September 29, 2022

அரசியலுக்கு நன்றி.. வணக்கம் – ரஜினியின் முற்றுப் புள்ளி முடிச்சின் மர்மம்!

“எனது அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டு வருகிறது அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஓடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்” ரஜினி தெரிவித்துள்ள தகவல் கொஞ்ச நேரம் ட்ரெண்டிங்கில் இருந்தது..

முன்னொரு காலக்கட்டத்தில் அதாவது 1995 வாக்கில் பாட்ஷா பட வெள்ளி விழாவின்போது அன்றைய அதிமுக அமைச்சரும், பாட்ஷா படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டே , தமிழகத்தில் குண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என்றார் ரஜினிகாந்த். அன்று ஜெயலலிதா ஆட்சி இருந்த நிலையில் இப்படி பேச அசாத்திய துணிச்சல் வேண்டும். ஆனால் பேசினார் ரஜினிகாந்த். அதை அடுத்து ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

ஆனாலும் இதை தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று பேட்டி கொடுத்தார் ரஜினிகாந்த். தூர்தர்சன் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் ஆட்சியை கிழித்து தொங்கப் போட்டார். அந்த தைரியம் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை மீண்டும் யாருக்கும் வரவில்லை என்பதே உண்மை. ஆக 1996 ஆம் ஆண்டில் ரஜினியின் ஆதரவால் மட்டுமே திமுக வென்றது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. அதனால், அவரின் ஆதரவைப் பெறுவதற்கு பல கட்சிகளும் முயன்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் அவரை இணைக்கும் பல முயற்சிகள் நடந்தன. ரஜினி பிடிக்கொடுக்காமல் நழுவிக்கொண்டிருந்தார்.

இடையிடையே அரசியல் வருவது குறித்து சமிஞ்சைகளை அனுப்பவும் ரஜினி மறக்க வில்லை. அது பெரும்பாலும் அவரின் படங்கள் வெளியிட்டின் போது இருக்கும். அதனால், அவை படத்திற்கான விளம்பரமாக விமர்சனம் செய்யப்பட்டது.

ஆனாலும் அடுத்த மூன்று முறை ஜெயலலிதாவின் ஆட்சிகளிலும் யாரும் வாய் திறக்க வில்லை. எதையும் செய்யும் மனநிலையில் ஜெயலலிதா இருந்தபோது, கடுமையாக அவரை விமர்சித்தவர் ரஜினிகாந்த் மட்டுமே. ஆனால், ஜெயலலிதா எதுவும் பேசவில்லை. காரணம் ரஜினியின் மீது கை வைப்பது தேன் கூட்டில் கைவைப்பது போன்றது என்பது அவருக்குத் தெரியும். இன்னொன்று, யாரையும் சரிக்கு சமமான எதிரியாக பாவித்து அவர்களை வளர்த்துவிடுவதை என்றுமே விரும்பாதவர் ஜெயலலிதா.

இத்தனைக்கும் அப்போது தேர்தலில் நின்றால் உறுதியாக முதல்வராகும் நிலையில் இருந்தார் ரஜினிகாந்த். அவரை நிற்கச் சொல்லி மூப்பனார் முதல் சோ வரை பலரும் நிர்பந்தித்தனர். மூப்பனார் தன் கட்சி தலைமை பதவியே ரஜினிக்காக காலியாக வைத்திருப்பதாக சொன்னார். ரஜினிகாந்த் இடத்தில் அன்று யார் இருந்திருந்தாலும் அரசியலில் அடியெடுத்து வைத்திருப்பர். ஆனால் இவர் அதைச் செய்யவில்லை. காரணம், அப்படி ஒரு எண்ணமே அன்று அவரிடம் இல்லை.

ஜெயலலிதாவை விமர்சிக்கப் போய் அது அவரை அரசியலுக்கு வரவைக்கும் சூழ்நிலையை கொண்டு வந்துவிட்டது. அந்த எண்ணமே இல்லாத போது அவர் எந்த முன்னேற்பாடுகளுடன் இருந்திருக்கமுடியும் ? அரசியலில் அவருக்கு எந்த அனுபவமும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ரஜினி வந்திருத்தால் நிச்சயம் முதல்வராக ஆகியிருக்க முடியும். ஆனால் நல்ல ஆட்சியை கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!. அடுத்த தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்து அவர் பெயரையும் கெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆகையால் தங்கத் தட்டில் முதல்வர் பதவி தேடி வந்த சூழ்நிலையிலும் அதை உறுதியாக மறுத்தார் ரஜினி. வேறு யாரும் இதை செய்திருக்க மாட்டார்கள்.ஆனால் அன்று முதல் அரசியலை கவனிக்கவும், கற்றுக் கொள்ளவும் தவறியதே இல்லை ரஜினிகாந்த்.

அப்பேர்பட்ட நடிகர் ரஜினி பெயரில் கடந்த இரண்டு நாட்களாக் சமூக வலைதளங்களில் சுற்றிய ஒரு அறிக்கையில், “என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் – அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க, இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடுகூட்டி, கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்” என்ற தகவல் இடம்பெற்றிருந்தது.

மேலும்,`கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது.  வந்தாலும், அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், மற்றவர் களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்’ என்று திட்டவட்டமாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்” என்று ரஜினி தெரிவிப்பதுபோல் அந்த அறிக்கையில் தகவல் இடம்பெற்றிருந்தது. இதே தகவலை வைத்து சில பல ஊடகங்கள் அலசல் பணியை நடத்தியது.

இப்படி இரண்டு நாளான நிலையில், தனது பெயரில் வெளியான அந்த அறிக்கையைத் தான் வெளியிடவில்லை என ரஜினி விளக்கமளித்திருக்கிறார்.

இது தொடர்பாக ரஜினி ட்விட்டரில், “என் அறிக்கைபோல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டுவருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.