October 18, 2021

ராமகிருஷ்ண பரமஹம்சர்!

நம்ம இந்தியா உலகப் புகழ் பெறுவதற்குக் காரணம் தாஜ்மஹால் போன்ற சிறந்த கட்டடங்கள் மட்டும் அல்ல, இமய மலையும் கங்கையாறும் சென்னைக் கடற்கரை போன்ற இயற்கைப் பெருமைகள் மட்டும் அல்ல. பல நுாற்றாண்டுகளாக இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து புகழொளி பரப்பி வரும் பெருமக்களே காரணம்.உண்மையை ஆராய்ந்தால், இயற்கைப் பெருமைகளும் செயற்கைச் சிறப்புகளுமான மலை, கட்டடம் முதலியவற்றை விட, அழியாப் புகழைத் தேடித் தருகின்றவர்கள் இப் பெருமக்களே” என்றார் பேராசிரியர் மு.வரதராசனார்.

இப் பொன்மொழிக்கு ஏற்ப, பாரத மணித்திரு நாட்டிற்குப் பீடும் பெருமையும், புகழும் பெருமிதமும் சேர்த்த பெருமக்களுள் – அருளாளர்களுள் – சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒருவரே ராமகிருஷ்ண பரமஹம்சர். ‘சுதாதரர்’ என்ற இயற்பெயரினைக் கொண்ட அவர், வங்கம் தந்த ஓர் உயரிய ஆன்மிகப் பேரொளி; அவர் இம் மண்ணுலகில் வாழ்ந்தது 50 ஆண்டுகள் 5 மாதங்கள் 27 நாட்கள் (18.02.1886 – 16.08.1936).

ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்னை சாரதா தேவியாரின் அருமந்த வாழ்க்கைத் துணைவர்; வீரத் துறவி விவேகானந்தரின் குரு தேவர்.“என்னுடைய ஆசானும், எனது குருநாதரும், எனது தலைவரும், எனது லட்சியப் புருஷரும், என் வாழ்க்கையை உய்விக்க வந்த தெய்வமுமாகிய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச தேவர்” எனத் தம் குருதேவருக்குப் புகழாரம் சூட்டிப் பெருமிதம் கொள்வார் சுவாமி விவேகானந்தர்.

“ராமகிருஷ்ண பரமஹம்சருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையா காது. பழைய காலத்து ரிஷிகளைப் போன்ற தபோதனர் ஒருவர் நம்முடைய காலத்தில் அவதரி த்தார். அவரே ராமகிருஷ்ண பரமஹம்சர்” என்னும் மூதறிஞர் ராஜாஜியின் கூற்றும் இங்கே மனங்கொளத்தக்கதாகும்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை மிகவும் எளிமையானது; பக்தி நெறியும் வைராக்கியமும் ஒன்று சேர்ந்தது. அவருடைய அமுத மொழியோ மிகமிகத் தெளிவானது; ‘நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த, மறைமொழி தானே மந்திரம் என்ப’ என்னும் தொல்காப்பிய நெறிக்கு ஏற்ப அமைந்தது. ஆழ்ந்த அனுபவ அறிவோடு உண்மை அறிவும் வாய்க்கப் பெற்றவர் ஆகையால் பரமஹம்சரின் வாக்கில் அருமையும் எளிமையும், அழகும் ஆற்றலும் களிநடம் புரிந்து நின்றன. மிகவும் நுட்பமான பொருள்களைக் கூட எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தெள்ள தெளிவாக எடுத்துச்சொல்லும் ஆற்றல் அவரிடம் இருந்தது. நெஞ்சை அள்ளும் உவமைகளும் கதைகளும் அவருக்கு இவ்வகையில் உற்றுழி உதவின. பதச் சோறாக, ‘எம்மதமும் சம்மதம்’ என்ற கருத்தைப் பரமஹம்சர் எங்ஙனம் ஓர் எளிய உதாரணத்தின் வாயிலாக விளக்குகிறார் என இங்கே காணலாம்.

ஐந்தாறு மொழிகளைப் பேசுகிற மக்கள் ஓர் இடத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அப்போது தமக்கு அருகில் உள்ளவரைப் பார்த்து ஏதோ வேண்டும் என்று கேட்டனர். ஒவ்வொருவரும் தம் நண்பரிடம் தம் மொழியிலேயே சொன்னார்கள். ‘பானி லாவோ’ என்றார் ஒருவர். ‘தண்ணீர் கொண்டு வா’ என்றார் மற்றொருவர். இப்படியே அவரவர்கள் பேசிய வார்த்தைகள் வேறு வேறு மொழிகளாக இருந்தமையால் வெவ்வேறு ஒலிகளுடன் இருந்தன. ‘பானி, வாட்டர், தண்ணீர், நீள்ளு’ என்பன காதில் விழும்போது வேறு ஒலிகளாகத் தானே இருக்கும்? அவர்கள் பேசிய மொழிகளைத் தெரியாத ஒருவர் அங்கே இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வார்த்தைகளைப் பேசி ஒவ்வொருவரையும் அனுப்பியதைப் பார்த்தார்; ஒவ்வொருவரும் வேறு பொருள்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள் போலும் என்று எண்ணிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அனைவரும் தண்ணீரைக் கொண்டு வந்தார்கள். “அட, ஒரே பொருளைத் தான் இவ்வளவு பேரும் கேட்டார்களா? வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாகக் கேட்டார்களே!” என்று ஆச்சரியப்பட்டார்.

