மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி அதிகார பனிப்போர்?
மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பனிப்போர் இறுகிவரும் இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் 7-வது பிரிவை மத்திய அரசு செயல்படுத்தலாம் என்ற சந்தேகம் அரசின் நிதித்துறைகளில் ஏற்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும், ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்ட நாளிலிருந்து இந்தச் சட்டத்தை அமல்படுத்தியதில்லை. இந்தச் சட்டப்பிரிவின்படி, ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தை மத்திய இயக்குநர்கள் குழுவிடம் மத்திய அரசு ஒப்படைக்கும். அதில், ரிசர்வ் வங்கி கவர்னரும் அங்கம் வகிப்பார். அதிகபட்சம் 4 துணை கவர்னர் களும் மத்திய அரசு நியமிக்கும் 4 இயக்குநர்களும் ஒரு அதிகாரியும் இடம் பெறுவார்கள்.
இதனிடையே அரசின் உத்தரவுகளை அமல்படுத்த ஆர்பிஐயின் சட்டப்பிரிவு 7- ஐ பயன்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணபுழக்கத்தை அதிகரிப்பது, வங்கிகள் மீதான அழுத்தத்தை குறைப்பது, பொருளாதார வளர்ச்சியை பெருக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகிறது.
ஆனால் ரிசர்வ் வங்கி இதற்கு செவி சாய்க்கவில்லை. இதன் காரணமாக ஆர்பிஐ சட்டப்பிரிவு 7- ஐ பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்பிஐ-யின் 83 ஆண்டு கால வரலாற்றில் எந்த அரசும் சட்டப்பிரிவு – 7 ஐ பயன்படுத்தியதில்லை. இந்த தகவல் குறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், சட்டப்பிரிவு 7 -ஐ பயன்படுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பான ஸ்வதேஷ் ஜக்ரன் மஞ்ச்சின் துணை ஒருங்கி ணைப்பாளரான அஷ்வனி மஹாஜன் அளித்திருக்கும் பேட்டியில், “ உர்ஜித் படேல், மத்திய அரசுடன் இணக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லையென்றால், பதவி விலகலாம். தேசபக்தி பார்வை கொண்ட திறமையான ஆட்களை ரிசர்வ் வங்கி ஆணையத்தில் நியமிக்கப்பட வேண்டும் ” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.