விவசாயிகளின் நலன் காப்பது எப்படி? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

விவசாயிகளின் நலன் காப்பது எப்படி? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

ந்தியா விவசாயிகளின் நாடு என்ற கருத்தை சொல்லாதவர்களே கிடையாது. ஆயினும் விவசாயிகளைப் போல வதைக்கப்பட்டவர்கள் எவரும் கிடையாது. விடுதலைக்குப் பிறகு விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற பல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ளன. விடுதலைக்குப் பிறகு 1964-66 வரை வறட்சியும், போரும் நாட்டை அலைக்கழித்தப்போது விவசாயிகளின் நலன் காக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும் பசுமைப் புரட்சி கொண்டு வரப்பட்டது. அப்போதிலிருந்து இந்திய விவசாயிகள் கடும் சவால்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக நவீன இரசாயன விவசாயம் செலவு மிகுதியானது. இந்தியாவில் நிலம் தனியுடமை ஆனது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான். அதற்கு முன்னர் அரசருக்கே நிலத்தின் மீதான உரிமை. ஆட்சியாளர்களின் அனுமதி பெற்றே, விளைச்சலில் 3-6 பங்கு வரியாகக் கொடுத்தே நிலத்தை உழும் உரிமையை விவசாயிகள் பெற்றனர். விடுதலைக்கு முன்னரே நிலவுடமை தனி நபர்களிடம் கைமாறி சந்ததிகளுக்கும் கைமாறி மொத்த நிலப் பரப்பில் பலர் உரிமையாளர்களாக மாறினர். இன்று பெரிய நிலவுடமையாளர்கள் என்ற வகையறா அறவே இல்லை எனும்படி 90% விவசாயிகள் 1-5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களாக உள்ளனர். இது அரசின் கணக்கு. உண்மையில் 2 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்போரின் எண்ணிக்கையே பெரும்பான்மை.

எனவே சிறு/குறு விவசாயிகளால் மிகுந்த பொருட்செலவு செய்து விவசாயம் செய்வது கடுமையான பணியாகவே இருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது மிகச் சில விவசாயிகளுக்கே பலன் தருகிறது என்கிறது. குறிப்பாக சிறு/குறு விவசாயிகளுக்கு பலன் என்பது ‘ஜாக்பாட்’ டாக கிடைத்தால்தான் உண்டு. முக்கியமாக அரசின் சலுகைகள் நிலத்தின் உரிமையாளர்களுக்கே போய்ச் சேரும். குத்தகை விவசாயிகள் இழப்பில்தான் வாழ வேண்டும். விவசாயக் கூலிகளின் நிலைதான் பெரும் பரிதாபம். வருடத்திற்கு ஆறு மாதம் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம். எனவே நகரங்களுக்கு வேலைத்தேடி வருவோர் எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருக்கிறது. மேலும் சிறு-குறு விவசாயிகளில் 50% ற்கும் மேற்பட்டோர் குத்தகை விவசாயிகள் என்கிறது மற்றொரு கணக்கு.

ஆயினும் இந்தப் போக்கில் நரேந்திர மோடி அரசின் சில நடவடிக்கைகளால் மாற்றம் தெரியத் தொடங்கியுள்ளது. அத்துடன் சில மாநில அரசுகள் கொண்டு வந்த விவசாய நலத் திட்டங்களாலும் நில உரிமையாளர்களாக இருக்கும் விவசாயிகள் தங்கள் தொழிலைத் தொடர்வதற்கு ஊக்கம் ஏற்படுகிறது. இதில் முன்னணியில் இருப்பது தெலுங்கானா அரசின் ரய்து பந்து திட்டமாகும். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு விவசாய பருவகாலத்திற்கும் ஒவ்வொரு பயிரிடுதலுக்கும் ரூ. 5000 தை ஒரு ஏக்கர் நிலத்திற்காக விவசாயியின் வங்கிக் கணக்கில் இடுகிறது தெலுங்கானா அரசு. இத்திட்டன்படி சுமார் 67 இலட்சம் விவசாயிகள் பலனடைகின்றனர். ஒவ்வொரு விவசாயியும் எத்தனை ஏக்கர் நிலம் வைத்துள்ளார் என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், எத்தனை ஏக்கர் இருந்தாலும் இத்திட்டத்தின்படி பயன் அடையலாம். இத்திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் இதுவரை சுமார் ரூபாய் 50,000 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இடப்பட்டுள்ளது என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. இதே போன்றதொரு திட்டத்தை ஒடிஷா அரசும் நடைமுறைப்படுத்துகிறது. இதனையொட்டி மத்தியில் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி அரசு 2019 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பி எம் -கிசான் எனும் திட்டத்தை அறிவித்தது. அதன்படி வருடம் தோறும் சுமார் 10 கோடி இந்திய விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் மூன்று கட்டங்களாக மொத்தம் ரூ 6,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இது விவசாய குடும்பங்கள் தங்கள் சொந்த செலவுகளை ஈடுகட்டிக்கொள்ள வழி செய்கிறது.

