January 31, 2023

எரிபொருள் வரி: எப்போதும் “எரியும்” பொருளாதார வரி! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத பொருள் எதுவென்றால் பெட்ரோல், டீசல் எனும் எரிபொருட்கள். பொருளாதாரம் இயங்க இப்பொருள் தேவை. வேறுவகையான பொருள்களைக் காட்டிலும் இவை முக்கியமானவை. போக்குவரத்து இன்றி பொருளாதாரம் அசையாது. எனவே எரிபொருட்களை சில இலட்சம் கோடிகள் கொடுத்து இறக்குமதி செய்கிறோம். சுமார் 90% கச்சா எண்ணெய் இறக்குமதியில்தான் வருகிறது. நம் நாட்டில் ஹைட்ரோகார்பன் படிமங்கள் இருந்தாலும் அவற்றை எடுப்பது செலவு மிகுந்தது. சூழலியல் பிரச்சினைகள், அரசியல் போராட்டஙகள் காரணமாகவும் அவற்றை நெருங்க முடியவில்லை.

இந்நிலையில் கொரோனாவினால் இரண்டு முறை பொது முடக்கம் நிகழ்ந்து கடும் நிதிச் சுமையில் மக்கள் வாழும்போது எரிபொருள் விலை லிட்டருக்கு ₹100 ஐக் கடந்து போய் விட்டது. இதனால் மோடியின் செல்வாக்கும் சரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இது தற்காலிகமானதே. சர்வதேச கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்று தெரியவில்லை.

இன்றில்லை, என்றைக்குமே எரிபொருள் விலை ஒரு “எரியும்” பிரச்சினைதான். தேர்தல் சமயங்களில் அடங்கி விடும் விலை தேர்தலுக்குப் பின் மீண்டும் அதிகரிக்கும். இதை எந்த ஆட்சியும் சரி செய்ய நினைத்ததேயில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பொருளாதார சீர்திருத்தங்களின் சமயத்தில்தான் வரியளவும் கூடியது. ஒரு கட்டத்தில் மொத்த எரிபொருளின் விலையில் 50% வரி என்ற நிலை வந்து விட்டது. அப்போதுதான் இதன் சுமையை இறக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு அமைந்த போது எண்ணெய்ப் பத்திரங்களின் மூலம் திரட்டப்பட்ட கடனாக சுமார் ₹2 இலட்சம் கோடி திரும்ப வழங்கப்படாமல் இருந்தது. இதற்கான வட்டியும் செலுத்தப்பட வேண்டியிருந்தது. எனவே சர்வதேச கச்சா எண்ணெய் விலைக் குறைந்தாலும் அரசு கூடுதலாக இறக்குமதி வரி விதித்தது. இப்போது ஏறக்குறைய கடன் அடைக்கப்பட்டு விட்டது. ஏன் இப்போதும் அரசு வரிக் குறைப்பு செய்ய மாட்டேன் என்கிறது? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் முன் சில விஷயங்களை பார்க்க வேண்டும்.

எரிபொருட்கள், மதுவகைகள் மீதான வாட் வரி அப்படியே நீடிக்க வேண்டும் என்று மாநில அரசுகளே விரும்பின. எப்போது? கடந்த 2017 ஆம் ஆண்டு ஜி எஸ் டி நடைமுறைக்கு வந்தப்போது இக்கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இப்போது சில மாநில அரசுகள், தமிழ் நாடு உட்பட மாநில வரியைச் சற்று குறைத்துள்ளன. இதனால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நுகர்வோர் சிறிதளவு பயன் பெறுகின்றனர். ஆனால் பேரளவில் பயனில்லை ஏனெனில் மீண்டும் விலை உயரும். எனவே ஒட்டுமொத்தமாக ஜி எஸ் டியின் கீழ் எரிபொருளைக் கொண்டு வரலாமா எனக் கருதுவோரும் உண்டு.

ஜி எஸ் டியின் கீழ் எரிபொருள்களைக் கொண்டு வந்தால் அதிகபட்ச ஸ்லாப் ஆன 28% யிலேயே வரி விதிப்பார்கள். இப்போதிருக்கும் விலையை விட சிறிது குறையலாம். மேலும் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ₹6000 வழஙகுவது, கல்வி, கொரோனா தடுப்பூசிக்கான நிதி போன்றவற்றை சந்திக்க உப வரியும் தொடரும்.

என்ன செய்யலாம்? நீண்ட நாட்களாக எழுப்பப்படும் கேள்வி வளமைக் கொண்டோருக்கும், வறுமைக்கொண்டோருக்கும் ஒரே எரிபொருள் வரியா என்பதே. இன்றைக்கு ஃபாஸ்ட் டேக் செயலி மூலம் சுங்கச் சாவடிகளில் எந்த வகையான வண்டி போகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கிறார்கள். அதேபோல அச்செயலியை மேம்படுத்தி தனி நபர்கள், வணிக வாகனங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து வசூல் செய்யலாம். மேலும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு (அரசு வாகனங்கள் உட்பட) எவ்விதமான வரியும் கூடாது. ஆம்புலன்ஸ் போன்ற பொதுச் சேவை வாகனங்களுக்கும் வரிவிலக்கு தர வேண்டும். தனிநபர் (இரு சக்கர வாகனங்கள்) ஆட்டோகளுக்கு 5% வரியும், கார்களுக்கு 12% வரியும், சரக்கு வாகனங்கள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 18% வரியும், சொகுசு வாகனங்களுக்கு 28% வரியும் விதிக்கலாம். இத்துடன் உப வரிகளும் இணையும். சிக்கல் என்னவென்றால் மத்திய அரசு அளித்து வரும் நிதி உதவி திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறையும். இதனால் விலைவாசி குறையலாம்; மக்களின் சுமைக் குறைந்து சேமிப்பு அதிகரிக்கலாம் அல்லது நுகர்வு அதிகரிக்கலாம். இரண்டுமே நன்மைதான்.

ஆனால் மாநில அரசுகளுக்கு வரும் வருவாய் கணிசமாகக் குறையும். எனினும் அரசு வாகனங்கள், பொதுப் போக்குவரத்திற்கான செலவும் குறையும்.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பும் எழலாம். இந்திய அரசு 2030 ஆம் ஆண்டிற்குள் எரிபொருட்கள் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்த உறுதி ஏற்றுள்ளது. விலையைக் குறைத்தால் எரிபொருள் பயன்பாடு கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும். எனவே அரசு விலைக்குறைப்பையோ, ஜி எஸ் டியின் கீழோ கொண்டு வராது.

மாற்று என்ன? விலைக் குறைப்பு செய்தாலும் ஒவ்வொரு மாதமும் இத்தனை முறை, இவ்வளவு லிட்டர் எரிபொருள் என ரேஷன் கொண்டு வரலாம். குறிப்பிட்ட அளவிற்கு மேல் இரு மடங்கு விலை. இதன் மூலம் ஓரளவே பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும். பிறகு? கழிவு நீரிலிருந்து எரிபொருள் உருவாக்கும் திட்டம் பரிசோதனையில் உள்ளது. பிரதமர் விடுதலைப் பெருநாள் உரையில் ஹைட்ரஜன் அடுத்த எரிபொருள் புரட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதுவும் நடக்கலாம். இது தவிர எலக்டிரிக், சோலார் வண்டிகளை ஊக்குவிப்பதே அரசின் முன்னுள்ள ஒரே வழி.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு