October 25, 2021

ஒரு பைசா கட்டணத்தில் ரூ.10 லட்சம் இன்ஸ்சூரன்ஸ் ; ரயில்வேயில் புதிய திட்டம் விரைவில் அமல்

நம் நாட்டில் ஆண்டு தோறும், ரயில் விபத்துகளால் நாடு முழுக்க சுமார் 30 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக தேசிய குற்றப் பதிவு காப்பகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துகள், ரயில் விபத்து மற்றும் ரயில்வே கிராசிங் விபத்துகள் என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. ரயில்கள் நேருக்கு நேராக மோதியது மற்றும் ரயிலில் இருந்து விழுந்தது ஆகிய காரணங்களால் சுமார் 15 ஆயிரம் பேர் பலியாகியுள்ளர். மீதம் ரயில்வே கிராசிங்கில் நடக்கின்றன. அதிலும் இவற்றில் பெரும்பாலான விபத்துகள் ஜூன் மாதத்தில்தான் நடைபெற்றுள்ளன. 17.5 சதவீதம் விபத்துகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை நிகழ்ந்திருக்கின்றன என்றெல்லாம் தெரிய வந்திருந்தது. இப்படி ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கிற அல்லது உறுப்புகளை இழக்கிற பயணிகளுக்கு ரெயில்வே துறை இழப்பீடு வழங்கி வருகிறது.

rail jy 25

இந்த நிலையில் ரெயில் பயணிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒரு புதிய காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி ரயிலில் தினமும் பயணிக்கிற (சீசன் டிக்கெட்டில்) பயணிகளுக்கு தினமும் ஒரு காசு கட்டணத்தில் (பிரிமியம்) ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்படும். இதேபோன்று ரயிலில் முன் பதிவு செய்து பயணிக்கிறவர்களுக்கு ரூ.5 கட்டணத்தில் இந்த காப்பீடு செய்யப்படும்.ரயில் விபத்துகளில் பலியாகிறவர்களுக்கு அல்லது நிரந்தர ஊனம் அடைகிறவர்களுக்கு இழப்பீடாக காப்பீடு வகையில் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

பகுதியளவில் உடல் ஊனம் அடைகிறவர்களுக்கு ரூ.7½ லட்சம் இழப்பீடு தரப்படும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறவர்களுக்கு ரூ.5 லட்சம் அளிக்கப்படும்.

உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்கு ரூ.10 ஆயிரம் தரப்படும்.

இந்த காப்பீட்டு திட்டத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரயில்வே அமல்படுத்தும். நடவடிக்கையை ரயில்வே முடுக்கி விட்டுள்ளது.

3 நிறுவனங்கள்

இது தொடர்பாக 17 காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்து பரிசீலனை நடைபெற்றது. முடிவில் ராயல் சுந்தரம், ஐ.சி.ஐ.சி.ஐ. லாம்பர்டு ஜெனரல் இன்சூரன்சு, ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்சு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ரெயில் பயணிகளுக்கு காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன.

முதலில் இந்த திட்டம், முன்பதிவு செய்து ரயிலில் பயணம்செய்கிறவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் சோதனை ரீதியில் அமல்படுத்தப்படும் என ரெயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தினமும் ரயிலில் பயணம் செய்கிறவர்களுக்கான காப்பீட்டு திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.