October 17, 2021

பாபா ராம்தேவின் பதஞ்சலி புராடக்ட்டில் 40% தரமற்றவையாமில்லே!

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளருமான ராம்தேவ் 1965ம் ஆண்டில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். விவசாயம் நொடித்துப் போனதால் ராம்தேவ் 1990 களில் தனது நண்பரான ஆச்சாரியா பால கிருஷ்ணாவுடன் இணைந்து யோகா வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். பின்னர் அதிலும் போதிய வருமானம் இல்லாததால் சைக்கிளில் நெடுந்தொலைவிலுள்ள சில வீடுகளுக்கு சென்று மத சடங்குகள் மற்றும் பூசைகள் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அவர் தற்போது உலக கார்ப்பரேட்டுகளுக்கு போட்டியாக ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி ஈட்டும் அளவுக்கு ‘உயர்ந்துள்ளது’ இந்திய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் அதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆம்.. 2006ல் தனது நண்பர் பால கிருஷ்ணாவுடன் இணைந்து பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கினார். அக்கம்பெனிதான் 10ஆண்டுகளில் உலக கம்பெனிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு‘முன்னேறியுள்ளது’ இக்கம்பெனியின் தயாரிப்பு பொருட்கள் நாடு முழுவதும் உள்ள 1,77,000 சில்லரை விற்பனை கடைகளில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே கம்பெனியின் வருமானம் ஆண்டு தோறும் ரூ.5000 கோடியை எட்டிப்பிடிக்கும் என்றும் அதன் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்திய கம்பெனிகள் பதிவாளரிடமிருந்து இதுகுறித்து எந்த தகவலும் பெற இயலவில்லை. ஏனெனில் ராம்தேவ் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால் அதிகாரபீடங்கள் ரகசியம் காக்கின்றன. இத்தனைக்கும் கடந்த 2006ல் ஹரித்வாரில் வெறும் ரூ.41 கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்டதுதான் பதஞ்சலி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பதஞ்சலி மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பதஞ்சலி தயாரிப்புப் பொருள்கள் ரசாயனக் கலப்பு இல்லை என்றும், இயற்கையாக உள்நாட்டில் தயாராகின்ற பொருட்கள் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் பதஞ்சலி பொருட்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. தில், பதஞ்சலி நிறுவன பொருட்களில் 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும் அவை தரக்குறைவானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை எனவும், இதில் 31 சதவீதம் அந்நிய நாட்டு மூலப் பொருட்கள் கலந்து இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது