மிஷன் சக்தி-க்கும் உலக நாடக தினத்துக்கும் முடிச்சுப் போட்ட ராகுல்!

மிஷன் சக்தி-க்கும் உலக நாடக தினத்துக்கும் முடிச்சுப் போட்ட ராகுல்!

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை ரேடியோ மூலம் நாட்டு மக்களிடம் பேசுவது வழக்கம். அது தவிர வேறு விதமான சூழ்நிலைகளில் ரேடியோவை பயன் படுத்தாத நிலையில் தேர்தல் பரபரப்பில் உள்ள நாட்டு மக்களிடம் ரேடியோ மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவருக்கு உலக நாடக தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் இந்திய செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் ”மிஷன் சக்தி” சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் திடீரென  உரையாற்றிய பிரதமர் மோடி,”விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்துள்ளது. இன்று வரை விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன. இப்போது இந்தியா இந்த சோதனையை 4-வது நாடாக வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. சோதனையும், ஏவுகணையும் முழுமையாக இந்திய செயற்கைக்கோளைப் பாதுகாக்கவும், இந்தியாவின் தற்காப்புக்காகவும் மட்டுமே இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்நிலையில்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்திற்கு (Defence Research Development Organisation) தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் ராகுல் காந்தி ட்விட்டரில்,”மிகச் சிறப்பு. உங்களுடைய பணியால் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக “பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, மோடியை விமர்சனம் செய்துள்ளார். மம்தா பானர்ஜி டுவிட்டரில்,”பிறரின் சாதனைகள் மற்றும் சிறந்த பணிகளுக்கான பாராட்டுகளை நரேந்திர மோடி தானே எடுத்துக்கொள்வதை முதலில் நிறுத்திக்கொள்ளவேண்டும். செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி நடத்தப்பட்ட சாதனையின் பாராட்டுகள் அனைத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு உரியது. மோடி தலைமையிலான அரசு, கடந்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணத்தை வழங்காமல் தோல்வியடைந்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். ”ஆகையால், தேர்தல் வருவதற்கு முன், பாஜகவும் மோடியும் இதுபோன்ற தந்திரங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள். அது எதுவும் வரும் தேர்தலை பாதிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி டுவிட்டரில்,”இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி யாளர்களின் இந்த சாதனை பாராட்டிற்குரியது. ஆனால், அரசியல் லாபத்திற்காக பிரதமர் மோடி இதை பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. இதில் தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பிரதமரை மோடியை சாடியுள்ளார். அகிலேஷ் யாதவ் டுவிட்டரில்,”வேலை வாய்ப்பிண்மை, கிராமப்புற பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு ஆகிய பிரதான பிரச்சனைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப இன்று ஒரு மணிநேரம் இலவசமாக டிவியை பயன்படுத்தி யுள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்திற்கும், இஸ்ரோவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து பாராட்டுகளும் உங்களுக்கானது. இந்திய நாட்டை பாதுகாப்பாக்கும் உங்களுக்கு நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், செயற்கைக் கோள்களுக்கு எதிரான ஏவுகணை ஏ-சாட்-ஐ உருவாக்கிய ஆராய்ச்சியாளர் களுக்கு வாழ்த்துக்கள். “இதுபோன்ற பணிகள் நாட்டிற்கு அறிவிக்கப்படவேண்டிய ஒன்றுதான். உலகத்திற்கு தெரியப் படுத்த வேண்டும். ஆனால், இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன ஆராய்ச்சி யாளர்கள் உரிய முறையில் அறிவித்திருக்கவேண்டும். அதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவித்துள்ளார். அவர் இதனை பயன்படுத்திக் கொண்டார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அதன் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமரே வேட்பாளராக உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது நடத்தை விதிமுறை களை மீறிய செயலாகும்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதிலும் “இந்த அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு முன்னரே தெரிவிக்கப்பட்டுவிட்டதா? அப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது என்றால், அவர்கள் எப்படி பிரதமருக்கு அதை அறிவிக்க ஒப்புதல் வழங்கலாம். இதை அறிந்துகொள்ள ஒட்டுமொத்த நாடுமே ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறது” என்று யெச்சூரி வினா எழுப்பி உள்ளார்.

