ராஜீவ் காந்தி கொழும்பில் மரியாதை அணிவகுப்பில் இலங்கை ராணுவத்தினால் தாக்குதலுக்குள்ளான நாள்

ராஜீவ் காந்தி கொழும்பில் மரியாதை அணிவகுப்பில் இலங்கை ராணுவத்தினால் தாக்குதலுக்குள்ளான நாள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண, அன்றைய தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் இணைந்து, சமரச முயற்சியில் ராஜீவ் ஈடுபட்டார். இதன் விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாயிற்று. இலங்கைத் தலைநகரான கொழும்பில் 29-7-1987-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இதில் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர்.

rajiv jy 29

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி அழைத்தார். ஆனால், எம்.ஜி.ஆர். இலங்கை செல்ல இயலாமல் இருந்ததால், தன் சார்பில் அமைச்சர் பண்ருட்டிராமச்சந்திரனை அனுப்பி வைத்தார். இந்த ஒப்பந்தத்தை இலங்கை பிரதமர் பிரேமதாசா, பாதுகாப்பு மந்திரி லலித் அதுலத் முதலி ஆகிய இருவரும் ஏற்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

(1) ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ராணுவத் தினரும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த வேண்டும்.

(2) மூன்று நாட்களுக்குள் ராணுவத்தினர் அவர்களுடைய முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

(3) இலங்கையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப்புலிகள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று, மற்ற குடிமக்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

(4) தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரே மாநிலமாக (“தமிழ் மாநிலம்”) அமைக்கப்படும். இந்த மாநில சட்டசபைக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். ஒருவேளை தாமதம் ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன் நடைபெறும். தேர்தல் நடைபெறும்போது, அதை மேற்பார்வையிட இந்தியாவில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்.

(5) இந்த மாநிலத்துக்கு முதல்- அமைச்சர் இருப்பார். அவரை பொதுமக்கள் தேர்ந்து எடுப்பார்கள். கவர்னரை ஜனாதிபதி நியமிப்பார். “வடக்கு பகுதியுடன் நிரந்தரமாக இணைந்திருக்க விருப்பமா?” என்று, 1988-ம் ஆண்டு கடைசிக்குள் கிழக்குப் பகுதியில் பொது ஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். கலவரம் காரணமாக இலங்கையில் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய 1,30,000 தமிழ் அகதிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.

(6) இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், சுதந்திரத்துக்கும் ஆபத்து உண்டாக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளும், இந்திய மண்ணில் நடக்காதபடி இந்திய அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்.

(7) இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மத்தியில் உள்ள கடல் பகுதியில் விடுதலைப்புலிகள் போர் நடவடிக்கையில் ஈடுபடாதபடி இந்திய கப்பல் படைகளும், கடலோர பாதுகாப்பு படையினரும் கவனித்துக் கொள்வார்கள்.

(Cool இந்த ஒப்பந்தத்துக்கு இலங்கை பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும். இதற்காக பாராளுமன்றம் கூட்டப்படும்.

(9) ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றுவதில் இந்திய ராணுவ உதவியை இலங்கை அரசாங்கம் நாடினால் அதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.

(10) இந்தியா வந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்பி அனுப்பும் பணியை, இந்தியா துரிதப்படுத்தும்.

இவ்வாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், ராஜீவ் காந்தி டெல்லிக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைக்கும் வகையில், ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் மாளிகையில் இலங்கை கடற்படை அணி வகுப்பு நடந்தது. அந்த அணி வகுப்பு மரியாதையை ராஜீவ் காந்தி ஏற்க சென்றார். முதல் வரிசையில் நின்ற வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுவிட்டு திரும்ப முயன்றார்.

அப்போது இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவன் திடீரென்று பாய்ந்து வந்து, தனது துப்பாக்கியை திருப்பி, துப்பாக்கிக் கட்டையால் ராஜீவ் காந்தியை தாக்கினான். துப்பாக்கிக் கட்டை, ராஜீவ் காந்தியின் இடது தோளில் பட்டு தரையில் விழுந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோன ராஜீவ் கொஞ்சம் முன்னே வேகமாக நடந்து சென்று திரும்பி பார்த்தார்.

இதற்குள், ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்குச் சென்ற அதிகாரிகள் பாய்ந்து சென்று, துப்பாக்கியால் தாக்கிய சிப்பாயை கீழே தள்ளினார்கள். இலங்கை கடற்படை தளபதியும் விரைந்து வந்து, அந்த சிப்பாயைப் பிடித்துக்கொண்டார். இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு 20 மீட்டர் தொலைவில் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா, அவரது மனைவி, ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர்.

அந்த இடத்துக்கு ராஜீவ் காந்தி சென்றார். அங்கு ஜெயவர்த்தனாவிடம் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏறி விமான நிலையத்துக்குச் சென்றார். ராஜீவ் காந்தியை தாக்கியவன் பெயர் விஜிதா ரோதன். இவன் முன்பு “ஜனதா விமுக்தி பெரமுனா” என்ற சிங்கள தீவிரவாத அமைப்பில் இருந்தவன்.

ராஜீவ் காந்தியின் தலையை தாக்குவதே அவன் நோக்கம். சற்று குறி தவறி தோளில் பட்டதால் ராஜீவ் உயிர் தப்பினார். ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தும், மன்னிப்பு கேட்டும் ராஜீவ் காந்திக்கு ஜெயவர்த்தனா செய்தி அனுப்பினார். ரேடியோவிலும் பேசினார்.

error: Content is protected !!