September 29, 2021

ச்சிச்சீ.. இந்த ரிசர்வ் பேங்க் கவர்னர் போஸ்ட் புளிக்குது! – ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கான பதவி நீட்டிப்பை தனக்கு வழங்க வேண்டாம் என்றும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கே திரும்புகிறேன் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு போட்டியில் இருக்கும் 6 போட்டியாளர்கள் மத்தியில் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி முன்னிலை பெற்று உள்ளார் என்று உயர்மட்ட அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன

rbi

ரிசர்வ் வங்கி ஆளுநராக கடந்த 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ரகுராம் ராஜனின் பதவிக்காலம், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இந்தச் சூழலில், ரகுராம் ராஜனுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி அண்மைக்காலமாக வலியுறுத்தி வந்தார்.

மேலும், இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதினார். அதில், “ரகுராம் ராஜன் பெயரளவுக்குதான் இந்தியர்; மனதளவில் அவர் ஓர் அமெரிக்கர். இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். எனவே, ரகுராம் ராஜன் வகித்து வரும் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியைப் பறிக்க வேண்டும்; இரண்டாவது முறை அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஊகங்களுக்கு ரகுராம் ராஜன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தனது பதவிக்காலம் குறித்து ரிசர்வ் வங்கியின் சக பணியாளர்களுக்கு அவர் சனிக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தில் அவர், “ரிசர்வ் வங்கி ஆளுநராக எனது மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவுபெறப் போகிறது. அது நிறைவடைந்தவுடன், அரசிடம் முறையாக ஆலோசனை நடத்திவிட்டு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியராக மீண்டும் பணிக்குத் திரும்புவது என்று முடிவு செய்துள்ளேன்.

சவால்கள் நிறைந்த காலம்: ரிசர்வ் வங்கியில் ஆளுநராக நான் பொறுப்பேற்றபோது, நாட்டின் பொருளாதார நிலைமை சுமுகமாக இல்லை. பணவீக்கம் அதிகமாக இருந்தது. ரூபாயின் மதிப்பில் தினமும் ஏற்ற-இறக்கம் காணப்பட்டது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தது. இவற்றைச் சமாளிப்பதற்காக, இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் இங்கு முதலீடு செய்ய ஏதுவாக சிறப்பு சாளர முறை ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னரே, நாட்டின் பொருளாதார நிலை சற்று சீரானது. இப்போது, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக நம் நாடு உருவெடுத்துள்ளது.

போதிய முன்னேற்பாடுகள்: இன்றைய சூழலில் இந்தியா சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும்பட்சத்தில், அது இந்தியப் பொருளாதாரத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை ரிசர்வ் வங்கி செய்துள்ளது.

நிறைவடையா பணிகள்: எனினும், இரண்டு முக்கியமான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. ஒன்று, பணவீக்கத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவது; மற்றொன்று, வாராக் கடன் விவகாரத்துக்கு முடிவு கட்டுவது. எனக்குப் பிறகு இந்தப் பதவிக்கு வருபவர், இந்த விவகாரங்கள் உள்பட அனைத்தையும் திறம்பட கையாள்வார் என நம்புகிறேன்” என அந்தக் கடிதத்தில் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அப்பதவிக்கான 6 போட்டியாளர்கள் மத்தியில் எஸ்.பி.ஐ. தலைவர் அருந்ததி முன்னிலை பெற்று உள்ளார் என்று உயர்மட்ட அரசு தகவல்கள் கூறுவதாக ஆங்கில செய்தி சேனல் செய்தி வெளியிட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு புதியவர்களை நியமிப்பதில் நீண்ட பட்டியல் உள்ளது. ஆர்.பி.ஐ. துணை கவர்னர் உர்ஜித் படேல், முன்னாள் துணை கவர்னர் சுபிர் கோக்ரான், பொருளாதார நிபுணர்கள் ராகேஷ் மோகன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோரது பெயர் அடங்கிய பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. உலக வங்கி தலைமை பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசு பெயரும் அடிப்படுகிறது.