இந்தத் தமிழ்நாட்டுப் படையெடுப்பு ஏன்?-ரமேஷ் கிருஷ்ணன் பாபு
இன்று தமிழர்களின் வீடுகளில் தமிழ் யாரால் வளர்க்கப்படுகிறது என்றால் பள்ளிக்கூடமா, தமிழ் சஞ்சிகைகளா, நூல்களா என்றால் இல்லை இல்லை இவைகள் ஒரு அளவோடு நின்று விடுகின்றன. அப்புறம் தொலைக் காட்சிகள் சரி அப்புறம் ஆமாங்க உங்கக் கையில் இருக்கே அதேதான்… மொபைல் ஃபோன் ஆமா அதேதான். பள்ளியில் தங்கிலீஷ் படிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மொபைலில் யூ டியூப்பையும், காணொலிகளையும் காணும் போதும் அதற்கு பொழிப்புரைகள் கூறும் போதும் கண்டனங்கள் வராது. ஏன்? அந்தக் காணொலிகளும் ஆங்கிலம் வழி தமிழாத்தான் இருக்கும்! ஆனாலும் பாருங்க இந்தச் சந்தைக்குத்தான் எத்தனைப் போட்டி?
ஏற்கனவே உள்ளூர் ஆட்கள் எல்லோருமே ₹2-5 இலட்சம் முதலீட்டில் ஒரு யூ டியூப் சேனலோ இல்லை கொஞ்சம் அதிகம் முதலீடு செய்து இணையதளமோ துவங்கி மொய்ச்சுத் தள்றாங்கள்னா இப்போதைக்கு விட்டேனா பார்னு பிற மொழி ஜாம்பவான்களும் இந்தப் போட்டியில் தொபுக்கடீர்ன்னு குதிக்கிறாங்க.
சமீபத்துல ஏபிபி என்கிற வங்காள முன்னணி ஊடக நிறுவனம் டிஜிட்டல் மார்க்கெட்டுக்குள் வந்திருக்காங்க. இதோட தலைமைச் செயல் அதிகாரியான அவினாஷ் பாண்டே ஒரு பேட்டியில் தங்களின் புதிய டிஜிட்டல் சேனலான நாடு நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று அடிச்சி சொல்லியிருக்கிறார். காரணம், வழக்கம் போல. மொபைல் எண்ணிக்கையும் இண்டெர்நெட் லிட்டரசியும் அதிகரித்துள்ளன. மேலும் தமிழர்கள் பாரம்பரியத்திலிருந்து கொஞ்சம் விலகி புதியவற்றை வரவேற்கிறார்கள். அத்துடன் நாங்கள் உள்ளூர் பண்பாட்டுடன் கலந்து அதனைக் குலைக்காத வகையில் நிகழ்ச்சிகளைக் கொடுப்பதால் மாநில மொழி சேனல்களில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளோம். மேலும் அந்த சேனல்கள் எங்களது நெட்வொர்க் வளருவதற்கு பெரும் உதவியாகவுள்ளன, என்று கூறியுள்ளார்.
தமிழிலும் வந்ததற்கானக் காரணத்தை விவரித்த அவினாஷ் பாண்டே, ‘இளைஞர்களைப் பொறுத்த வரை எப்போதும் சேனல்களில் மூழ்கியிருக்க விரும்புகின்றனர். அவர்கள் தங்களது மாநில விவகாரங்களில் கருத்துக்களை வெளியிட நாங்கள் உதவுகிறோம். அவர்களுக்கு அந்த வலிமையை அளிக்கிறோம். தமிழைப் பொறுத்தவரையில் விவாதங்கள், கட்டுரைகள் மற்றும் காணொலிகளை ஒளிபரப்புகிறோம். இதை 360 டிகிரி கோணத்தில் வழங்குகிறோம். பொழுது போக்கு முதல் தொழில்நுட்பம் வரை பலப் பிரிவுகளில் பல வகைகளில் நிகழ்ச்சிகளை அமைக்கிறோம்.
இந்தியாவில் மாநில மொழிகளில் செய்தியைப் பார்க்க பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். சென்றாண்டு பொது முடக்க காலத்தில் 42% வரை இன்டெர்நெட் பயன்பாடு நாள்தோறும் எகிறியுள்ளது. இப்போதும் அது தொடர்ந்து நிலைத்து வருகிறது. இதற்கு காரணம் டேட்டா விலை மலிவாக இருப்பதும், வேகமும் அதிகரித்து வருவதும் ஆகும். மேலும் கைக்குள் உலகம் அடங்கி விட்டது போன்ற எண்ணங்கள்.
இவை உண்மையிலேயே செய்தியை சரியான முறையில் மக்களுக்கு வழங்க உதவுகின்றனவா என்றால் இல்லை. ஒவ்வொரு டிஜிட்டல் சேனலிலும் அரசியல் புகுவது சகஜம். சொல்லப்போனால் இந்தக் கட்சிக்கு இவர் என்றுதான் செய்தியாளர்களையும், தொகுப்பாளர், நெறியாள்கையினரையும் நியமிக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் எப்படி செய்தி தப்பிப் பிழைக்கும்? நடு நிலைமை என்பதே இருக்காது மட்டுமல்ல, பொய் செய்திகளும், அவரவர் தரப்புக்கு ஒரு செய்தியாகவும் ஒரே செய்தி பல வடிவங்கள் எடுக்கும். இதைக் கட்டுப்படுத்த வழியில்லை. தணிக்கையையும் ஊடகச் சுதந்திரக் குறுக்கீடு என்கிறார்கள்.இதனிடையே அவினாஷ் பாண்டே தனது பேட்டியில் விரைவில் ஏ பி பி தொலைக்காட்சியையும் துவங்கும் என்கிறார். இதற்கு முன்னோட்டமாகவே டிஜிட்டல் சேனல் வருகிறது என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம்.
விளம்பரங்களுக்கு பெரு நிறுவனங்களும் சிறிய நிறுவனங்களும் கூட செலவைப் பற்றிக் கவலையின்றி செய்கின்றன. எந்தவொரு நுகர்வுப் பொருளிலும் அதன் விலையில் சில விழுக்காடுகள் விளம்பரத்திற்கு செலவிடப்படுகிறது என்பதை யாரும் பெரிதாக நினைப்பதில்லை. நீங்கள் நினைத்தாலும் விளம்பரங்களில் இருந்து தப்பிக்க முடியாது. விளம்பரங்கள் இன்றி நிகழ்ச்சியைக் காணக் கட்டணம் கேட்கும் போதுதான் இதன் தாக்கம் உரைக்கும். அப்போது நம் மக்கள் விளம்பரங்களைத் தடைச் செய்க என்று கோஷம் போடலாம். அதற்குப் பதிலாக இப்படி ஒரு நொடி விடாமல் டிஜிட்டலில் மூழ்கியிருப்பதைக் கைவிடலாமே?