September 17, 2021

ரயிலில் டிக்கெட் மட்டுமின்றி ரயில் பெட்டி & ரயிலையே ஆன்லைனில் புக் செய்துக்கலாம்!

நம் நாட்டின் ரயில்வே துறையில் காகிதத்தின் பயன்பாட்டையும், அதனால் ஏற்படும் செலவையும் குறைக்கும் நோக்கிலும், டிஜிட்டல்முறைக்கு மாறும் முயற்சியிலும் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி முதல் ஏ1,ஏ மற்றும் பி தரமுள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவு பயணிகளின் பட்டியல் ஒட்டப்படாது. அதற்கு பதிலாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களிலும் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் ரயில்களில் திருமணம், சுற்றுலா போன்ற காரணங்களுக்காக குழுவாக பயணம் செய்ய ஏதுவாக ரயில் பெட்டி மற்றும் தனி சிறப்பு ரயில்களை, இனிமேல் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரயில்களில் திருமணம், சுற்றுலா, சமூக நிகழ்ச்சிகள் என பலவற்றிக்கும் ரயில் பெட்டியை ஒட்டுமொத்தமாக முன்பதிவு செய்ய முடியும். அவர்களுக்காக குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டியை ரயில்வே நிர்வாகம் இணைக்கும். அதுபோலேவே சில அமைப்புகளின் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிக்கு தனியாக சிறப்பு ரயில்களையும் ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.

தற்போதைய நடைமுறைப்படி, ரயில் பெட்டி அல்லது சிறப்பு ரயில் வேண்டுவோர் அதற்காக ரயில்வே கண்காணிப்பாளர் அல்லது நிலைய அதிகாரியை நேரில் தொடர்பு கொண்டு கடிதம் அளிக்க வேண்டும். பின்னர் அதற்கான முழுத்தொகையையும் செலுத்தி ரசீது பெற வேண்டும். அதன் பிறகு பரிசீலனையை ஏற்று ரயில் பெட்டி ஒதுக்கீடு செய்யப்படும். சுற்றுலா ஏற்பட்டாளர்கள் உள்ளிட்டோர் தற்போது இந்த நடைமுறைபடியே ரயில் பெட்டிகளை கூடுதல் ரயில் பெட்டிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு அலைச்சல் மற்றும் கால தாமதம் ஏற்படுகிறது.

இதையடுத்து ரயில் பெட்டி அல்லது சிறப்பு ரயில் விடுவதற்கு, ஐஆர்சிடிசி இணையதளம் மூலமே ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு ரயி்வே நிர்வாகம் வசதி அளித்துள்ளது. எனவே திருமணம், சுற்றுலா போன்ற காரணங்களுக்கு குழுவாக செல்ல விரும்புவோர் இனிமேல் அலைச்சல் இன்றி ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்படுள்ளது.