December 1, 2021

தந்தி டிவி-யில் இருந்து பாண்டே விலகியது ஏன்?

தமிழகத்தில் தனிப் பெரும் பலம் வாய்ந்த தந்தி தொலைக்காட்சியில் இருந்து அதன் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே விலகியதாகச் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவிய நிலையில் சமூக வலைத்தளங்களில் ரங்கராஜ் பாண்டே -வே விவாத பொருளாகி விட்டார். செய்திகளைக் கையாள்வதில் நிர்வாகத்திற்கு முரணாகச் செயல்பட்டதால் “தந்தி டிவி யின் தலைமைச் செய்தியாசிரியர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார் பாண்டே” என்ற வாட்ஸ் – அப் எங்கும் வட்ட மடித்துக் கொண்டிருந்த சூழலில், தன் விலகல் குறித்து பாண்டே யூடியூப் சேனலில் ஒரு விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ நான் தந்தி டி.வி-யின் தலைமை செய்தி ஆசிரியர் என்ற பொறுப்பில் இருந்து விலகி உள்ளேன் என நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நான் தந்தி டி.வி-யில் இருந்து விலகி உள்ளேனே தவிர, பத்திரிகையாளர் என்ற என் கடமையில் இருந்து விலகவில்லை. தொடர்ந்து இதே துறையில் இருந்து, இது தொடர்பான பணிகளை மட்டுமே செய்ய உள்ளேன். நான் பதவி விலகியதற்கு எந்தப் பெரிய காரணமும், சிக்கலும், குழப்பமும் இல்லை. இது, நான் நீண்ட நாள்களாக யோசித்து எடுத்த முடிவுதான். தினசரி ஒரே வேலையைச் செய்வதால் ஏற்பட்ட அயர்ச்சியின் காரணமாக, அதிலிருந்து வெளியில் வரும் முயற்சிதான் இது. வேறு எந்தக் காரணமும் இல்லை.

முன்னதாக நான் வேலைசெய்த எந்தக் குழுமத்தையும் குறை கூறவில்லை. அவ்வாறு நான் கூறினால், அது மிகவும் அபாண்டமாக இருக்கும். அவர்கள் என்னை ராஜா போல் பார்த்துக் கொண்டார்கள். எனக்கு அங்கு எந்தக் குறையும் இல்லை. அனைத்துத் துறைகளிலும் சிறுசிறு பிரச்னைகள் இருக்கும். நானும் அதைச் சந்தித்துள்ளேன். ஆனால், என் ராஜினாமாவுக்கு அதைக் காரணமாகக் கூற முடியாது. அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடும் நோக்கிலும் என் ராஜினாமா உள்ளது. இதன்மூலம், குறைந்தது 6 பேருக்காவது மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கிறேன். என் ராஜினாமா முழுவதும் நல்லதுக்காகவே வித்திடும் என நினைக்கிறேன்” என்றவர் குறிப்பாக தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தனுக்குத் தன் பேச்சினிடையே நன்றி தெரிவித்தார்.

மேலும் “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோ ஒன்றை நோக்கி நகரும்போது, அடுத்தவர்களுக்கு ஒரு இடம் கிடைக்குமென்று நம்புகிறேன். இரண்டு ஆண்டுகளாக, ஆயுத எழுத்து நிகழ்ச்சியைச் செய்யவில்லை. அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று, எனது வாய்ப்பு களைக் குறைத்துக்கொண்டேன். எனது மூவ் காரணமாக, இப்போது குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்கு ஏற்றம் கிடைக்குமென்று நம்புகிறேன். இது தினமும் நடந்து கொண்டிருக்கும் ஒரு பணியிலிருந்து என்னை நானே விடுவித்துக்கொள்ளும் ஒரு முயற்சி. இது புரிதலோடு நிகழ்ந்து இருக்கும் ஒரு பிரிதல்” என்று அவர் தனது வீடியோவில் விளக்கமளித்துள்ளார். இதன் மூலமாகத் தான் ஒரு பெரிய ரிஸ்க்கை எடுத்திருப்பதாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தந்தி தொலைக்காட்சியிலிருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே, விரைவில் அவர் காவேரி தொலைக்காட்சியில் இணைய உள்ளதாகவும், காவேரி தொலைக்காட்சி விரைவில் ஏசியா நெட் தொலைக்காட்சி ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது பா.ஜ.க எம்.பி ராஜீவ் சந்திரசேகருக்கு சொந்தமானது ஏசியா நெட் குழுமம். இந்த குழுமத்தில் இருந்து உருவான ரிபப்ளிக் தொலைக்காட்சியில் அர்னப் கோஷ்வாமி உள்ளார். இதே பாணியில் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள ஏசியாநெட் தொலைக்காட்சிக்கு பாண்டே செய்தி ஆசிரியர் ஆவார் என்று கூறப்படுகிறது. அதாவது காவேரி தொலைக்காட்சியை ஏசியா நெட் விலை பேசுவதே பாண்டேவுக்காக தான் என்றும் அதில் ரஜினியும் இன்வெஸ்ட்மெண்ட் செய்வார் என்றும் சொல்லப் படுகிறது. இதில் 60:40 என்ற அடிப்படை பார்ட்னராக பாண்டேயுடன் இணைந்து அதனை நடத்த முடிவு செய்திருப்பதால்தான் பாண்டே தந்தி குழுமத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.