில் 955 மாணவர்கள் தற்கொலை செய்திருப்பதாக குறிப்பிட்ட்டிருந்தார். ஆந்திராவில் 360 மாணவர் களும், கேரளாவில் 374 பேரும், தெலங்கானாவில் 491 பேரும், கர்நாடகாவில் 597 பேரும் மற்றும் புதுச்சேரியில் 17 பேரும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவில் அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரத்து 230 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாகக் தெரிவித்தார். தற்கொலை செய்தவர்களில், 18 வயதிற்கு குறைவானவர்கள் ஆயிரத்து 360 பேரும், 30 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆயிரத்து 183 பேரும் உள்ளதாகவும் அவர் கூறினார். தற்கொலைக்கு தேர்வில் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து விசாரித்த போது பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது என்றும் தெரிய வந்தது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் ‘தி திஷா ஹெல்ப்லைன் ‘ உடன் கைகோர்த்துள்ளார் நடிகர் விஷால். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும் நடிகர் விஷால், இதுபோன்ற பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், “உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை, நடக்க முடியவில்லை, ஏன்? நிற்கக்கூட முடியவில்லை. என்ன முடிவெடுப்பீர்கள்? முதலில் நாம் செய்யும் விஷயம், மருத்துவரை அணுக வேண்டும் என்று தானே? ஆனால் உளவியல் பிரச்சனைக்கு நாம் மருத்துவரைப் பற்றி சிந்திப்பதில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார். நம் வீட்டு குழந்தைகள், அண்டை வீட்டு குழந்தைகள், நாம் நேசிக்கும் குழந்தைகள் மற்றும் உதவி தேவைப் படும் குழந்தைகள் ஆகியோர்களுக்கு நம்மால் உதவ முடியும். மனநல குறைகளுக்கு சிகிச்சை உண்டு. மேலும் அவற்றை முற்றிலும் தடுக்கவும் முடியும். சரியான நேரத்தில் உதவுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். எப்போதுமே குழந்தைகள் சில காரணங்களால் அவர்களின் பிரச்சனைகளை பெற்றோரிடம் சொல்வதில்லை. அதற்காக தான் ‘தி திஷா ஹெல்ப்லைன்’ இருக்கிறது. குழந்தைகளின் கவலைகளுக்கு ஆதவளிக்கும் ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறது.

ஆகையால் நீங்கள் துன்பத்தில் இருந்தாலோ, அல்லது வேறு ஒருவர் துன்பத்தில் இருப்பதை அறிந்தாலோ திஷாவின் இலவச எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்க உறுதி செய்வார்கள்”என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.