August 2, 2021

ஜெ. மற்றும் சோ -வுக்கு நடிகர் சங்கம் நடத்திய அஞ்சலிக் கூட்டத்தில் ரஜினி பேசிய முழு விபரம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் மறைந்த (துக்ளக்) பத்திரிகை ஆசிரியரும், நடிகருமான சோ ஆகியோருக்கு சென்னை கோடம்பாக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்தக் கூட்டத்தில் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவக்குமார், விவேக், வடிவேலு, ஜீவா, உதயா, நந்தா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், பசுபதி, பொன்வண்ணன், ஆர்.வி.உதயகுமார், சரவணன், ராஜேஷ், மன்சூரலிகான், கார்த்திக், எஸ்.வி.சேகர், ஐசரி கே.கணேஷ், நடிகைகள் ரோகிணி, ஷீலா, வாணிஸ்ரீ, ரேகா, கோவை சரளா, லலிதகுமாரி, சோனியா, குட்டி பத்மினி, சங்கீதா, லதா, ஜெயமாலினி, ஆர்த்தி, சித்ரா, அம்பிகா, ராதா, சச்சு, ஸ்ரீபிரியா, பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

rajani dec 12

இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசும் போது, “ 1996 ல் தேர்தல் நேரத்தில் புரட்சித்தலைவியை விமர்சித்து அவர் மனசை துன்பப்படுத்தி முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து நின்றேன். அவர் தேர்தலில் தோல்வியுறுவதற்கு நான் முக்கிய காரணமாக இருந்தேன். அதனால் அவர் மனம் புண்பட காரணமாக இருந்தேன். அதன் பின்னர் எனது மகள் கல்யாணம் நடந்தது. அதற்கு அவரை அழைக்கலாமா என்று யோசித்தோம். எந்த முகத்தை வைத்து கொண்டு போய் இன்விடேஷன் கொடுப்பது என்கிற தர்மசங்கடமான நிலைமை.

அழைத்தால் வருவாரா? என்ற யோசனையுடன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். உடனடியாக காலையில் வரச்சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார். போய்விட்டு சம்பிரதாயத்துக்கு அவர் வர மாட்டார்னு தெரியும், ஆனாலும் வரணும் என்று சம்பிரதாயத்துக்கு கூப்பிட்டோம். பத்திரிக்கையை பார்த்தார். உடனடியாக வருவதாக சொன்னார். சொன்னபடி வந்தார், கல்யாணத்தை முன்னின்று நடத்தி கொடுத்தார். அப்படி பட்ட பொன் மனம் கொண்ட புரட்சித்தலைவி அவர்கள் எங்கள் கூட இல்லை.

அவர் ஒரு டயமண்ட் , அது ஒரு வஜ்ரம் . கார்பன் காலபோக்கில் வைரமாக மாறும். அதை தேய்த்து பாலிஸ் போட்டுத்தான் டையமண்டாக நம்மகிட்ட வருது. புரட்சி தலைவி கூட ஒரு வைரம் தான். ஆண் ஆதிக்க சமூகத்தில் அழுத்தப்பட்டு அவர்களுடைய விமர்சனங்களால , அவர் பட்ட துன்பங்களால தேய்த்து தேய்த்து வைரமா மாறிவிட்டார். வைரமாக மின்னியுள்ளார்.

அவர் மறைந்த பிறகு கோடானு கோடி தொண்டர்கள், மக்கள் கண்ணீராலேயே அவரை நினைத்து மக்களின் கண்ணீரால் கோஹினூர் வைரமாக புரட்சி தலைவரின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒரு வாரமாக லட்சக்கணக்கான மக்கள் அவர் இடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் இது சாதாரண விஷயமல்ல அது கடவுள் அணுக்கிரஹம்.

2 வயசுல அப்பாவை இழந்து , படிக்கணும்னு ஆசை இருந்தும், சினிமாவுக்கு வர விருப்பம் இல்லாமல் வந்து 22 வயதில் அம்மாவை இழந்தும். அளவில்லா அழகு , அளவில்லா அறிவு , அளவில்லா பெயர் , புகழ் எல்லா தகுதிகளும் இருந்து கல்யாண பாக்கியம் கிடைக்காம , உற்றார் உறவினர்கள் இல்லாம தன்னந்தனியாக வாழ்ந்து அவரே சொன்னமாதிரி கட்சி சாதாரணமா கையில் வரவில்லை. அதுக்காக எவ்வளவோ பாடுபட்டு அந்த மாபெரும் கட்சியை காப்பாற்றி அதை எங்கேயோ கொண்டு சென்று புரட்சித்தலைவியாக இருந்தார், அம்மா என்று அழைக்கப்பட்டார்.

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தேர்தல் பிரச்சாரம் செய்து அதிமுகவை அரியணை ஏற்றி வைத்து விட்டு இரவு 10 மணிக்கு வேலை செய்து கொண்டிருந்தவர் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி நால்லா ஆகி கொட நாட்டில் ஓய்வு எடுப்பார் என்று நினைத்திருந்த நேரத்தில் கொட நாடு இல்ல ஆண்டவன் நாட்டுக்கே போய் சேர்ந்துட்டார். அவர் ஆத்மா சாந்தி அடையணும். அவர் வாழ்க்கையில் நாம கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு, துணிச்சல் எதிர்நீச்சல் . சோதனைகளை சாதனையாக்கும் எத்தனை இடைஞ்சல்கள் எத்தனை வந்தாலும் கூட தாங்கிகிட்டது.

அவர மாதிரி சோதனைகளை சாதனையாக்கினவர்கள் யாரும் கிடையாது. அவரது வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு உதாரணம். இது பெண்களுக்கு மட்டுமல்ல நம்ம அனைவருக்கும் அவங்கள மைண்ட்ல வச்சிக்கிட்டு நாம நடந்தா நாமலும் குடும்பத்துல உறவினர் மத்தியில நிம்மதியா பேரோடு வாழலாம். அவர் ஆத்மா எப்போதும் பெரிய ஆத்மா , மகாத்மா ஆகிவிட்டது. அவருக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி” இவ்வாறு ரஜினி பேசினார். பேசும்போது பல முறை அவர் குரல் கம்மியது. உடைந்தது. மனம் உருகி பேசினார்.