August 2, 2021

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் – முழு விபரம்!

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஓய்வு பெறுவதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஓய்வு பெற்ற சண்முகத்துக்கு தமிழக அரசின் ஆலோசகராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் உள்ளார். அவர் 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பதவி ஏற்றார். அவர் கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெற வேண்டி வந்தது. இதனால் அவரது பதவிக்காலத்தை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அக்டோபர் 31ம் தேதி வரை பதவி நீட்டித்து உத்தரவிட்டது. பின்னர் நவம்பர் மாதம் முதல் மேலும் 3 மாதத்திற்கு அவரது பதவியை நீட்டித்து தமிழக அரசு வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து 2 முறை தலைமைச் செயலாளராக பதவி நீட்டிப்பு பெற்றார் சண்முகம். அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதனால் இன்றுடன் அவர் ஓய்வுகிறார்.

இதற்கிடையில் புதிய தலைமைச் செயலாளர் பதவியைப் பிடிக்க உள்ளாட்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, அவரது துறையின் அமைச்சராக உள்ள வேலுமணி மூலம் தீவிரமாக முயன்றார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க விரும்பவில்லை. அவர் சசிகலாவின் தீவிர ஆதரவாளராகவும் உள்ளதால் அவருக்கு தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவில் பணியாற்றி வரும் தமிழக ஐஏஎஸ் அதிகாரியாக ராஜீவ் ரஞ்சன், உள்துறைச் செயலாளராக உள்ள எஸ்.கே.பிரபாகர் மற்றும் டி.வி.சோமநாதன் ஆகியோரில் ஒருவரை தலைமைச் செயலாளராக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதில் ராஜீவ் ரஞ்சன் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருந்தது.

அதற்கு ஏற்றார் போல, மத்திய அரசுப் பணியில் உள்ள ராஜீவ் ரஞ்சனை விடுவித்து கடந்த 27ம் ேததி மத்திய அரசு உத்தரவிட்டது. வழக்கமாக தமிழக பணியில் உள்ள அதிகாரி மத்திய அரசு பணிக்குச் சென்றால் 6 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். ராஜீவ் ரஞ்சன் ஓராண்டுதான் பணியாற்றியுள்ளார். இதனால் அவரது பணிக்காலம் உள்ளது. ஆனால் அவரை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், அவரை புதிய தலைமைச் செயலாளராக நியமிக்க முடிவு செய்து, அரசின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப் பட்டன. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் ”மத்திய அரசின் மீன்வளத்துறை, கால்நடைத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ராஜீவ் ரஞ்சன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு கடந்த 27ம் தேதி மத்திய பணியாளர் தொகுப்பு மற்றும் நியமன குழுவின் செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் ராஜீவ் ரஞ்சன் தமிழக பணிகளுக்கு சென்றார். இந்த நிலையில், தமிழகத்தின் தலைம செயலாளராக உள்ள கே.சண்முகம் இன்று பிற்பகலில் ஓய்வு பெறுகிறார். இதை தொடர்ந்து புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சனை அந்த இடத்தில் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது”-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் ரஞ்சன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், 1985ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார் துணை ஆட்சியராக பணியை தொடங்கிய ராஜிவ் ரஞ்சன் மாநில மற்றும் மத்திய அரசுகளில் பல்வேறு முக்கிய பொறுப்பு களை வகித்துள்ளார். கடந்த 1995 முதல் 1997 வரை ராஜிவ் ரஞ்சன் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் நிதி மற்றும் தொழில்துறையில் இணை செயலாளராகவும், பின்னர் தொழில்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் ராஜீவ் ரஞ்சன் பணியாற்றியுள்ளார். பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட அவர் 2018 முதல் 2020 வரை சரக்கு மற்றும் சேவை வரிகள் துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றினார். மத்திய அரசின் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 27ம் தேதி தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.