September 18, 2021

அக்டோபர் 2 அன்று பயணிகளுக்கு அசைவ உணவு கிடையாது! – இந்தியன் ரயில்வே முடிவு!

காந்தி ஜெயந்தி. நம் இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஐ குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய அளவில் அக்டோபர் 2-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜூன் 15, 2007-ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி இந்நாள் அனைத்துலக வன்முறையற்ற நாளாகவும் அனைத்து நாடுகளிலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான புளூபிரிண்ட் ஒன்றையும் ரயில்வே நிர்வாகம் தயாரித்துள்ளது.

இது குறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் கடந்த ஆண்டு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ”காந்திஜி யின் 150 வது பிறந்தநாள் சைவ தினமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக 2018, 2019 மற்றும் 2020 ஆகிய 3 ஆண்டுகளும் அக்டோபர் 2 அன்று பயணிகளுக்கு அசைவ உணவு வழங்கக் கூடாது. அக்டோபர் 2-ஐ சைவ தினமாக ரயில்வே ஊழியர்கள் கொண்டாட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் இந்த பரிந்துரை ஏற்கப்படும் பட்சத்தில், இனி அக்டோபர் 2 தேசிய தூய்மை தினமாக மட்டுமின்றி, சைவ தினமாகவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

மேலும் காந்தியின் தண்டி யாத்திரையை நினைவு கூறும் விதமாக சபர்மதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அந்த ரயில் டிக்கெட்டில் காந்தியின் படம் வாட்டர் மார்க் போன்று இடம்பெற செய்யப்பட உள்ளது.

அத்துடன் ரயில் நிலையங்கள், ரயில்வே அலுவலகங்களில் காந்தியின் படங்கள், அவரின் பொன்மொழிகள் இடம்பெற செய்யப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. கலாச்சாரத்துறை அமைச்சகத்திற்கு புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு, இது ரயில் பெட்டிகளிலும், இருக்கை எண்ணிற்கு அருகிலும் டிஜிட்டல் முறையில் இடம்பெற செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.