தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: அமைச்சரிடம் ரிசர்வ் வங்கி சார்பில் வருத்தம்!- வீடியோ

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: அமைச்சரிடம் ரிசர்வ் வங்கி சார்பில் வருத்தம்!- வீடியோ

மிழக தலைநகர் சென்னையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி சார்பில் இன்று வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி ஊழியர்களிடம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஒரு சில அதிகாரிகள் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று பாடினர். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பலர் எழுந்து நிற்காமல் அமர்ந்து கொண்டே இருந்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், இருக்கையில் அமர்ந்து இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் ‘ஏன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மறியாதை செய்யவில்லை’ என்று கேட்டனர். அதற்கு அமர்ந்து இருந்த அதிகாரிகள், ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளதா என்று அடாவடி வாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டதுகூட, அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா? என மீண்டும் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, அடாவடி வாதம் செய்த அதிகாரிகள் மெதுவாக நகர்ந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தமிழ் தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டியதுடன், அரசு உத்தரவை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.என்.எம். சாமி, தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத அதிகாரிகள் சார்பில் வருத்தம் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!