ரஜினி-க்கு சிறப்பு விருது – மோடி அரசு அறிவிப்பு!
இந்திய சினிமா துறைக்கு சிறப்பான பங்காற்றியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு, திரைப்படத் துறைக்கான சிறப்பு விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து, ஆண்டுதோறும் கோவா திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. சா்வதேச தரத்திலான இந்தத் திரைப்பட விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். 2019 நவம்பா் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில்நடைபெறவுள்ள இந்த விழாவிற்கு, 50-வது ஆண்டு என்கிற சிறப்பு அம்சமும் உள்ளது.
வழக்கமாக 10 நாள்கள் நடைபெறும் கோவா திரைப்பட விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப் படும். இது 50-வது ஆண்டு விழா என்பதால், சுமார் 300 படங்கள் திரையிடப்படுகின்றன.
இதையொட்டி மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்ததாவது:
கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 என்கிற சிறப்பு விருது வழங்கப்படுகிறது. விருது குறித்து ரஜினிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி
சிறப்பு விருது வழங்குவதாக அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.