Exclusive

அச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

முன்பெல்லாம் எந்தவொரு விஷயத்திலும் மக்களின் நம்பிக்கையை பெற்றது நாளேடுகளே. ஆனால், தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களின் வருகையால் நாளேடுகளில் வெளி வரும் செய்திகளின் மீது மக்களின் நம்பிக்கை நிறையவே ஆட்டங்கண்டது. ஆயினும், நாளேடுகளில் செய்தியைப் படித்தால்தான் திருப்தி என்பதோடு, எல்லோராலும் தொலைக்காட்சியைக் காண்பதோ அல்லது டிஜிட்டல் ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதோ சாத்தியமில்லாமல் இருக்கிறது. மேலும், நாளேடுகளில் செய்தியைப் படிப்பதையே வசதியாக நினைப்பவர்களும் உண்டு. காரணம், வயோதிகம், தொலைக்காட்சி அல்லது மொபைல் வசதி இல்லாமை என்கிற நிலையும், இலவசமாக நூலகங்களிலோ அல்லது அருகாமையிலுள்ள கடைகளிலோ படிக்க முடியும் என்கிற காரணத்தினாலும் நாளேடுகளின் கையே ஓங்கியுள்ளது. இப்படியொரு நிலை இருந்தாலும் கூட அடுத்த 10 அல்லது 15 வருடங்களில் அச்சு ஊடகமே இருக்காது எனும் கணிப்புக்களும் இருக்கத்தான் செய்கின்றன!

சமீபத்தில் ஒரு தனியார் ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றது அச்சு ஊடகங்களே என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வானது சென்றாண்டு செப்டம்பரிலும், இந்தாண்டு ஏப்ரலிலும் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு சுற்று ஆய்வுகளிலும் ஊடக நம்பகத்தன்மை அட்டவணையில் 62 விழுக்காட்டை அச்சு ஊடகங்களே பெற்றுள்ளன. அதற்கு அடுத்த நிலையை வானொலியும்(?), மூன்றாம் இடத்தை தொலைக்காட்சியும் பெற்றுள்ளன. சமூக ஊடகங்களுக்கும், வாட்ஸ் அப் போன்ற செயலிகளுக்கும், செய்தி செயலிகளுக்கும் கடைசி இடங்களே கிடைத்துள்ளது. இதற்கான காரணங்களை பெரிதாக ஆராய வேண்டியத் தேவையில்லை. சமூக ஊடகங்கள் பெரும்பாலும் செய்திகளின் மீதான தங்களது கருத்துக்களையே பரிமாறிக்கொள்கின்றன. மாறாக, நாளேடுகளே செய்திகளை வெளியிடுகின்றன; அத்துடன் அதற்கான பின்னணியையும் சுட்டிக்காட்டுகின்றன. தொலைக்காட்சிகளும் அவ்வாறே செய்தாலும் அவற்றின் வீச்சும், தரமும் மக்களை ஈர்க்கவில்லை. காரணம் நாளேடுகளுக்கு இருக்கும் நடுநிலை என்கிற தோற்றம் துவக்கம் முதலே தொலைக்காட்சிகளுக்கு கிடைக்கவில்லை.

அதே சமயம் செய்திகளில் சமரசம், காசு வாங்கிக் கொண்டு செய்திகளை வெளியிடுவது நாளேடுகளில் நீக்கமற நிறைந்த விட்ட இக்காலத்திலும் அவற்றின் நம்பகத்தன்மை கெடாமல் இருப்பதற்கு காரணங்களில் மற்றொன்று சட்ட ரீதியாக அச்சு ஊடகங்களில் வெளியாவதே வழக்காடு மன்றங்களுக்கு செல்கின்றன. எனவே, அவை உண்மையான செய்திகளையே வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம். தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகளில் நேரடியாக நிகழும் செய்திகளையே பெரும்பாலும் காட்டுவதால் உண்மைக்குப் புறம்பான செய்திகள் என்று எதையும் சுட்டுவதில்லை. ஆயினும், உண்மைச் சம்பவங்கள் அல்லது ஸ்டிரங் ஆபரேஷன் எனப்படும் உண்மை அறியும் முயற்சிகள் ஒரு காலத்தில் பிரபலம். இப்போது அவை செல்வாக்கு இழந்துவிட்டன. பெரும்பாலும் உள்நோக்கத்துடனேயே இது போன்ற ஆபரேஷன்கள் செய்யப்படுகின்றன என்று மக்கள் நம்பத்தொடங்கியதே காரணம்.

