அப்பவே சொன்னார் ராஜாஜி!

அப்பவே சொன்னார் ராஜாஜி!

நம்முடைய இளம் ஜனநாயகத்தில் நிலவும் சீரற்ற சில அம்சங்கள் குறித்து, மூன்றாவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்த 1962-ல் மிகச் சிறப்பான ஒரு கட்டுரையை எழுதினார் சி. ராஜகோபாலாசாரி.“மேற்கத்திய ஜனநாயகங்களை அவ்வளவாகப் பாதிக்காத ஒரு குறை நம்மிடையே நிலவுகிறது. இந்திய வாக்காளர்களில் கணிசமானவர்கள் ஏழைகள் என்பதால், லஞ்சம் கொடுத்து அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஒரு சாப்பாட்டுச் செலவுக்கு ஆகும் பணத்தைக் கொடுத்துக்கூட ஒரு குடும்பத்தின் வாக்குகளை ஒரு கட்சி பெற்றுவிட முடியும்” என்று அக்கட்டுரையில் எழுதியிருந்தார்.

rajaji mar 6

பிரிட்டிஷ்காரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நிலையிலும் அவர்கள் வெளியேறி, நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்ட நிலையிலும், இந்நாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் ராஜாஜிக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்தப் பின்னணியில்தான், “சமீபத்திய தேர்தலில் வேட்பாளர்கள் தரப்பிலான செலவுகள் கடுமையாக அதிகரித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏழைகள், கல்வியறிவு இல்லாத மக்களுடைய வாக்குகளைப் பெறப் பணம் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்கள் கல்வியறிவைப் பெறுவதற்கு முன்னால் பணம் இப்படிப் பாய்ந்தால், நம்முடைய ஜனநாயகத்தின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எப்படி நம்புவது… இதிலிருந்து மீள்வதற்கான வழிதான் என்ன? நல்ல அரசாங்கம் வேண்டும் என்ற நம்முடைய வேட்கை இப்படித் தவறான வழியில் முறியடிக்கப்படுகிறது. இது நம்முடைய ஜனநாயகத்துக்கே பெரிய பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது” என்று கட்டுரையில் வருந்துகிறார் ராஜாஜி.

முதல் விமர்சகர்

நம்முடைய தேர்தலைப் பணபலம்தான் தீர்மானிக்கப்போகிறது என்று முதலிலேயே ஊகித்து எச்சரித்தவர் ராஜாஜி. பணபலம் நிலைபெற்ற பிறகு, அடுத்து அடியாள் பலம் இறக்கிவிடப்பட்டது. இந்த நடைமுறைதான் மிலன் வைஷ்ணவ் என்பவரை ‘வென் கிரைம் பெய்ஸ்’ (When Crime Pays) என்ற புத்தகத்தை எழுத வைத்திருக்கிறது. இந்திய அரசியலில், சமீபத்திய பதிற்றாண்டுகளில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் எப்படி படிப்படியாக அதிகரித்துக்கொண்டேவருகிறது என்று ஆய்வுசெய்து, புத்தகத்தில் விவரித்திருக் கிறார் மிலன்.

தனிப்பட்ட முறையில் குண்டர்கள் எப்படி அரசியலில் நேரடிப் பிரவேசம் செய்து தேர்தலில் போட்டியிட்டார்கள் என்று நபர்வாரியாகத் தொகுத்திருக்கிறார். அத்துடன் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் யார், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டவர்கள் யார் என்று ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’

(ஏ.டி.ஆர்.) திரட்டியுள்ள மாபெரும் தகவல் தரவுகளை அவர் பயன்படுத்திக்கொண்டுள்ளார். குற்றவாளிகளின் நேரடிப் பங்கேற்பு, தரரீதியாகவும் எண்ணிக்கைரீதியாகவும் அரசியலை எப்படி ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது என்று அரசியல், பொருளாதாரக் கண்ணோட்டங்களோடு விவரித்துள்ளார்.

எப்படித் தொடங்கியது?

மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்த 1960-களின் பிற்பகுதியி லிருந்து ஆய்வுக் கட்டுரையைத் தொடங்குகிறார் மிலன். அப்போதுதான் இந்தியாவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் தலைதூக்கின. பல்வேறு கட்சிகள் இருப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கிய மானதுதான் என்றாலும், அந்தக் கட்சிகள், கட்சி தாவ விரும்பும் பலருக்குப் புகலிடங்களாக உருவெடுத்தன. தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கத் தடை விதிப்பதென்ற முடிவை பிரதமர் இந்திரா காந்தி 1969-ல் எடுத்தார். உடனே, கட்சிகள் திரைமறைவாக நன்கொடைகளைப் பெற போட்டியில் இறங்கின. பிறகு, 1985-ல் தொழில் நிறுவனங்களிடம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறலாம் என்று சட்டபூர்வமாகவே அனுமதிக்கப் பட்டது. ஆனால், அதற்குள் நிலைமை கையை மீறிவிட்டது, கறுப்புப் பணத்தின் ஆதிக்கம் பரவலாகிவிட்டது என்கிறார் மிலன்.

