பேருந்துச் சலுகையை ஆண்களும் எதிர்பார்ப்பது நியாயமே! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பேருந்துச் சலுகையை ஆண்களும் எதிர்பார்ப்பது நியாயமே! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

கடந்த மூன்றாண்டுகளில் குறைந்தது மூன்று போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தை தமிழகம் அனுபவித்துவிட்டது. தொழிலாளர்களின் கோரிக்கையில் சம்பள உயர்வு, ஓய்வூதியம் வழங்காதது என வழக்கம் போன்ற காரணங்கள் அடங்கியிருந்தன. இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசின் பொதுப் போக்குவரத்துத் துறையானது பல்வேறு மாறுதல்களை காணக் கூடிய நிலையில் இருந்தது. மினி பேருந்து, குளிர்ப்பதனப் பேருந்து, சொகுசுப் பேருந்து, மிதவைப் பேருந்து என உள்ளூர் போக்குவரத்துப் பேருந்துகள் வகைப்படுத்தப்பட்டு பல்வேறு பெருநகராட்சி, நகராட்சிகளில் இயக்கப்பட்டு வந்தது. கூடவே மாணவர்களுக்கான இலவசப் பயணச் சீட்டும் கல்லூரி மாணாக்கர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. புதிதாகப் பதவி ஏற்றுள்ள திமுக அரசு இப்போது பெண்களுக்கு சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் இலவசப் பயணத்தை அறிமுகம் செய்துள்ளது. மொத்தப் பேருந்து எண்ணிக்கையில் சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கை 10% வரை அதிகரிக்க ஆணையிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இச்சலுகை கொரோனா காலத்தில் முடங்கிய பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

மேலும் தினக்கூலிப் பெண்கள் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதால் கணிசமான அளவில் கூலியில் மிச்சம் பிடிக்க முடியும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இதில் மறக்கக்கூடாத விஷயம் கடந்த பத்தாண்டுகளில் பேருந்துக் கட்டணம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்றப்பட்டது என்பதை.முதலில் விலையேற்றம் பின்னர் சிறிதளவு குறைப்பு என்பது அப்போதெல்லாம் நிகழ்ந்தது. இப்போதும் அதில் ஒரு தொடர்ச்சியாக பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் பயணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 20,000 பேருந்துகள் சேவையில் இருந்தால் அதில் உள்ளூர் பேருந்துகள் 19,000 மாவது இருக்கும். இதில் 10% என்றால் 1900 பேருந்துகள் சாதாரணக் கட்டணப் பேருந்துகளாக இருக்கலாம். பேருந்து வழித்தடங்களை எடுத்துக் கொண்டு கணக்கிட்டால் ஒரு வழித்தடத்தில் எத்தனை சாதாரணக் கட்டணப் பேருந்துகள் இயங்கும் என்பது தெரிந்து விடும். அதிகபட்சம் 10 பேருந்துகளாவது இயங்கினால்தான் முழுப் பயன் இருக்கும்; அதாவது பெண் பயணியருக்கு.

பலமுறை மானிய கோரிக்கைகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏன் இழப்புக்களை துறையானது சந்திக்கிறது என்று வகைப்படுத்தும் போது ஊழியர் சம்பளம் 50%, எரிபொருள் செலவு 30%, பராமரிப்பு 6% மற்றும் நிர்வாகச் செலவுகள் 10% எனப் பிரித்து சொல்வது வாடிக்கையானது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல பயணக் கட்டணத்தை ஏற்றினாலும் கூட இழப்புகள் என்பது மாறவில்லை. ஊழியர்களோ அரசு தனது கடமைகளை மறந்து விடுகிறது என்று வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு காலத்தில் பணிமனையைக் கூட அடமானம் வைத்து கடன் பெற்று அதில் செலவுகளைச் செய்துள்ளனர் என்பது வெளிவந்தது. இப்படி ஒரு புறம் இருக்க தனியார் பேருந்துகளோ பத்தாண்டுகளாக பயணக்கட்டணம் ஏற்றாமல் இருந்த் போதும் குறைந்தது ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் இலாபத்தில் பேருந்துகளை இயக்கி வந்துள்ளனர். பலர் உரிமத்தைத் திருப்பியளித்தும் உள்ளனர். கட்டணம் உயர்த்தாவிட்டாலும் ஓரிருப் பேருந்துகளுடன் இயங்கும் தனியார் இலாபத்தைக் காணும் போது ஆயிரக்கணக்கானப் பேருந்துகளையுடைய அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இலாபம் ஈட்டாமல் இருந்தாலும் சரி இழப்பைச் சந்திக்காமலாவது இருக்கலாமே? எனக் கேட்கப்படும் கேள்விக்கு பதிலில்லை.

