September 29, 2021

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலத்தைவிட” மிக வலிமையான ஒரு புத்தகம்!

பத்திரிகையாளர் பா. ஏகலைவன் தொகுத்து எழுதியுள்ள, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் களப்போராளி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரா.பொ. இரவிச்சந்திரனின் “ராஜிவ் காந்தி படுகொலை-சிவராசனின் டாப் சீக்ரெட்” புத்தகத்தை இன்றைய ரயில் பயணத்தில் மறுபடியும் பொறுமையாக வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. தெற்காசியாவின் பூகோள அரசியலின் மூலத்தை, ஆணிவேரை பிடுங்கி அதன் பாகங்களைப் படம் வரைந்து நமக்கு விளக்கும் இந்த புத்தகம் உண்மையில் “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலத்தைவிட” மிக வலிமையான ஒரு புத்தகம்.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், தெற்காசிய நாடுகளின் குடிமக்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் சிவராசனின் டாப் சீக்ரெட்.

புத்தகம் வாசித்து முடித்தவுடன் நமக்குள் உருவாகும் புரிதல்கள்.

1. தெற்காசிய அரசியலில் அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் ‘அக்கறை’.

2. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கு இலங்கை என்கிற ஒரு சின்னஞ்சிறிய தீவின் ஒரு விடுதலைப் போராட்டக்குழுவான விடுதலைப்புலிகள்தான் காரணம் என்று எவ்வளவு மிக எளிதாக 27 ஆண்டுகளாக நமது பொதுப்புத்தியில் பதியவைத்து நம்மை முட்டாள் ஆக்கியிருக்கிறார்கள்.

3. இந்திய தேர்தல் ஆணையத்தையே வெளி உலகிற்கு கொண்டு வந்த மாமேதை என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் டி.என்.சேஷனின் அருவெருக்கத்தக்க உண்மை முகம் என்ன?

4. திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இறப்பு வீட்டில் பிணமாகவும் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும்கூட அந்தக் கட்சி ஆட்சியில் மிகப்பெரிய பதவி சுப்ரமணியன் சுவாமிக்கு ஏன் தரப்படுகிறது? அதன் பின்னணி என்ன? சுப்ரமணியன் சுவாமிக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்று அனைவருக்கும் தெரிந்த நிலையில் எந்த அடிப்பைடையில் அவர் கோலாச்சுகிறார்?

5. வளைகுடாப் போரில் ஈராக்குக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் உலக நாடுகளை ஒன்றிணைத்துக் கொண்டிருக்க, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கு எதிராக மூன்றாம் உலக நாடுகளை திரட்ட ராஜிவ் காந்தி முயற்சித்த நிலையிலும், அமெரிக்க போர் விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்ப ராஜிவ் காந்தி எதிர்ப்புத் தெரிவித்து அதற்கு தடைக்கல்லாக இருந்த நிலையில் அதன் பிறகு நான்கே மாதங்களில் ராஜிவ் கொலை செய்யப்பட்டது ஏன்?

6. ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த கார்த்திகேயன் தலைமையிலான சிபிஐபோல உலக வரலாற்றில் இப்படி ஒரு கேவலமான, கொடூரக் காமெடியான விசாரணை ஆணையத்தை கேள்வியே பட்டிருக்க முடியாது.

7. “ராஜிவ் கொலைச் சம்பத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. காரணம், கருத்துவேறுபாடு இருந்தாலும்கூட எங்கள் யுத்தம் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரானது அல்ல. இலங்கை அரசுக்கு எதிரானதே. இந்தியாவைப் பகைத்துக்கொண்டால் அது தங்கள் தற்கொலைக்குச் சமம்” என்பதில் விடுதலைப்புலிகள் இயக்கம் மிக உறுதியாக இருந்துள்ளது.

8. ஈழப்போரின் போராளிக்குழுக்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..எதிர்ப்பு?

9. ராஜிவ் கொலைச் சம்பவம் நடந்து முடிந்தவுடன் அந்தப் பழி விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டவுடன் சிவராசனை எப்படியாவது ஈழத்திற்கு அழைத்து வந்துவிட புலிகள் தலைமை முயற்சி மேற்கொண்டபோது அதனை சிவராசன் தவிர்த்து ஏன் பெங்களூரு தப்பிச் சென்றார். புலிகளின் கைகளில் ஏன் அவர் சிக்காமல் போனார்? அதேகாலகட்டத்தில் ஈழம் சென்றுவர, புத்தகம் எழுதிய இரவிச்சந்திரனால் முடிகிறது எனில் சிவராசானால் ஏன் முடியவில்லை?

10. ராஜிவ் காந்தியின் தத்துபித்து வெளிநாட்டுக் கொள்கை ஏற்படுத்திய பாதகங்கள் என்ன என்ன?

11. எல்லாவற்றையும்விட இரா.பொ. இரவிச்சந்திரன் என்கிற ஒரு சிறைவாசியின் வியக்கவைக்கும் ஆளுமை.

சுமார் 480 பக்கங்கள்…விறுவிறுவென நம்மை ஒரு பிரம்மாண்டப் பார்வைக்கு இட்டுச் செல்லும் இந்தப் புத்தகத்தின் எழுத்து நடை உண்மையில் பாராட்டுதலுக்கு உரியது. முதல் அத்தியாயத்தில் தொடங்கி 25 அத்தியாயங்களுக்கு எங்கோ அழைத்துச் சென்று மீண்டும் முதல் அத்தியாயத்திற்கு அழைத்து வரும்போது அசந்து, வியந்து போகவேண்டியிருக்கிறது. படியுங்கள்.

-விஷ்வா விஸ்வநாத்