அண்ணாச்சிக் கடைகளில் கூட கிடைக்கும் எலி பேஸ்ட்-க்கு தடை!-தமிழக அரசு முடிவு!

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் அண்மை காலமாக  எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனைத் தடை செய்வதற்கான உரிய  நடவடிக்கைள் எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

என்னடா இந்த பொல்லாத வாழ்க்கை என்ற சலிப்பு மற்றும் விரக்தியின் உச்சத்தில், உலகில் தொடர்பை அறுத்துக்கொள்ள முற்படும் மனிதர்களில், மிகப்பெரிய கேள்வியாக எழுவது, எப்படி இறப்பது என்பதுதான். விழிப்புணர்வு ஏதுமற்ற மனநிலையில், தங்கள் இன்னுயிரை இமைப் பொழுதில் போக்கிக்கொள்ள, தூக்கில் தொங்குதல், மலையில் இருந்து குதித்தல், நீரில் மூழ்குதல், மின்சாரம் பாய்ச்சிக்கொள்ளுதல், ரயில் அல்லது வாகனங்களில் பாய்ந்து கொள்ளுதல் என தற்கொலை முறைகளின் பட்டியல் நீள்கிறது. இருப்பினும் விஷம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கைதான் மிக அதிகம். உலகம் முழுவதும் 30 சதவீத மக்கள் நச்சு மருந்து அருந்தி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். இதில் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும், ஆசிய நாடுகளில் வசிக்கும் மக்களே விஷம் குடித்து சாகின்றனர். ஏனெனில் விஷமருந்துகள் எளிதாக கிடைக்கிறது. மளிகை கடைகளில் இத்தகைய மருந்துகள் தாராளமாக கிடைக்கிறது. இதில் மிக முக்கியமானது எலி மருந்துதான். பேஸ்ட் வடிவிலும், கேக் வடிவிலும் விற்கப்படுவதால், தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களின் முதல் தேர்வு எலிமருந்தாக இருக்கும். பெட்டிக்கடைகளுக்கு சென்று வாங்கி வந்துவிடலாம்.

அமெரிக்காவில் 1947ம் ஆண்டு முதல் எலிகளை கொல்வதற்காக ஜிங் பாஸ்பைடு என்ற வேதிப் பொருள் எலி மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் உலகம் முழுவதும் 80 வகையாக எலி மருந்துகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதனை எலிகள், அணில், பெருச்சாளி ஆகியவற்றுக்கு பிடித்த பட்டர் மற்றும் உணவு பொருட்களில் கலந்து வைக்கலாம். வீட்டின் உள்ளே திண்ணும் எலி வெளியே சென்று நிச்சயம் சாகும், 100 சதவீதம் எலிகளின் இறப்புக்கு உத்தரவாதம். அதே நேரத்தில் மனிதர்களும் இதில் இருந்து தப்புவதில்லை. எலிகளுக்காக வைக்கப்பட்ட விஷம் தடவப்பட்ட கேக்கை சாப்பிட்ட மாணவன் பலி, எலி மருந்து கேக்கை, திண்பண்டம் என நினைத்து தின்ற குழந்தை பலி என்ற பரிதாபத்துக்குரிய செய்திகள் அடிக்கடி செய்திகளில் வெளியாகி வருகிறது. மாத்திரை வடிவில் சாக்லேட், கேக், பேஸ்ட் வடிவில் எலிமருந்து விற்பது மிகவும் தவறானது. உளவியல் ரீதியாக மக்கள் தினமும் பயன்படுத்தும் பேஸ்ட், கேக் வடிவில் விஷ மருந்துகளை உற்பத்தி செய்வது, பயன்படுத்துவதால் தவறுதலாக குழந்தைகள் சாப்பிட்டு இறக்கக்கூடிய அபாயம் உள்ளது. எலிகளும் பாலூட்டி வகையை சார்ந்தது, அதனை கொல்வதற்காக பயன் படுத்தப்படும் ஜிங் பாஸ்பைடு மருந்தும், அதே மாதிரியான விளைவுகளையும், உயிர் சேதத்தையும் மனிதர்களுக்கு ஏற்படுத்தும், சமீபகாலமாக அரசு பொது மருத்துவமனையில் எலிபேஸ்ட் அல்லது மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்புப் பிரிவு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் டயாலிசஸ் செய்வோரின் சதவீதம் 2ல் இருந்து 19ஆக உயர்ந்துள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொடிய விஷத்தன்மை கொண்டுள்ளதால் எலி பேஸ்ட்டை உண்டு தற்கொலை முயற்சி செய்வோரை காப்பாற்றுவது மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது . அதனால் எலி பேஸ்ட்டிற்கு தடை விதிப்பது குறித்து பல துறைகளைச் சார்ந்தவர்களிடம் கலந்தலோசிக்கப்பட வேண்டியுள்ளது என்றும் அதற்கு தடை விதிக்க தமிழக அரசிடம் சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

எலி மருந்து சாப்பிட்டால், சிறுநீரக செயலிழப்பு, மிக தீவிரமான மஞ்சள் காமாலை ஏற்படும். தொடர்ந்து உடலில் பல உறுப்புகளின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும். குறிப்பாக நமது உடலில் மிகப்பெரிய தொழிற்சாலையாக இயங்கும் கல்லீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், நிலைமையை சிக்கலாக்கி விடும். இதன்காரணமாக ரத்தம் உறையும் தன்மை இல்லாமல் போகும். மூளை, நுரையீரலில் ரத்தம் கசியும். இதனை தொடந்து உறங்கிய நிலையிலே கோமாவுக்கு சென்றுவிடுவார். எல்லா விஷ மருந்துகளும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனை பெரியது, சிறியது என்ற வட்டத்துக்குள் அடக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.