பருவ கால மாற்றங்களையொட்டி உலகம் முழுதும் கரிம எரிபொருளைப் பயன்படுத்துவது குரையப்போகிறது. இந்நிலையில் அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் கதிரவ ஆற்றலில் இயங்கும் பேருந்துகள், மின்கலங்கள் மூலம் இயங்கும் பேருந்துகள், எத்தனால் அல்லது மெத்தனால் மூலம் இயங்கும் பேருந்துகள் என மாற்றம் காண வேண்டிய சூழலில் கட்டணம் என்பது ஏறக்குறைய அதிகரிக்கும் சூழலில்தான் உள்ளது. அப்படி குறைவானக் கட்டணம் வேண்டுமென்றால் பேருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கொடுக்க வேண்டும்; பேருந்து தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்களின் விலையும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசின் கொள்கைகள் ஏதுவாக இருக்க வேண்டும். எப்படியென்றாலும் 2030 ஆம் ஆண்டிற்குள் மாற்று எரிபொருள் புழக்கத்திற்கு 90% அளவிலாவது கொண்டு வரப்பட வேண்டும். இந்த நிலையில் பெண்களுக்கென்று தனியாக ஒரு கட்டணக் குறைப்பினால் இழப்பு அதிகரிப்பதோடு மாற்றங்களைச் செய்யத் தேவைப்படும் நிதியாதாரங்களிலும் வெட்டு விழும். இதை எப்படி சமாளிப்பது?

பேருந்து கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென்றால் தனியார்த் துறையில் காணப்படும் தொழில் திறனை நிர்வாகத்தில் புகுத்த வேண்டும். முடிந்தளவு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி பெற்ற நபர்களை நியமித்து, அவர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன், தினசரி பேட்டாவை 30% அளவில் நிர்ணயித்து சம்பளச் செலவைக் குறைக்கலாம். கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி முழுமையாகக் கிடைக்க குறைந்த செலவில் போக்குவரத்தை மேற்கொள்ள இது போன்ற வழிமுறைகளே உதவும். இல்லையெனில் குறிப்பிட்டத் தொகைக்கு ஒப்பந்தத்தை ஏலத்தில் விட்டு நேரடியாக செலவைச் சுமப்பதைத் தவிர்க்கலாம். ஒப்பந்த ஏலத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அரசின் சொத்து அரசு வசமே இருக்கும், வேலை வாய்ப்பும், தடையில்லாத கட்டணம் குறைந்த போக்குவரத்து பொது மக்களுக்கு கிடைக்கும்.

எரிபொருள் நீக்கம் நடைபெற்றாலும், தனியார் வாகனங்களின் எண்ணிக்கை எப்படி மாறும் என்பது கணிக்க இயலாத ஒன்றாகவுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகளுடன் மாநகர பேருந்து சேவைகளை இணைத்துப் பொதுப்போக்குவரத்து ஒன்றை அரசு நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. அது நடந்தால் தமிழக்த்தின் முக்கிய மாநகரங்கள் முழுவதும் அம்முறைக் கொண்டுவரப்படும் அப்போதும் கட்டணம் குறைவாகவே இருக்க வேண்டும். மாற்று எரிபொருள் பயன்பாட்டில் கட்டணக் குறைப்போ அல்லது நீண்ட காலத்திற்கு குறைவான கட்டணத்திற்கு சேவையோ கிடைக்க வேண்டும். இல்லையென்றால் அம்முறையைக் கொண்டு வருவதற்கு பொருளில்லாமல் போய் விடும். ஆகையால் பெண்களுக்கு வழங்கப்படும் பேருந்துக் கட்டணச் சலுகை எதிர்காலத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

error: Content is protected !!