January 31, 2023

காப்-26 : இந்தியாவின் ‘சமரசம்’ ஏன்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

லகத் தலைவர்கள் பலரும் பங்கேற்ற காப்-26 உலகச் சுற்றுச்சூழல் மாநாடு பலருக்கும் திருப்தியின்றி ஏதோ சமரசத்தில் முடிவடைந்து விட்டது. இதற்கு காரணம் யார் எனும் விவாதமே இப்போது முன்னணியிலுள்ளது. ஒரு சாரார் வளர்ந்த நாடுகள் என்றும் மற்றொரு சாரார் இந்தியா உட்பட வளரும் நாடுகள் எனவும் சண்டையிட்டு வருகின்றனர். உண்மையில் பிரதமர் மோடி அம்மாநாட்டில் பேசும்போது இந்தியா மாசு சிறிதுமற்ற நாடாக மாறுவதற்கு 2070 வரை கால அவகாசம் வேண்டும் என கூறியிருந்தார். வளர்ந்த நாடுகள் இந்த இலக்கை 2050 என வலியுறுத்தி வந்தன. வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகள் பல வகைகளில் முன்னேறியவை. அவர்கள் இடத்தில் நிதி வசதி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சிறிய மக்கள் தொகை எனப் பல சாதகங்கள் உள்ளன. இந்தியாவில் நிலக்கரியின் பயன்பாடு தவிர்க்க இயலாதது, மேலும் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் பயன்பாடும் அதிகம். இதை அடுத்து வரும் சில ஆண்டுகளில் மாற்றி விட முடியாது. ஆயினும் சில ஆய்வுகளைத் தொடர்ந்து செய்தும் வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் முன்னணி கதிரொளி ஆற்றல் உற்பத்தியாளருமான கௌதம் அதானி குறைந்த செலவில் எரிசக்தியை அளிக்க அவரது நிறுவனம் முயன்று வருகிறது என்றார். ஆனால் மேற்கொண்டு விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இந்திய அரசும் ஹைட்ரஜன் ஆற்றலை எதிர்காலத்தில் முக்கிய எரிசக்தியாக பயன்படுத்த இருப்பதாக பிரதமர் மோடி சுதந்திர தினப் பேச்சில் குறிப்பிட்டார். இதனிடையே காப்-26 மாநாட்டில் வளர்ந்த நாடுகள் 2050 ஆம் ஆண்டிற்குள் மாசு ஏற்படுத்தும் கரிய அமில வாயு, மீத்தேன் போன்றவற்றை அடியோடு பயன்பாட்டிலிருந்து நீக்க வலியுறுத்தின. இத்துடன் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் படிம எரிபொருள்களையும் பயன்பாட்டிலிருந்து நீக்கவும் திட்டம் வகுத்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு மேலை நாட்டு பொருளாதார பலம் வாய்ந்த முகாம்கள் இத்திட்டத்தை வலியுறுத்தி வந்தன. இந்த இரு முகாம்களின் மொத்த மக்கள் தொகை இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான சுமார் 130+ கோடிகளில் 50% ற்கு இணையானவை. மேலும் இந்நாடுகள் பலவற்றில் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு அந்தந்த நாட்டு அரசுகள் ஊக்கம் அளித்து வருகின்றன. இந்த நிலையையும் இந்தியா 2027 ஆம் ஆண்டில் சீனாவை முந்திச் சென்று 150 கோடி எனும் மக்கள் தொகையை அடையும் என்று கணிக்கப்படுகிறது. இப்படியொரு நிலையில் எப்படி மாசுக் கட்டுப்பாடை மேற்கொள்ள இயலும்? அதனால்தான் பிரதமர் மோடி 2070 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் கேட்டுள்ளார்.

இம்மாநாட்டில் பெரிதும் பேசப்பட்டதொரு விஷயம் வளர்ந்த நாடுகள் ஆண்டு தோறும் வளரும் நாடுகளுக்கு $ 100 பில்லியன் நிதியுதவியை அளிக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இது குறித்து தெளிவான அறிவிப்புகள் ஏதுமில்லை. இதுத் தவிர ஏராளமான தீவு நாடுகள் தாங்கள் பருவகால மாற்றத்தால் கடலுக்குள் மறைந்து போகும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி இதுநாள் வரை வளர்ந்த நாடுகள் வெளியிட்ட மாசே இன்றைய நிலைக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். மேலும் இப்போது இதற்கான ஒரு திட்டம் வகுக்கப்படவில்லை என்றால் இனி எப்போதும் ஏற்படாது என்றும் கூறி வந்தனர். மாநாட்டின் முடிவில் வெளியான இறுதி அறிக்கையில் இது குறித்து மௌனமே பதிலாக அமைந்தது. நிதியை இரட்டிப்பாக்கி எவ்வாறு அதை விநியோகிப்பது என்பது குறித்து இனிமேல்தான் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இம்மாநாடு ஏற்கனவே பாரிஸ் மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட அம்சங்களை மீண்டும் ஒருமுறை ஒப்புவிப்பது போல் நடந்து முடிந்துள்ளது. ஒரேயொரு விஷயம் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று தனது வளர்ச்சிப்பாதைக்கு இடையூறாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதேயாகும்.

மாநாட்டின் இறுதி அறிக்கையை தயாரித்தப்போது அதில் நிலக்கரிப் பயன்பாட்டை படிப்படியாக நீக்குவது என்பதை இந்தியா படிப்படியாகக் குறைப்பது என்று மாற்றியமைத்துக் கொண்டது. இதுவே மாநாட்டின் நோக்கத்தைப் பாழ்படுத்தி விட்டதாக கண்டிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவிற்கு நிலக்கரியைக் குறைத்தால் எவ்விதமான மாற்று எரிசக்தி வளத்தை ஐநாவோ அல்லது வளர்ந்த நாடுகளோ கொடுக்கும் என்பதை யாரும் கூறவில்லையே?

ரமேஷ் கிருஷ்ணன் பாபு