March 22, 2023

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு!- ரிசர்வ் பேங்க் கவர்னர்

கொரோனா தொற்றானது, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 100- நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராவிட்டாலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இச்சூழலில் எஸ்பிஐ பேங்கிங் மற்றும் பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசியது:-–

கொரோனா தொற்று, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றிற்கு எதிர்மறை விளைவுகளை உருவாக்கியுள்ளது.

கொரோனா தொற்றானது, நமது பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைப்பை பாதுகாக்கவும், பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 2019 முதல், ஒட்டுமொத்த அடிப்படையில், கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்தோம். பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையை சமாளிப்பதற்காக இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அவர் கூறினார்.