தண்ணீரின் பெயரை பல்வேறு மொழியில் சொல்லும் போது அது வெவ்வேறாகக் காதில் படுகிறது. ஆனால் அந்தப் பெயருக்கு உரிய பொருளைக் காணும்போது எல்லாம் ஒன்றுதான் என்று தெரிய வருகிறது. ‘ஏகம் ஸத்; விப்ரா பஹ_தா வதந்தி’ என்பது மறைமொழி. ‘உள்ள பொருள் ஒன்றே; அறிந்தவர்கள் பலபடியாகச் சொல்கிறார்கள்’ என்பது அதன் பொருள். கடவுளிடம் ஈடுபட ஈடுபட, ‘எல்லாக் கடவுளரும் ஒன்றே’ என்ற உண்மை அனுபவத்தில் விளங்கும். ‘ஒரே கடவுளைப் பலரும் பல வகைகளில் வழிபடுகிறார்கள்’ என்ற உயரிய சமரசக் கொள்கையை இங்கே ஓர் எளிய உதாரணத்தின் மூலம் உணர்த்தியுள்ளார் பரமஹம்சர். சாதாரண மக்கள் செய்ய முடியாத காரியங்களைச் செய்யும் வல்லமை ‘சித்தி’ எனப்படும். இத்தகைய சித்திகளிலும், அவற்றைக் கொண்டு மக்களை வியக்கும்-படியாகச் செய்வதிலும் பரமஹம்சருக்குச் சற்றும் உடன்பாடு இல்லை. ‘சித்திகள் பெறுவதனால் ஆணவம் வளரும், அதனால் பக்திக்குத் தடையே ஒழிய அது இறைவனை அடைய உதவும் கருவி ஆகாது’ என்பது பரமஹம்சரின் திண்ணிய கருத்து.

இதனை உணர்த்த ஒருமுறை அவர் சொன்ன கதை: ஒரு யோகி தன் குருவிடம் சென்று, “நான் பதினான்கு வருடங்கள் காட்டில் தனியாக இருந்து தவம் செய்து நீரின் மேல் நடக்கும் சித்தியை அடைந்திருக்கிறேன்” என்றானாம். அதைக் கேட்ட குருவானவர் அவனைப் பார்த்து, “மகனே! ஏன் இவ்வளவு வருத்தப்பட்டாய்? பதினான்கு வருடங்களையும் வீணாக்கி விட்டாயே! ஒன்றரையணா கொடுத்தால் ஓடக்காரன் உன்னை நீரின் மேல் கொண்டு போய் அக்கரை சேர்ப்பானே? நீ அடைந்த சித்தி ஒன்றரையணா மதிப்புத் தான்” என்றாராம்.திருவடியை அடைய வழி “சித்தி அடையும் ஆசையைக் கொண்டு யாரும் காசை வீணாக்க வேண்டா. இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்ற நோக்குடன் உண்மையான பக்தி செய்யுங்கள். அற்புதங்களைக் காட்டி மக்களைக் கவர நினைக்கும் யோகிகளிடம் செல்ல வேண்டாம்” என்பது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமொழி;

‘பல சாஸ்திரங்களைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன்? இந்த வாழ்க்கை நதியைக் கடக்கத் தெரிவதுதான் அவசியம்’ என்பதை உணர்த்தும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சுவையான குறுங் கதை:சிலர் படகில் கங்கையைக் கடந்து கொண்டிருந்தனர். ஒரு பண்டிதர் தன்னுடைய கல்வியறி வைத் தம்பட்டம் அடித்துக் கொண்டார்; ‘வேதம், வேதாந்தம், ஆறு தரிசனங்கள் என்ற சாஸ்திரங்கள் எல்லாம் படித்திருக்கிறேன்’ என்றார். ‘என்ன, உனக்கு வேதாந்தம் தெரியுமா?’ என்று ஒருவனிடம் கேட்டார். அதற்கு அவன், ‘இல்லை ஐயா’ என்றான். பிறகு, ‘சாங்கியம், பாதஞ்ஜலம் தெரியுமா?’ என்றார். அதற்கும் அவன், ‘இல்லை ஐயா, எனக்குத் தெரியாது’ என்றான். ‘தரிசனம் – கிரிசனம் ஏதாவது படித்திருக்கிறாயா?’ என்று கேட்டபோது அதற்கும் அவன், ‘இல்லை’ என்றே பதிலளித் தான். பண்டிதர் இப்படி அளந்து கொண்டே வந்தார். அந்த மனிதன் மவுனமாக இருந்தான்.அந்த நேரத்தில் பலத்த புயல் வீசத் தொடங்கியது. படகு நிலைகுலைந்து ஆடியது. அப்போது அந்த மனிதன் பண்டிதரிடம், ‘ஐயா, பண்டிதரே, உமக்கு நீந்தத் தெரியுமா?’ என்று கேட்டான். அதற்குப் பண்டிதர், ‘தெரியாது’ என்று பதிலளித்தார். ‘எனக்குச் சாங்கியம், பாதஞ்ஜலம் எதுவும் தெரியாது, ஆனால் நன்றாக நீந்தத் தெரியும்’ என்றான் அந்த மனிதன்.இராமகிருஷ்ண பரமஹம்சரின் இத்தகைய மந்திர மொழிகளையும் கதை-களையும் மனம் கலந்து – பொருள் உணர்ந்து – பயில்வோம்; அவற்றின் வழி வையத்துள் வாழ்வாங்கு – நல்ல வண்ணம் – வாழ்வோம். இம்மண்ணுலகிலேயே மகாகவி பாரதியார் சுட்டும் ‘அமர நிலை’யினை அடைவோம்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நினைவு நாள் பதிவு