October 17, 2021

மழை வருது.. மழை வருது! – குடை கொண்டு போங்கோ!

தமிழகத்தில் கோடைகாலத்தில் வெயில் தாக்கம் சுட்டெரித்தது. வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி உயர்ந்தது. இந்தசூழலில் கடந்த மாத இறுதியில் துவங்கிய தென்மேற்கு பருவமழை   இப்போது தமிழகத்தில் பரவியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.   அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 110 மிமீ மழை பதிவானது.

இதுதவிர வேலுார், பெரம்பலுார், சென்னை, கடலுார் உட்பட வட மற்றும் கடலோர மாவட்டங்களில் மித மழை பெய்தது. இதனால் வெயில் தாக்கம் சற்று தணிந்தது.   கேரளா, கர்நாடகாவில் பருவமழை தீவிரமானதால் தமிழக நீர்நிலைகளுக்கு கணிசமாக நீர்வரத்து துவங்கியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

இதற்கிடையே வங்கக்கடல் மத்திய மேற்கு பகுதியில் காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்யும். சென்னையில் மிதமழை பெய்யும். வெயில் கோரம் தணிந்து காணப்படும். கடலோர பகுதியில் காற்று தாக்கம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.