December 8, 2022

ஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா? தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

சாமான்யராக இருந்தாலும் கூட உங்களது மொபைல் ஃபோனில் அறிமுகமற்ற நபர்கள் அனுப்பும் செய்தியின் சுட்டியை சுட்டினால் கிடைப்பது விபரீதம். நமது தகவல்கள் அனைத்தும் மற்றொருவரின் கைகளில். இதே போல ஆண்டிராய்ட் மொபைல்களை லாக் ஸ்க்ரீன் இன்றி பயன்படுத்தும் போது உங்களது தகவல்கள் அருகாமையில் நிற்கும் நபரின் செல்ஃபோனிற்கு சப்தமின்றி கடத்தப்படும் அபாயமும் உண்டு. இதெல்லாம் தனிநபர்கள் சந்திக்கும் பிரச்சினைகள். முன்பெல்லாம் முன்பின் தெரியாதவர்களிடமிருந்து அழைப்பு வந்தால் யார் வேண்டும் என்றே கேட்பார்கள். இப்போதெல்லாம் எதிர் முனையில் பேசுபவர் “ஏய்! போய்ச் சேந்திட்டியா?” என்று அதட்டல் போடும்போதுதான் தெரியும் தவறான நபர் என்று. மீண்டும் ஒருமுறை அழைத்து நம்மை வெறுப்பேற்றி ஊர்ஜிதம் செய்து கொள்ளும்போது கொலை வெறி வரும். வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா என்று எடுத்துக் கொண்டாலும் அதைவிட அதிகமான ஆபத்துக்கள் இப்போது வரத் தொடங்கியுள்ளன. பப்ஜி போன்ற விளையாட்டுகளை நீங்கள் தவிர்த்து விடலாம். ஆனால் உங்கள் மொபைல் ஃபோனை தொடர்ந்து உளவு பார்ப்பதும் அதை வைத்துக்கொண்டு உங்களுக்கு இம்சைத் தருவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களின் மொபைல் எண்கள் கசியும் போது அவர்கள் உடனடியாக எண்ணை மாற்றிவிடுகிறார்கள்.

ஆனாலும் நமது சமூகச் சூழலில் அடுத்தவர் விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் அல்லது கோளாறு தொடர்ந்து சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. குடும்பங்களில் ஒரே செல்ஃபோனை பயன்படுத்துவதும் கணவன் – மனைவி இடையேயான நன் நம்பிக்கை, குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற காரணங்களால் இயல்பாகிறது. மேலும் பல பரபரப்பு சம்பவங்களின் பின்னால் செல்ஃபோனும் முக்கிய காரணமாக இருக்கிறது. இப்படி ஒருவரின் மொபைல் பேச்சுக்களை, நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்கு தனி நபர்களுக்கு உரிமையில்லை. ஏன் அரசுக்கும் கூட உரிமையில்லை. அதனால்தான் உச்ச நீதி மன்றம் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 தை 2015 ஆம் ஆண்டு தீர்ப்பின் மூலம் ரத்து செய்தது. மேலும் அவ்வாறு ஒருவரின் நடவடிக்கைகளை உளவு பார்க்க வேண்டுமென்றால் மேற்கொள்ள வேண்டிய செயல்களை பட்டியல் இட்டுக் கொடுத்துள்ளது.

இதேபோல மாநில காவல்துறையினரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் என சந்தேகிக்கப்படும் நபர்களின் செல்ஃபோன்களை உளவு பார்க்க, ஒட்டுக்கேட்க சட்ட ரீதியிலான உரிமை வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றை மேலாதிகாரிகளின் அனுமதியுடனேயே செய்ய முடியும். ஆயினும் பிரச்சினை தனி நபர்கள் எவ்விதமான அச்சமும் இன்றி அடுத்தவர்களின் உரிமையில் தலையிடுவது என்பது அன்றாட நிகழ்வாகி விட்டது. தனி நபர்களுக்கு மட்டுமல்ல அரசும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பெகாசஸ் எனப்படும் இஸ்ரேலிய உளவுச் செயலி மூலம் பல பிரபலங்களின் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் நாடாளுமன்றத்தை உலுக்கி வருகிறது. ஏற்கனவே இப்படியொரு குற்றச்சாட்டு சில மாதங்களுக்கு முன்னால் எழுந்தது. ஊரடங்கு காலத்தில் அமைதி கொண்டிருந்த முக்கிய நபர்கள் இப்போது அரசை இது குறித்து விசாரிக்க சொல்கிறார்கள்; வற்புறுத்துகிறார்கள். அரசோ இதற்கு ஆதாரம் ஏதும் கொடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இச்செயலி மூலம் உலகம் முழுவதும் உளவு பார்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மத்திய ஆசிய, மேற்கு ஆசியாவின் நாடுகளும் சில ஐரோப்பிய நாடுகளும் இந்த உளவு பார்த்தல் விவகாரத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே இந்தியாவின் பரபரப்பு அரசியல்வாதியும், இஸ்ரேலின் ஆதரவாளர் என அறியப்படுபவருமான சுப்ரமணியன் சுவாமி பெகாசஸ் விஷயத்தில் இந்திய அரசு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று டிவிட் செய்துள்ளார். பெகாசஸ் தனியார் நிறுவனம். இதற்கு பணம் கொடுத்து உளவு பார்க்கச் சொன்னது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இக்கேள்விக்கு பின்னால் ஆர் எஸ் எஸ் இயக்கம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் சில ஆர் எஸ் எஸ் தலைவர்களும் இச்செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது பலகாலம் அரசியலில் நடந்து வந்த விஷயம். அவ்வப்போது அது குறித்து விவாதங்கள் கிளம்பும். கர்நாடகத்தில் முதல்வராக இருந்த வீரப்ப மொய்லியின் குரலில் யாரோ மிமிக்ரி செய்து பேசிய ஆடியோ டேப் ஒன்று பலகாலம் பேசப்பட்டது. அதில் அவரது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதால்தான் இந்த ஆடியோ டேப் விவகாரம் வெளிவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் ரிபப்ளிக் டிவியில் வாட்ஸப் உரையாடல்களின் தொகுப்பு ஒன்று வெளியாகி எப்படி மறைத்து வைக்கப்படும் தொழில்நுட்பத்திலிருந்து அர்னாப்பிற்கு இந்த உரையாடல்கள் கிடைத்தன என்ற கேள்வி பிறந்தது.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நீரா ராடியாவின் அலைபேசி பேச்சுக்களும் இப்படி ஒட்டுக்கேட்கப்பட்ட உரையாடல்கள்தான். ஆகையால் தொடர்ச்சியாக நமது அந்தரங்கம் கண்காணிக்கப்பட்டு வருவதை நாம் தவிர்க்க முடியாதோ எனும் அச்சம் ஏற்படுவது இயற்கை. நம்மிடம் பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியங்கள் ஏதுமில்லை என்றாலும் குடும்பத்தினர், அலுவலகம் ஆகியவற்றில் முடிந்தளவு திறந்த மனதுடன் வாழ்வதே நல்லது.

ரமேஷ் கிருஷ்ணன்பாபு