அடிசினல் ரிப்போர்ட்:

அது சரி.,மிஷன் சக்தி என்றால் என்ன?

இந்த மார்ச் 27-ம் தேதி – 2019ல் நம் ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவுவில் இருந்து செயற்கைக்கோள் ஒன்றைத் தாக்கிய திட்டத்தின் பெயர்தான் மிஷன் சக்தி. இந்தியாவின் மிகக் குறுகிய சுற்று வட்டப் பாதையில் பயன்படுத்தாமல் உள்ள ஒரு செயற்கைக்கோளை இந்திய விஞ்ஞானிகள் ஏவுகணை மூலம் தாக்கி அளித்தன. இது ஒரு ஆன்டி சாட்டிலைட் தாக்குதல் சோதனை முயற்சி. முன்னதாக இது போன்று தேவை இல்லாமல் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களைப் பாதுகாப்பு கருதி அமெரிக்க, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே ஏவுகணை உதவியுடன் தாக்கி அளித்துள்ளன.

தற்போது எந்தச் செயற்கைக்கோள் தாக்கப்பட்டது?

இந்தியாவில் நீண்ட காலம் பயன்படுத்தாமல் இருந்த ஒரு செயற்கைக்கோள் தாக்கி அழிக்கப்பட்டது என்றும், பிற நாட்டுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

செயற்கைக்கோளைத் தாக்கி அளிக்க எந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டது?

DRDO எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தி செயற்கைக்கோள் தாக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் வெடித்து பூமியில் விழாதா?

பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தி செயற்கைக்கோள் தாக்கப்பட்டதால் செயற்கைக்கோள் நொடியில் சாம்பலாக்கி காற்றில் கரைந்துவிடும்.

எதற்குப் பழைய செயற்கைக் கோள்களைத் தகர்க்க வேண்டும்?

பழைய செயற்க்கைகோள்கள் அதிகமாக இருக்கும் போது எதிர் நாட்டவர்கள் அதை யாருக்கும் தெரியாமல் திருடி ஒரு நாடு குறித்த தகவல்களைத் திருடவும் வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமில்லாமல் வரும் நாட்களில் போர் என்று இருந்தால் பொருளாதாரம், செயற்கைக்கோள், விண்வெளி சார்ந்ததாகத் தான் இருக்கும். அப்படியொரு சூழலில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு நோக்கத்தில் தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

இந்த சோதனையை இப்போது நடத்த என்ன காரணம்?

2014-ம் ஆண்டு முதல் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. கண்டிப்பாக இந்த சோதனை வெற்றிபெறும் என்று உறுதிப்படுத்திய பிறகு, அரசின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் படி தற்போது செயல்படுத்தப்பட்டது.

இந்த ஏவுகணை நம்மை எதிலிருந்து எல்லாம் பாதுகாக்கும்?

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையில் சாட்டிலைட் எதிரான போர் நிகழ்ந்தால், எதிரிகளின் செயற்கைக்கோளைத் தாக்க என்பது மட்டுமில்லாமல், எதிரிகள் தாக்கிய செயற்கைக்கோள்கள் நம் மீது விழாமல் தற்காத்துக்கொள்ளவும் இந்த பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை நமக்கு உதவும்.

போக்ரான் அணுக்குண்டு சோதனை நடத்தியபோது இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அது போன்று இப்போது ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா?

சர்வதேச விண்வெளி சட்டத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்தச் சோதனையும் அனைத்து சட்ட விதிகளுக்கும் உட்பட்டுத் தான் செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு நாட்டுக்கும் பாதிப்பு கிடையாது. பொருளாதாரத் தடை ஏதும் விதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!