அரசியல் செய்ய தெருவுக்கு வாங்க ராகுல்!

அரசியல் செய்ய தெருவுக்கு வாங்க ராகுல்!

ந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. காங்கிரஸுக்கு பலத்த அடி. உ.பி யில் துளி கூட முன்னேற்றம் இல்லை. பஞ்சாபில் கையிலிருந்த ஆட்சியை இழந்திருக்கிறது.பா.ஜ.க வின் தொடர் வெற்றிக்கும் காங்கிரஸின் அதளபாதாள சறுக்கலுக்கும் கொள்கைரீதியாகவும் சித்தாந்தரீதியாகவும் ஆய்ந்து பல கட்டுரைகளை எழுதலாம். அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு சிலவற்றை பார்ப்போம்.

உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு கட்சியின் முக்கிய தலைவர்களும் எவ்வளவு பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் ஈடுபட்டார்கள் என ஆங்கில நாளிதழ்களில் இரண்டு நாளுக்கு முன்பு ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதன்படி உத்தரபிரதேசத்தில் இந்த 7 கட்ட தேர்தல் காலத்தில் பா.ஜ.க சார்பில்,
யோகி ஆதித்யநாத் – 203
பிரதமர் நரேந்திர மோடி – 28
அமித்ஷா – 54
ராஜ்நாத் சிங் – 43
பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா – 41
எண்ணிக்கையிலான பொதுக்கூட்டம்/ பேரணிகள் / மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பா.ஜ.கவிற்கு எதிராக கடுமையாக போட்டியளித்த அகிலேஷ் யாதவ் 131 பொதுக்கூட்டங்கள்/ பேரணிகள்/ மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டிருக்கிறார்.

காங்கிரஸின் கணக்கிற்கு வருவோம். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி 209 பொதுக்கூட்டங்கள்/ பேரணிகள் / மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டிருக்கிறார். உ.பி யில் பிரியங்கா காந்தியை மட்டுமே காங்கிரஸ் நம்பியிருந்தது. உடல்நலம் காரணமாக சோனியா காந்தி விர்ச்சுவலாக மட்டுமே பிரச்சாரம் செய்தார்.

ஆனால் ராகுல் காந்தி என்ன செய்தார்? ஒட்டுமொத்தமாக 403 தொகுதிகள் கொண்ட உ.பியில் மொத்தமாகவே 7 கட்ட தேர்தலுக்கும் சேர்த்தே வெறும் இரண்டே இரண்டு பேரணிகளிலேயே ராகுல் காந்தி பங்கேற்றிருந்தார். அதுவும் அமேதி மற்றும் வாரணாசியில் மட்டுமே.

யோகி ஆதித்யநாத்திற்காக ஒட்டுமொத்த பா.ஜ.க வும் உத்தரபிரதேசத்தில் களமிறங்கி தெரு தெருவாக வேலை பார்த்திருக்கிறார்கள். மோடி, அமித்ஷா உட்பட. அப்படியான ஒரு உழைப்பு காங்கிரஸிடமிருந்து வெளிப்பட்டிருக்கவில்லை அல்லது பிரியங்கா மட்டுமே எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. முழு அதிகாரத்தோடு கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு தோல்வியே இல்லாத நிலையில் மோடி 28 பொதுக்கூட்டங்களில் / பேரணிகளில் பங்கேற்கிறார் எனில் அவரை தோற்கடிக்க நினைக்கும் ராகுலும் காங்கிரஸும் கற்பனைக்கு எட்டாத வகையில் உழைத்திருக்க வேண்டும். மக்களை சந்தித்திருக்க வேண்டும். ஆனால், அது எங்கேயும் நடந்ததாக தெரியவில்லை. கொள்கை கோட்பாடுகளை வைத்துக் கொண்டு மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் என்றால் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

இந்த ஒரு தேர்தல் அல்லது இந்த ஒரு உ.பி இல்லை. இப்போது தேர்தல் நடந்த 5 மாநிலங்களையும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். 2014 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி இப்போது வரை நடந்த அத்தனை மாநில/நாடாளுமன்ற தேர்தலையும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். மோடி உட்பட பா.ஜ.க முகாமின் மூத்த தலைகள் எத்தனை தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள், அதே சமயம் ராகுல் உட்பட காங்கிரஸின் பெரிய தலைகள் எத்தனை கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு பாருங்கள். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் தெரிய வரும். ராகுல் உழைக்கவே இல்லை. மக்களை சந்திக்கவே இல்லை எனக் கூறவில்லை. தேர்தல்களை தேவைப்படும், அசுரத்தனமான பா.ஜ.க வெல்வதற்காக பெரும் உழைப்பு அவரிடம் வெளிப்பட்டிருக்கவில்லை.

டிவிட்டரில் அல்ல, தெருவில் இறங்கி செய்வதுதான் அரசியல். மக்களிடம் செல்லுங்கள்.

வி.ஜெ.ஸ்ரீராம்

error: Content is protected !!