September 20, 2021

ராம்குமார் வழக்கிலிருந்து விலகறேன்.. விலகறேன்.. விலகறேன் : வக்கீல் பல்டி

சுவாதி கொலைவழக்கில் கொலையாளி ராம்குமாருக்காக ஜாமின் மனு தாக்கல் செய்த சென்னை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தான் ராம்குமார் வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ramkum july 7

தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.விலகலுக்கான நேரடி காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஆனாலும் குற்றவாளியின் ஒப்புதல் இல்லாமலேயே அவருக்காக இவர் வழக்கில் ஆஜராகியுள்ளார் என்று அரசுத் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் நேற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அது குறித்து இவருடைய விளக்கத்தை நீதிமன்றமும் கேட்டிருந்தது.

“நான் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். அவர்களுடைய வழக்கிற்காக நான் வாதாடுவேன். 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் கூட பெற்றுக் கொள்வேன். என்னுடைய ஜூனியர் வழக்கறிஞர்கள் சிலர் என்னை விட பணக்காரர்களாக உள்ளனர். சட்டக் கல்லூரியிலும், நீதிபதிகளாக போகிறவர்களுக்கும் நான் வகுப்பு எடுக்கிறேன்.

ராம்குமாரால் நான் நேரடியாக வழக்கில் ஆஜராக அழைக்கப்படவில்லை. என்னுடைய ஜூனியர் வழக்கறிஞர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் அந்த ஜாமின் வழக்கில் ஆஜரானேன்.

என்னுடைய 35 வருட வருமானத்தில் 50 சதவிகிதத்தை கோவில், சர்ச், பள்ளிக்கூடங்களுக்காக செலவிட்டு வந்துள்ளேன். நான் வசிக்கும் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்களுக்கான வழக்கில் நான் தான் உதவி வருகிறேன். இதுவரை கற்பழிப்பு வழக்கு எதற்கும் நான் ஆஜரானதில்லை. SC,ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான வழக்குகளில் நான் ஆஜராவதுண்டு. என்னுடைய முதல் மருமகன் கூட பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான். ராம்குமார் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன்.ஆனாலும் விதிமுறைகளின் காரணமாக ராம்குமாரின் வழக்கில் இனி ஆஜராவதில்லை என்று நானும், என்னுடைய ஜூனியர் வழக்கறிஞரும் முடிவெடுத்துள்ளோம்” என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக ராம்குமாருக்காக அவர் ஜாமின் தாக்கல் செய்ததற்கு அரசுத் தரப்பிலிருந்தும், பெண் வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஜாமினுக்கு எதிர்த்து ஒரு வக்கீல் ஆஜராவதாகவும் கூறப்பட்டது. எனவே ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார். ராம்குமார் தரப்பிலிருந்தும் தங்கள் சம்மதம் இல்லாமலேயே ஜாமின் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது