ராகுல் காந்தியின் எம்.பி. பொறுப்பு பறிப்பு!- மோடி அரசு அதிரடி!

ராகுல் காந்தியின் எம்.பி. பொறுப்பு பறிப்பு!- மோடி அரசு அதிரடி!

பிரதமர் ‘மோடி பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது. தீர்ப்பு வெளியான மார்ச் 23 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல் காந்தி. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விஷயம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி   ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம், ராகுல்மீது  கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்  தண்டனை விதிக்கப்பட்ட மார்ச் 23 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை மக்களவை செயலர் திரிபாதி வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. தண்டனை காலமான 2 ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகான 6 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 (Representation of the People Act)  என்ன சொல்கிறது?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8-இன் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர் ஆகியோர் மீதான கிரிமினல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும்.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. இந்த வழக்கை சட்டரீதியாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் போராடப் போவதாக அறிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், வெகுஜனப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

error: Content is protected !!