கோவிந்தா .,கோவிந்தா- திருப்பதி டூ திருமலை பாதயாத்திரை சென்ற ராகுல்!
அரசியல் நவரச நாயகன் என்ற புது அடைமொழிக்கு சொந்தக்காரரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திருப்பதியில் இருந்து திருமலை வரை பாத யாத்திரையாக மலையேறி சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். திருப்பதியில் இன்று காங்கிரஸ் பிரச்சாரத்தை தொடங்கி வைப்பதற்காக அவர் வந்தார். அவருடன் பிரியங்காவின் மகன் ரைஹன் வதேராவும் வந்துள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து அலிபிரி வரை காரில் வந்த ராகுல் காந்தி பின்னர் நடைப் பயணமாகவே திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் சென்றனர். திருப்பதி கோயிலுக்கு படி ஏறிச் சென்ற பக்தர்கள் பலரும் அவருக்கு கைகொடுத்தனர். பாதுகாப்பு கெடுபிடிகளை விலக்கி வைத்து விட்டு ராகுல் காந்தி பக்தர்களுடன் கலந்துரையாடினார்.
திருமலை வரை மலையேறி சென்ற அவர பின்னர் ஏழுமலையான் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதைகள் செய்யப்பட்டன. ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் கிரண் ரெட்டி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
சுவாமி தரிசனம் செய்த பின்னர் காரி்ல் திருமலையில் இருந்து திருப்பி திரும்பிய ராகுல் காந்தி, தாரகராமா விளையாட்டு மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.