August 12, 2022

ராட்சசி – விமர்சனம்!

தமிழில் வெளியாகும் வார இதழ்களில் அவ்வப்போது ஆக்கப்பூர்வமான தொடர்களும் வருவது உண்டு. அப்படி ’கற்க கசடற’ என்ர தலைப்பில் பாரதி தம்பி என்ற பத்திரிகையாளர் ஒரு தொடர் எழுதினார்.. அதில் ஏதேதோ காரணங்களால் நலிவடைந்து வரும் தமிழக அரசுப் பள்ளிகளின் நிலை, இது குறித்து மத்திய,மாநில அரசுகளின் போக்கு. அப்பள்ளி சின்னஞ்சிறு மாணாக்கர்களின் அபிலாஷை, அதே சமயம் அரசு பள்ளி ஆசிரியர்களின் மனநிலை, இன்றைய பாடத்திட்டம், தாய் மொழி வழிக்கல்வி, தனியார் மயம் என்று கல்வி என்ற மூன்றெழுத்தை பிரித்து மேய்ந்து அலசி ஆராய்ந்து சகல சமாச்சாரங்களையும் ஓப்பனாக அதே நேரத்தில் சுவைபட சொல்லியதால் மாபெரும் வரவேற்பை பெற்றது. அப்படி பாரதி தம்பியால் ஹிட் அடித்த எஜூகேசனின் எழுத்து  வீச்சை சினிமாவாக்கி அசத்த முயன்றிருப்பதுதான் ‘ராட்சசி’ திரைப்படம்.

ஆம்.. ஏற்கெனவே தயாரான வசனங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கதை நாயகி ஜோ. ஒரு அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்ற வருகிறார். அதிலும் ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள பள்ளி என்றால் எப்படி ஏனோ, தானோவென்று இருக்குமோ அப்படி இருக்கிறது. கூடவே அப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் அத்தனை பேரும் ரொம்ப தப்பானவர்களாக இருக்கிறார்கள். போதாதற்கு அந்த கிராமமும் ஜாதி வெறி பிடித்து நாக்கை துருத்தியபடி வலம் வரும் ஜனங்கள் நிறைந்ததாக இருக்கிறது. எல்லாவற்றும் மேலாக அந்த  அரசு பள்ளியை அழிக்கும் நோக்கில் ஒரு பிரைவேட் ஸ்கூல் மினுமினுக்கிறது. இவைகள் அத்தனையையும் அரை நொடி கண் சிமிட்டலில் ஆறேழு பேரா வசனங்களில், அவ்வப்போது அடங்க மறுத்து அத்துமீறி ஆக்ரோஷம் காட்டி அந்த ஒற்றை அரசு பள்ளியை அண்ணாந்து பார்க்க வைப்பதுதான் படத்தின் மெயின் ஸ்டோரி

ஏற்கெனவே கல்வி சமாச்சாரங்களில் உண்மையான அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன் பல பணிகளை செய்து வரும் சிவகுமார் மருமகளுக்கு ஏற்ற ரோல் இது.. காஸ்ட்யூம், நடை, உடை, பாவனைகளில் மிகக் கவனம் செலுத்திய ஜோ-வின் நடிப்பில்தான் கொஞ்சம் மிகை தெரிகிறது. என்னதான் அவர் முன்னாள் ஆபீசராக இருந்தாலும் ஜாதி வெறிப் பிடித்தவர்களை விரட்டும் போக்கெல்லாம் இது போன்ற சினிமாவில் மட்டுமே யோசிக்க இயலும்.

ஸ்போர்ட்ஸ் டீச்சராக வரும் சத்தியராஜ், உதவி தலைமை ஆசிரியராக வரும் கவிதாபாரதி, தனியார் பள்ளி நிறுவனராக வரும் ஹரீஷ் பேரடி, அரசு ஊழியராக வரும் செந்தில் குமரன் போன்றோர் நிறைவாக தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். பூர்ணிமா பாக்யராஜ் ரோல் வேஸ்டோ என்று யோசித்துக் கொண்டிருகும் போதே அவருக்கென என்று ஒரு முக்கியக் காட்சியை வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர் கேரக்டர் வீண்தான்..

ஆனாலும் சினிமா என்பதே பொழுது போக்கு என்பதையும் தாண்டி சமூக பிரஞ்ஜையை ஊட்டும் இந்த ராட்சசி ஒரு ஃபேமிலி எண்ட்ர்டெயின்மெண்ட்தான். அதிலும் பக்கத்துச் சீட் ரசிகர் சொன்னது போல் இதே மாதிரி ரெண்டு மூனு படம் வந்திருந்தாலும், இது மாதிரியான சப்ஜெக்டுகளோட இன்னும் ந்எத்தனை படம் வேண்டுமானாலும் வரலாம், அதை மக்களும் கொண்டாடலாம் என்று சொல்லும் அளவுக்கு படத்தில் ஏகப்பட்டநடப்பு விஷயங்களை அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் கள். ஆனால் அப்படியான கூர்மையான வசனங்களுக்கு மெனெக்கெட்ட அளவு வலுவான திரைக் கதையை அமைக்க தவறி விட்டதால் செண்டம் வாங்க வேண்டிய ராட்சசி பாதி கிணறுதான் தாண்டியது போல் ஆகி விட்டது. அதாவது முழுப் படத்தைப் பார்த்து விட்டு வெளியேறும் போது சடாரென நம் வீட்டு தண்ணீர் பிரச்னைதான் நினைவுக்கு வருகிறது. இந்த ராட்சசி சினிமாவின் சீன்கள் அல்லவா மனத்திரையில் சில நிமிடங்களாவது ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.. அது மிஸ்ஸிங்.

ஆக ராட்சசியை வைத்து ஆட்சி செய்ய தவறி விட்டார்கள்’’

மார்க் 3/5