September 29, 2021

சாமியார் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை ; இனிமே இவரின் வாரிசு யார் தெரியுமா?

ஹரியானா ஆசிரமத்தில் 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் ரோதக் சிறையில் குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இன்று தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் ஹெலிகாப்டரில் வந்து தண்டனை விவரங்களை அறிவித்தார். தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்பு ராம் ரஹீம் மன்னிப்பு கோரி கண்ணீர்விட்டு அழுதார்.

இதனிடையே சாமியார் ரஹீமின் சர்ச்சைக்குரிய தேரா சச்சா அமைப்பை நிர்வகிக்க போகும் அடுத்த வாரிசாக அவர் கருதப்படுகிறார்.அரியானா மாநிலம், சிர்சாவில் தேரா சச்சா சவுதா அமைப்பை தொடங்கியவர் ராம் ரஹீம் சிங். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவர் குற்றவாளி என்று கடந்த வெள்ளிக்கிழமை கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டு 31 பேர் பலியானார்கள். பொதுச் சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து கலவரக்காரர்களால் கொளுத்தப்பட்டது.

அப்போது ராம் ரஹீம் ஒரு ஹெலிகாப்டரில் உட்கார்ந்திருப்பது போன்றும் அவருக்கு எதிரே ஒரு பெண் அமர்ந்திருப்பது போன்றும் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளிவந்தது.அந்த ஹெலிகாப்டரில் உள்ள அந்த பெண் ஹனிபிரீத் இன்சான் ஆவார்.

அவர் ராம் ரஹீமின் தத்து மகளாவார்.ராம் ரஹீமிற்கு ஹர்ஜீத் கௌர் என்ற மனைவியும், ஆமன் பிரீத் மற்றும் சரண் பிரீத் என்ற மகள்களும், ஜாஸ்மீத் இன்சான் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஹனிபிரீத் இன்சான் என்பவரை கடந்த 2009-இல் தனது மகளாக ராம் ரஹீம் தத்தெடுத்துக் கொண்டார்.

ஹனிபிரீத்தின் இயற்பெயர் பிரியங்கா தனேஜாவாகும். இவர் தேரா சச்சா சவுதா அமைப்பின் சீடரான விஷ்வாஸ் குப்தாவை கடந்த 1999-இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர் குப்தாவும் அவரது குடும்பத்தினரும் பிரியங்காவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதை அறிந்த ராம் ரஹீம், பிரியங்காவை தனது மகளாக கடந்த 2009ல் தத்தெடுத்துக் கொண்டார். அதுமுதல் தனது பெயரையும் ஹனி பிரீத் இன்சான் என்று மாற்றிக் கொண்டார் பிரியங்கா.

அது முதல் தந்தை ராம் ரஹீமின் நிழல் போல் அவருடனே இருந்து வந்தார் ஹனிபிரீத். இவரது பேச்சுக்கு தேரா சச்சா சவுதா அமைப்பில் செல்வாக்கு உண்டு. ராம் ரஹீமுக்கு குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் இருந்தாலும் ஹனிபிரீத்தான் அதிகமாக இணையத்தில் தொடர்பில் உள்ளார்.இவர் தனக்கென ஒரு இணையதளத்தை உருவாக்கி வைத்துள்ளார். மேலும் இவரை டுவிட்டரில் 10 லட்சம் பேரும், பேஸ்புக்கில் 5 லட்சம் பேரும் இன்ஸ்டாகிராமில் ஒன்றரை லட்சம் பேரும் பின்பற்றி வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய தேரா சச்சா சவுதா அமைப்பை ஹனிபிரீத் ஏற்றுக் கொண்டு இயக்குவார் என்றும் அவர்தான் ராம் ரஹீமின் அடுத்த வாரிசு என்றும் கூறப்படுகிறது. இந்த ஹனிபிரீத் நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். அப்பாவின் தேவதை என்று தனது இணையதளத்தில் தன்னை குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்பாவின் உத்தரவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதே தனது லட்சியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.