தாங்கள் எந்தக் கட்சிக்கு, எவ்வளவு கொடுக்கிறோம் என்பது தெரியாமல் இருக்கவும், தாங்கள் நன்கொடை தராத கட்சி ஆட்சிக்கு வந்தால், முந்தைய ஆளுங்கட்சிக்கு எவ்வளவு கொடுத்தோம் என்பதைக் கண்டுபிடித்துப் பழிவாங்கினால் என்ன செய்வது என்ற அச்சத்தில், கணக்கில் காட்டாமல் கறுப்பாகவே நன்கொடைகளை வழங்கத் தொடங்கின.

முதல் சில பொதுத் தேர்தல்களில் ஆதிக்க உணர்வுள்ள வேட்பாளர்கள், வாக்காளர்களைத் தங்களுடைய அடியாட்களை வைத்து மிரட்டியே வாக்களிக்க வைத்தார்கள். 1980-களுக்குப் பிறகு, இப்படி மிரட்டி வந்த பல குண்டர்கள் தாங்களே தலைவர்களாகவும் உருவெடுக்கத் தொடங்கினர். குற்றப் பின்னணி உள்ள அரசியல் தலைவர்கள், தாங்கள் சட்டத்தின் கரங்களில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பாதுகாப்புக்காகவே தேர்தலில் போட்டியிட்டு செல்வாக்கை உயர்த்திக்கொள்ளத் தொடங்கினர். கட்சிகளும் இப்படிப்பட்ட குற்றப் பின்னணி உள்ளவர்களை விரும்பின. அவர்கள் தேர்தல் செலவுக்கான பணத்தைக் கொண்டு வந்ததுடன், வெற்றிக்கும் எல்லா வகைகளிலும் உதவியாக இருக்கத் தொடங்கினர். தேர்தல் செலவுகளோ அதிகரித்துவருகின்றன. பல கட்சிகள் அமைப்புரீதியாகவே வலுவற்றுக் கிடக்கின்றன. தேர்தலுக்கு நிதி பெறும் வழிமுறை பயனற்ற விதத்தில் இருக்கிறது என்ற சூழலில் ‘சுய நிதிவசதியுள்ள’ தலைவர்களைக் கட்சிகள் தேர்வுசெய்தன. இவர்கள் கட்சிகளின் கல்லாவை நிரப்பாவிட்டாலும், கட்சிக்குத் தொடர்ந்து மாமூல் தரும் அளவுக்கு வசதியுடன் இருந்தனர்.

குற்றப் பின்னணி உள்ளவர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள், கட்சிகள் ஏன் அவர்களைத் தேர்வுசெய்கின்றன என்று பார்த்தோம். அவர்களை வாக்காளர்களும் ஆதரிப்பது ஏன்? சட்டசபை அல்லது மக்களவைத் தொகுதியில் வேறு சமூக விரோதிகள் ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்கொள்வது, மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கட்டப் பஞ்சாயத்து மூலம் தீர்ப்பது, நோய்வாய்ப்பட்டால் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பது, பள்ளி கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவது போன்ற சேவைகளை இவர்கள் செய்கின்றனர். அரசு தராத பாதுகாப்பை, கவனிப்பை, ஆதரவைத் தருவதால் இவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ‘அரசின் அடக்குமுறை, ஓரளவுக்கு இவர்கள் மூலம் தனியார்மயப்படுகிறது’ என்று கேலியாகக் குறிப்பிடுகிறார் மிலன். அதேபோல, வெற்றி பெறும் சில வேட்பாளர்கள் தங்களிடம் உள்ள பண பலத்தைக் கொண்டு வாக்காளர்களில் ஒரு பிரிவினரின் ஒருசில தேவைகளைப் பூர்த்திசெய்து, ‘பகுதி நேர நல்வாழ்வுப் பணியாளராகவும்’ செயல்படுகின்றனர் என்கிறார்.

இந்த உதவிகள் சாதி, மத அடிப்படையில்தான் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. மாநில அரசு அளிக்கும் விலையில்லாப் பொருட்களையும் சேவைகளையும் விருப்ப அதிகாரப்படி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அளிக்க முடிவதால், அவர்கள் அதைத் தங்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் விநியோகிக்கின்றனர். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள், எப்படிக் கட்சித் தலைமையால் பல கோடிகள் பெறப்பட்டு விற்கப்படுகின்றன, வசதியுள்ளவர்கள் எப்படி கட்சி நிர்வாகிகளுக்குக் கோடிகளைக் கொடுத்து வாங்குகின்றனர், ஊடகங்களில் வேட்பாளர்களுக்குச் சாதகமாக எப்படி செய்திகள் இடம்பெறச் செய்யப்படுகின்றன உள்ளிட்ட ஜனநாயகச் சீர்குலைவுச் செயல்கள் அனைத்தும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

விதிவிலக்குகள் உண்டா?

பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்களுடைய அடிப்படைத் தேவைகளைத் தொகுதியில் நிறைவேற்றி, அதன் மூலம் மக்களுடைய ஆதரவைப் பெறுவோம் என்று நினைப்பதில்லை என்கிறார் மிலன். அப்படி அவர்கள் வாக்களித்தால் சாலை, மின்சாரம், தண்ணீர் ஆகிய வசதிகளைத் தடையில்லா மின்சாரம், தரமான சாலைகள், தூய குடிநீர் போன்றவையாக அளிக்க முடியும் என்கிறார். சாலைகள், மின்சாரம், குடிநீருக்கும் முன்னால் முக்கியமான அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, வீடு ஆகியவை. கடந்த பத்தாண்டுகளாக மக்களுடைய நல்வாழ்வும் சுயமரியாதையுமே தங்களுடைய லட்சியம் என்று கட்சிகள் மேடைகளில் பேசுகின்றன. இதையொட்டியே ‘ஹமாரா ஹாத்’ – ‘ஆம்ஆத்மி கி சாத்’, ‘சப்கா சாத்’ – ‘சப்கா விகாஸ்’ என்ற கோஷங்கள் முன்னிலை பெறுகின்றன. ஆனால், இந்த அலங்காரப் பேச்சுகள் யதார்த்த நிலையைத் திரைபோட்டு மறைக்கின்றன. வளர்ச்சி அரசியலைப் பேசும் அரசியல்வாதிகள் கூட குற்றப் பின்னணி உள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்கின்றனர். இதுதான் பிஹாரில் நிதீஷ் குமார், தேசிய அளவில் நரேந்திர மோடி ஆகியோரின் நிலையாகவும் இருக்கிறது.

இப்புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் 2014 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது மோடி ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து மேற்கோள்களைக் கையாண்டுள்ளார். ‘அரசியலிலிருந்து குற்றவாளிகளை அகற்ற வேண்டும், வெறும் பேச்சு உதவாது’ என்று ஒரு கூட்டத்தில் மோடி பேசியிருக்கிறார். ‘நான் பிரதமரானால் தேர்தலில் போட்டியிட குற்றவாளிகள் அஞ்சுவார்கள்’ என்றும் ‘ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த பிறகு, குற்றவாளிகள் அரசியலிலிருந்து துடைத்தெறியப்படுவார்கள், அமைப்பு சுத்தமாகிவிடும், எல்லா குற்றவாளிகளும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

குற்றவாளிகளை நம்பித்தான் அரசியல்

மோடி இப்படி வாக்குறுதிகளும் வார்த்தை ஜாலங்களுமாகப் பேசிக்கொண்டிருந்தாலும், தேர்தல் பிரச்சாரப் பணிக்குத் தலைமை வகித்து ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தவர் அவருடைய நெருங்கிய சகாவும் பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா. அவர் மீதே பல குற்றவழக்குகள், ஒருகட்டத்தில் உச்ச நீதிமன்றமே அவரை சொந்த மாநிலத்துக்கு (குஜராத்) செல்லக் கூடாது என்று தடை விதித்தது. அவர் அங்கே சென்றால், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்புகளுக்குத் தேவையற்ற நெருக்குதல்களைக் கொடுப்பார் என்று உச்ச நீதிமன்றம் அதற்குக் காரணம் கூறியது. பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் கணிசமானவர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தன. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜக சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 35% பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிந்தது.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து, இப்போது கிட்டத்தட்ட மூன்றாண்டுகளை நெருங்குகிறது. பிரதமர் எப்படிப் பேசியிருந்தாலும் மாநிலங்களிலும் மத்தியிலும் குற்றவாளிகளை நம்பி அரசியலை நடத்துவது தொடரத்தான் செய்கிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள எல்லாப் பெரிய அரசியல் கட்சிகளும் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளும் பெருமளவுக்குக் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களைத்தான் நம்பியிருக்கின்றன. அரசும் தேர்தல் ஆணையமும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்தினாலும்கூட, வெற்றி பெறும் வேட்பாளர்களில் கணிசமானவர்கள் குற்றப் பின்னணி உள்ள ஆபத்தானவர்கள் என்ற முரண் நிலையில் இந்திய ஜனநாயகம் இருக்கிறது!

சுருக்கமாகத் தமிழில்: சாரி

 

Related Posts

error: Content is protected !!