January 30, 2023

பட்ஜெட் : வருமான வரிக்கு பதிலாக செலவு வரி! – ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

ந்தியாவில் பலமுறை பலரால் சொல்லப்பட்டு வரும் சீர்திருத்தங்களில் ஒன்று வருமான வரியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறொரு வரி வகையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பது. அவற்றில் பணக்காரர்களுக்கான சொத்து வரி, வங்கிப் பரிமாற்றங்களுக்கு வரி, செலவு வரி எனப் பற்பல யோசனைகளும் அடங்கும். இப்போது மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வர முயற்சிக்கப்படும் விஷயம் செலவு வரியாகும். செலவு என்பது ஒவ்வொரு தனி மனிதர் அல்லது குடும்பம் ஆகியவற்றின் மொத்தச் செலவுகளாகும். இதில் பெரும்பாலான செலவுகள் ஆடம்பர செலவுகளையே குறிக்கும். ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஜி எஸ் டி எல்லா ஆடம்பர அல்லது அத்தியாவசியமற்ற செலவுகளையும் உள்ளடக்கியுள்ளது. எனவே தனியாக ஒரு செலவு வரி தேவையா எனும் கேள்வியும் எழுகிறது. ஆடம்பரப் பொருட்களில் ஏசி, மொபைல், உடைகள், காஸ்மெடிக்ஸ், ஹோட்டல் அறைகள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரெண்டுகள், மதுபானக் கூடங்கள் எனப் பெரிய பட்டியலே அடங்கும். இவற்றின் விலை அல்லது கட்டணம் ரூ 50,000 ற்கும் அதிகமாக இருக்கும்போது அவற்றின் மீது 12-28% வரையிலான ஜி எஸ் டி விதிக்கப்படுகிறது. இப்போது செலவு வரி என்ற வகையைக் கொண்டு வந்தால் அதில் எத்தனை விழுக்காடு வரி இடப்படும் என்பது தெரியாது. ஆகையால் அரசுக்கான வருவாய் எவ்வளவு என்பதும் தெரியாது.

வருமான வரியைப் பொறுத்தவரை அதற்கு எப்போதும் ஒரு எதிர்மறையான தோற்றமுண்டு. பலருக்கு வரி என்றாலே பிடிக்காது; அதிலும் வருமான வரி என்றாலே எரிச்சல். அப்படியொரு ‘கலவரமான’ சூழலை வருமான வரி அணுகுமுறை, விகிதங்கள் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சம்பளத்தில் வருமான வரியை கட்டுகின்ற மத்தியதர வர்க்கம் எப்போதும் சலித்துக்கொள்ளும் விஷயம் வருமான வரி. இந்தியாவில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் இன்னபிற உயர் வருமானம் ஈட்டும் பிரிவினரில் வருமான வரிக் கட்டுவோர் அதிகம் என்றாலும் மத்திய/மாநில அரசு ஊழியர்கள், தனியார்துறை ஊழியர்கள் ஆகியோர் மட்டுமே முறையாக வருமான வரி செலுத்துவோரில் பெரும்பான்மையாக உள்ளனர். இந்தியாவில் சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி செலுத்துவோர் உள்ளனர். இது கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மிக வேகமாக உயர்ந்த எண்ணிக்கை. ஆனாலும் இவர்களில் சுமார் 1.5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். கடந்த 2020-21 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின்படி சுமார் ரூ 6 இலட்சம் கோடிக்கு சற்று மேலான தொகையே வருமான வரியாக ஈட்டப்பட்டுள்ளது. அரசின் முக்கிய வரி வருவாயாக ஜி எஸ் டியும், அதற்கடுத்து பெரு நிறுவன வரியுமே முறையே ரூ 6.90 மற்றும் ரூ 6.81 இலட்சம் கோடிகளாக ஈட்டப்பட்டுள்ளன.

இந்தியாவில் வருமான வரி செலுத்தக்கூடியோரை விட செலுத்தத் தேவையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக விவசாயத் தொழிலில் இருப்போர் வருமான வரி செலுத்துவதில்லை. அதிலும் ஆண்டு வருமானம் ரூ. 10 இலட்சமாக இருக்கும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில் புரிவோர் வருமான வரி செலுத்துவதில்லை. இவர்களின் எண்ணிக்கைக் குறித்தும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. பல்வேறு முகவாண்மைத் தொழிலிலுள்ள நபர்களும் கூட வருமான வரி செலுத்துவதில்லை. இவர்கள் அனைவரையும் வருமான வரியின் கீழ் கொண்டு வரும் திட்டமும் மத்திய அரசிற்கு உள்ளது. மேலும் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்வோர் இப்போதும் உள்ளனர். ஜி எஸ் டியில் வரி ஏய்ப்பு செய்தால் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் வருமான வரி அமைப்பில் ஏதேனும் துப்பு கிடைத்தால்தான் உண்டு. இந்நிலையில் இப்படியொரு வரி முறையை நீக்கி விட்டு செலவு வரியைக் கொண்டு வரலாமே என்ற சிந்தனையும் முன் வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கருப்புப் பணத்தினை பதுக்க உதவும், நகை, வீடு, நிலம், இதர சொத்துக்கள் ஆகியவற்றை செலவு வரியின் கீழ் கொண்டு வந்தால் என்ன? ஆனாலும் ஜி எஸ் டி இப்போது நடைமுறையில் இருக்கும் போது ஆடம்பரப் பொருட்களின் மீதான ஜி எஸ் டியை கைவிட முடியாது. ஆனால் வேறொன்று செய்யலாம். பணம் கட்டி காணும் விளையாட்டுப் போட்டிகள், ஆடம்பரக் கண்காட்சிகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், நன்கொடைகள், அரசியல் கட்சிகளின் செலவுகள் ஆகியவற்றின் மீது செலவு வரி இடலாம்.

குறிப்பாக அரசியல் கட்சிகளே கருப்புப்பணத்தை அதிகம் நம்பியுள்ள வகையறாக்கள். அரசியல் கட்சிகளின் செலவுகள் மீது 15% செலவு வரி விதித்தால் அரசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும். அத்துடன் கருப்புப் பணத்தின் புழக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். இதற்கு தேர்தல் சீர்திருத்தம் தேவை. அரசு நினைத்தால் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கும் திட்டத்தில் மாற்றம் செய்து அவற்றுக்கான வருவாய் வங்கிகள் மூலம் மட்டுமே திரட்டப்பட வேண்டும் என்றும், ரொக்கமாக பெறக்கூடாது எனவும், நன்கொடையாளர்களில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர், அந்நிய குடிமக்கள், பன்னாட்டு சேவை அமைப்புகள் ஆகியோர் இடம் பெறக்கூடாது எனவும் விதிகளை வகுக்கலாம். அதனாலும் கருப்புப் பணத்தின் புழக்கம் தடைப்படுவதோடு, செலவு வரியாலும் தேர்தலில் வரையற்ற பணத்தின் புழக்கமும் தடுக்கப்படும்; ஜனநாயகமும் ‘பண நாயகமாவது’ தடுக்கப்படும். எனவே ஓரளவு வரியை செலவு வரியாக வசூலிப்பது ஏற்புடையதாகவே உள்ளது என்பதில் ஐயமில்லையே?

ரமேஷ் கிருஷ்ணன் பாபு!