இரண்டு திட்டங்களாலும் பலன் அடைவது நில உரிமையாளர்களாக உள்ள விவசாயிகள் மட்டுமே. விவசாயத்தில் பெரும்பான்மையினராகவுள்ள குத்தகை விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் இத்திட்டங்களால் நேரடியாகப் பயன் அடைவதில்லை. ஆனாலும் நெல்லுக்கு பாய்வது புல்லுக்கும் பாய்கிறது என்ற அடிப்படையில் நில உரிமையாளர்களான விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய இத்திட்டங்கள் உதவுகின்றன. கடந்தாண்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டக் காலத்தில் இடம் பெயர் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பியதற்கு முக்கியக் காரணம் மீண்டும் விவசாயம் செழிக்க இருப்பதாக புரிந்து கொண்டதும் ஒரு காரணம். மேலும் ஆத்ம நிர்பார் திட்டம் மூலம் மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயத்தை ஊக்கப்படுத்துவதை புரிந்து கொண்ட விவசாயிகளும், குத்தகைத்தாரர்களும், கூலி விவசாயிகளும், விவசாய ம் சார்ந்த இதரத் துணைத் தொழில்புரிவோரும் மிகுந்த உற்சாகம் அடைந்தே இருந்தனர். இச்சட்டங்களின்படி ஒப்பந்தப் பயிர் முறை, விலை நிர்ணயம், நாடு முழுதும் ஒரே விவசாய சந்தை போன்ற அம்சங்கள் சாத்தியப்பட்டிருந்தன. ஆயினும் டெல்லியில் தொடர்ச்சியாக நடந்த விவசாய சங்கங்களின் போராட்டங்களால் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. இச்சட்டங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்திருக்கின்றன. ஒருவேளை இச்சட்டங்கள் மீண்டும் வேறு வடிவங்களில் நடைமுறைக்கு வரலாம்.

ரய்து பந்து திட்டத்தின்படி குத்தகை விவசாயிகளுக்கு மறைமுகப்பலன் இருப்பதாக தெலுங்கானா அரசு சொல்கிறது. குத்தகை விவசாயிகள் நில உரிமையாளர்களிடம் தங்களுக்கு தேவையான இடுபொருட்களைப் பெற்றுக்கொண்டு நிலத்தில் பயிர் செய்ய வாய்ப்பிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். இரண்டாவது அகில இந்திய அளவில் குத்தகை விவசாயிகளுக்கு பாதுகாப்பான சட்டங்கள் நடைமுறையில் இல்லை. அப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால்தான் இந்திய விவசாயம் வேகம் பெற்று எழும் வாய்ப்பு ஏற்படும். இதைப் பலமுறை பொருளியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனிமும் நேரடி ரொக்கப் பரிமாற்றமும், மானியங்களும் வங்கிக் கணக்கில் இடப்படுவது என்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். மாநில அரசுகள் தங்களுக்குப் பொருத்தமான குத்தகை சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால்தான் விவசாயம் மீண்டும் எழுச்சிப் பெற வழிபிறக்கும்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

error: Content is protected !!