2.0 படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை – ரஜினி நம்பிக்கை

2.0 படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை – ரஜினி நம்பிக்கை

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்‌ஷன் ஆகியோர் நடித்துள்ள படம் 2.0. நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நடந்த விழாவில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் ஷங்கர், “ரஜினிகாந்தை இந்தப் படத்தில் வசீகரனாக , சிட்டியாக, 2.0-வாகப் பார்க்கப் போகிறீர்கள். படத்தில் ரசிகர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் உள்ளது. இந்தப் படத்திற்கு 2.0 என்று டைட்டில் வைத்ததற்குக் காரணம், அதை சொல்லும் போது எந்த மொழியாக இருந்தாலும் சொல்வதற்கு சுலமாக இருக்கும் என்பதால்தான். இந்திய சினிமாவுக்காக யாரும் இவ்வளவு செலவு பண்ண முடியாது. ஆனால் படத்தின் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் செலவு செய்தார்.

என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவது ரசிகர்கள் தான். சின்னச் சின்ன யோசனைகள் வந்துள்ளன. 3.0 உருவாக வாய்ப்புள்ளது. பார்க்கலாம். நமக்கு பிடித்த இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று படம் செய்யாமல் முதலில் நல்ல கதையை தேர்ந்தெடுத்துவிட்டுப் படம் இயக்குங்கள். அதன் பிறகு கதைக்கு ஏற்றாற்போல் நடிகர்கள், தயாரிப்பாளர்களின் தேர்வு இருக்க வேண்டும். ரஜினிகாந்துக்கு சில சமயம் உடல்நிலை சரியில்லாத போது, காலில் காயம் ஏற்பட்ட போதும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் இப்போதும்கூட எது செய்தாலும் அது அனைவரையும் கவரும் விதத்தில் மாஸாக உள்ளது. இன்றைக்கும் அவரது நடிப்பு புதுமையாக இருக்கிறது. இது போன்ற படத்தை ஆதரியுங்கள். அப்போதுதான் நம் ஊரிலும் இப்படியொரு படம் எடுக்க முடியும் என்று உலகத்துக்கே காண்பிக்க முடியும். அதனால் இதுபோல நிறைய படம் வரும்” என்றார்.

இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “என்னை தாய் தந்தையாக இருந்து வளர்த்த, நான் செய்யும் தவறுகளைச் சொல்லி திருத்திய, இப்போதும் எனது வழிகாட்டியாக இருக்கும் எனது அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப் படம் ரூ.600 கோடி முதலீட்டில் உருவாகியிருக்கிறது.
ரஜினியையோ, அக்‌ஷய் குமாரையோ நம்பி 2.0 படத்தை பார்க்க வரவேண்டாம். ஷங்கரை நம்பி வாருங்கள். ஷங்கர் மிகவும் நம்பிக்கையான மனிதர். இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன், ஸ்பீல் பெர்க் இயக்குநர் ஷங்கர். அவர் ஒரு சிறந்த படைப்பாளி, மிகச் சிறந்த இயக்குநர். அவரது சிந்தனை யும், உருவாக்கமும் பிரம்மாண்டமானது. ஆச்சரியப்பட வைப்பது. இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப் படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார்.

அவருடன் இரு படங்களை முடித்த பிறகு மூன்றாவது முறையாக இணைவது பற்றி 2.0 கதை பற்றி பேசினோம். அப்போது அவரிடம் நான் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை மட்டும்தான் கேட்டேன். சிவாஜி படம் எடுக்கும் போது படத்தின் தயாரிப்பு நினைத்ததை விட அதிகமானது. ஆனால் படம் நல்லாவே வசூல் செய்தது. அந்த படத்தின் வசூல் எவ்வுளவோ அதை முதலீடாக வைத்து எந்திரன் படத்தை உருவாக்கினோம். கலாநிதி மாறன் சிறந்த வியாபாரி, தந்திரமான வியாபாரி. வியாபாரத்துக்கு தந்திரம் முக்கியம். சிவாஜி படத்தின் மொத்த வசூல் விபரங்களைத் தெரிந்து கொண்டு எந்திரன் படத்தின் தயாரிப்புச் செலவை முடிவு செய்தார். எந்திரனும் வசூல் குவித்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், எந்திரன் வசூலை 2.0 படத்திற்காக தான் செலவு செய்வதாக சுபாஷ்கரன் கூறினார். தனக்கு லாபம் வேண்டாம், எந்திரன் வசூல் கிடைத்தால் போதும் என்றார். 300, 350 கோடிக்கு படத்தை எடுக்க முடிவு செய்து ஆரம்பித்தோம். தற்போது 500 கோடியை தாண்டியுள்ளது படத்தின் பட்ஜெட். இந்த படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாகச் சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள்தான் முக்கியம் என்று சுபாஷ் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம். ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது கடினம். இவரைப்போன்ற ஒரு நல்ல நண்பர் கிடைப்பது எளிதல்ல. கோஹினூர் வைரம் மாதிரி எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்து விட்டார்.

படத்தில் அக்‌ஷய் குமாரின் தோற்றத்தை பார்த்து ஆடிப்போயிட்டேன். மேக்கப்புக்காக அவர் 4 மணிநேரம் வேலை பொறுமையாக இருந்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் சவால். இந்தப் படததுக்கு புரமோஷன் சரியில்லை என சிலர் கூறியிருந்தனர். இந்தப் படத்துக்கு புரமோஷனே தேவையில்லை. ரிலீசுக்குப் பிறகு தியேட்டரில் வந்து படம் பார்க்கும் ஒவ்வொருவரும் புரமோட்டர்களாக மாறி படத்துக்கு விளம்பரம் செய்வார் கள். ரொம்பவே தாமதமாக வந்திருப்பதாக கூறுகிறார்கள். லேட்டா வந்தாலும் சரியான நேரத்திற்கு வரவேண்டும். வந்து சரியா அடிக்க வேண்டும், நான் படத்தைச் சொன்னேன். மக்கள் நம்பியாச்சு.. எல்லாம் ரெடியா இருக்கு.. ரிலீஸ் மட்டும்தான் பாக்கி. ஆயிரக்கணக்கானோர் படத்திற்காக பணிபுரிந்திருக்கிறார்கள். மீடியா நண்பர்கள் அனைவரும் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள். அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் எனது நண்பர் கமல் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும்,” என்றார்.

error: Content is protected !!