August 4, 2021

டாக்டர்களை அட்டாக் செஞ்சால் அஞ்சு வருஷம் ஜெயில்!

டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத் திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

கொரோனா போன்ற இக்கட்டான சூழலில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் பங்கு அளப்பரியது. ஆனால் அவர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறி வருகின்றன. உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாநிலங்களவையில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுளது. சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இதற்கான சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் இன்று அறிமுகம் செய்தார். ஊழியர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு சொந்தமான பொருட்கள் மீது சேதம் ஏற்படுத்துபவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் வகையில் இது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 30 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தால், அதனை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.