அரசியல்வாதிகளும் சரி, ஆளுகின்ற அரசியல் கட்சியும் சரி அச்சு ஊடகங்களிலேயே தங்களது விளம்பரங்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கிறார்கள். மேலும், அச்சு ஊடகங்களில் விளம்பரம் இல்லாவிட்டால் நாளேடுகளோ, சஞ்சிகைகளோ வெளிவருவது அரிதாகிவிடும் என்று ஊடக அதிபர்களே வெளிப்படையாக ஒப்புக்கொள்வதால் அச்சு ஊடகங்களின் நிலை வலுவாகவேயுள்ளது. ஆனாலும் ஒரு காலத்தில் அச்சு ஊடகங்களின் மீதான நம்பிக்கை 100 விழுக்காடு கூட இருந்திருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சியும், அதன் விலையும்/கட்டணங்களும் குறையக் குறைய அச்சு ஊடகங்களும் வலுவிழக்கும். இப்போது 62 விழுக்காடு நம்பகத்தன்மை பெற்றுள்ள அச்சு ஊடகங்கள் மெதுவாக 50, 40 விழுக்காடுகள் எனச் சரியும். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்கள் தங்களின் வீச்சை அதிகரிக்கும் போது அவற்றின் பொறுப்பும் அதிகரிப்பதால் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டியிருக்கும். எனவே அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு அச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும் என்பது உறுதி.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

aanthai

Recent Posts

20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் !- இந்தியாவுக்கு எச்சரிக்கை!

சர்வதேச அளவில் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதை கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். வெப்பம் உயர்வதற்கான…

6 hours ago

தமிழ்நாட்டில் தென்னக காசி பைரவர் திருக்கோயில் ஆசியாவிலே உலகில் மிகப்பெரிய பைரவர் ஆலயம்!

உலகிலேயே மிகப்பெரிய பைரவர் ஆலயம் ஒன்று உருவாகி வருகிறது.64 பைரவர்களுக்கும் அந்த ஒரே ஆலயத்தில்சிலைகள் வைக்கப்படுகின்றன. இந்தப் பைரவர் ஆலயம்…

10 hours ago

லட்சுமியின் தண்டனைக் காலம் முடிந்து விட்டது. சித்ரா, மைதிலிகளின் காலம் துவங்க வேண்டாம்!

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது செய்தியாகி இருக்கிறது. பக்தர்கள் யானைக்கு இறுதி மரியாதை செலுத்தி…

10 hours ago

‘விஜயானந்த்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்!

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர்…

1 day ago

பிரபல தனியார் செய்தி நிறுவனமான ‘என்டிடிவி’ -அதானி வசமானது!

இந்திய அளவில் மிகவும் பிரபலமான செய்தி நிறுவனமான என்டிடிவி பங்குகளை அதானி குழுமம் வாங்கியதால், அந்த செய்தி நிறுவனத்தின் இயக்குனர்களான…

1 day ago

கஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு இழிவான பிரச்சாரப் படம் என்று போட்டு உடைத்தற்காக நன்றிகள் நாதவ் லாபிட்!

பன்னாட்டு திரைப்பட விழா (IFFI) கோவாவில் நடந்து வந்தது. அதில் சிறப்புப் பிரிவு வரிசையில் திரையிடப்பட்ட 15 படங்களை பரிசீலனைக்…

1 day ago

This website uses cookies.