சமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்!

சமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்!

மிழ்நாடு அரசு நிதி அமைச்சராக பிடிஆர் தியாகராஜன் நியமனம் பெற்றதும் இந்திய அளவில் அவர் மீது விழைவு வெளிச்சம் குழைந்து தவழ்ந்தது. அமைச்சர்களின் வரிசையில் முன்னணி இடத்தைப் பிடிப்பவர்கள் தான் நிதியமைச்சர் பொறுப்பைப் பெறுவார்கள். ஆனால் இவரோ பின் வரிசையில் இடம்பிடிக்கும் அளவுக்கான ஜூனியர். பாரம்பரியப் பெருமை இவருக்குச சிவப்புக் கம்பளம் விரித்தது. பாட்டனார் பிடி ராஜன், தந்தை பழனிவேல் ராஜன் ஆகியோர் மறைந்தனர் எனினும் அவர்தம் பண்பு நலன்களும், நாகரிக நிலைப்பாடுகளும் இன்றும் பேசப்படுகின்றன. அந்த குலவழிக் குமரனான தியாகராஜன், வளர்ந்த நாடுகளில் உயர் பதவிகளை வகித்தவர். அவற்றுக்கு ஏற்ற மெத்தப் படிப்பு படித்தவர்.

ஒவ்வொரு பேட்டியிலும் அவரின் பொருளியல் புலமை போற்றப்படத் தக்கதாக இருக்கிறது. குறிப்புத்தாள் ஏதுமின்றி அவர் கொடுத்த பொருளாதாரம் தொடர்பான பல பேட்டிகள், அவரின் அறிவாற்றலுக்கு அடையாளங்களாக அமைந்துள்ளன. தளர்ந்த பொருளாதாரத்தை வளர்ந்த வளத்துக்குக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை அவர் மீது தமிழக மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் அவரின் இன்னொரு முரட்டு முகம், காண்போரின் சுபாவங்களைச் சுளிக்க வைத்துள்ளது. பெரியகுலம்… சிறிய குணம்… வளரும் வாய்ப்புள்ள இளைஞரான அறிஞர், தன் மதிநுட்ப மேதா விலாசத்தைக் கோபதாபங்களுக்குப் பலி கொடுத்து விடக்கூடாது. கனிமரம் எனில் கல்லடிபடும் என்பது இயல்பு. ஆளும் கட்சி எனில் அதன் மீது விபரீத விமர்சனங்கள் வீசப்படும் என்பதும் இயற்கை. வானதி சீனிவாசன் கடுமையான சொல்லம்புகளை, விஷமம் தடவி தியாகராஜன் மீது வீசி வருகிறார் என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் அவரின் செயலை நியாயப்படுத்தி விட முடியும். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் தியாகராஜனோ…”துர்நாற்றம் அடித்தால் ஜன்னல் கதவைச் சாத்துவது போல அவரின் தொடர்பைத் துண்டித்து கொள்கிறேன்”என்று கூறியிருக்கிறார்.

எதிர்க் கட்சியினர் எனில் தாக்குதல் தொடுப்பதும், ஆளும் கட்சியினர் என்றால் தாங்குதல் எடுப்பதும் தான் ஜனநாயக அரசியல். சமாதானம் செய்ய வேண்டிய அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களே சண்டைக்கோழிகளாய்ச் சதிராடுதல் அழகன்று. வானதி சீனிவாசனின் சமூக வலைதள ஜன்னல் கதவைச் சாத்துவது சாத்தியமே. ஆனால் எம்எல்ஏவான அவரைச் சட்டமன்றத்தில் எதிர்கொண்டால் தடுப்பது தகுமா?

புலி பிடிக்கப் புறப்படும் வேட்டைக்காரன், காட்டுமுள் குத்தியது என்பதற்காக முள்ளுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கலாமா? சமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்யவேண்டும் ராஜன்.

ஆர் நூருல்லா M.A.,M.Phil.,B.L.

ஊடகன்., சென்னை

error: Content is protected !!