December 9, 2022

பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மோடிக்கு ரகுராம் ராஜன் 5 அட்வைஸ்!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று மாலை நடந்த இந்திய பட்டறையின் தொடக்க விழாவில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ரகுராம் ராஜன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.சமூக அறிவியலுக்கு முக்கியப் பங்களிப்புகளை வழங்கிய, சில மாதங்களுக்கு முன்பு காலமான சமூகவியலாளர் கெயில் ஓம்வேதித்தின் நினைவாக இந்த உரை அமைந்தது.

அப்போது, “ஜனநாயகம் மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி” என்ற தலைப்பின் கீழ் பேசிகையில், 5 முக்கிய வழிகாட்டுதல்களை ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது :

* முதலாவதாக அரசாங்கம் என்பது மக்களை முன்னிறுத்திச் செயல்படவேண்டும். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் போட்டியிட பொதுவான ஒரு தளம் அமைக்கவேண்டும். பெண்களுக்கும் பிற்பட்ட சமூகத்தினருக்கும் போதிய அளவு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகம் பலவீனமானதாகத்தான் இருக்கும். உலகில் வேகமாக வளர்ந்து வரும் சமூகங்கள் எல்லாம் சக மக்களை மோசமாக நடத்தும் பழக்கத்தை அறவே ஒழித்து வருகின்றன. இதனை நாமும் கையில் எடுக்க வேண்டும். அரசாங்கத்துக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள இடைவெளியைத் தகர்த்து நேருக்கு நேர் தொடர்பு வலுப்பட வேண்டும். சமீபத்தில் 2022-23 -க்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் பெண் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மாத ஊக்கத் தொகைத் திட்டம் வரவேற்கத்தக்கது. இதனைக் கருத்தில் கொண்டு பெண் குழந்தைகள் பள்ளிக்கு அதிகளவில் அனுப்பப்படுவார்கள். எனவே, மக்களை முன்னிறுத்தி ஒரு அரசாங்கம் செயல்படுதல் அவசியம்

*“இரண்டாவதாக அரசாங்கம் என்பது விமர்சனங்களை வரவேற்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* மூன்றாவது, தொழில்நுட்பங்களின் அங்கமாக விளங்கும் ‘சிப்’க்களின் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு முன்முயற்சிகள் எடுக்கவேண்டும். அதுமட்டுமல்லாது, குவால்காம் (qualcomm), ஸ்னாப்டிராகன் (snapdragon) போன்ற தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை நாமே வடிமைத்திருக்கவேண்டும். இந்த சிப்-க்களின் வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.

*“நான்காவதாக அனைத்து விஷயங்களிலும் ஒரு கற்றல் அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்கவேண்டும். இதன் வெளிப்பாடாக அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கம் என்பது மத்தியிலிருந்து மாநிலத்திற்கு மட்டுமன்றி, மாநிலங்களிலிருந்து பிரியும் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பிரிவுகளுக்கும் இருத்தல் வேண்டும். கனடா போன்ற நாடுகளில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் அதனை முதலில் சமூக அளவில் சிறிய சோதனைகளுக்குப் பிறகே பெரிய அளவில் கொண்டு செல்கின்றனர். பொருளாதார வளர்ச்சியைக் கண்டறிய இம்முறை பயனளிப்பதாக இருக்கும்

* , ” ஐந்தாவதாக பன்னாட்டு ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். உதாரணத்திற்கு, இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில்கிறார்கள் என்றால் அவர்கள் அந்நாட்டில் பணியைத் தொடங்கும் முன் நம் நாட்டுக் குடிமக்கள் என்ற அடிப்படையில் தங்கள் சேவைகளுக்கான சேவை வரியைப் பெறும்படி ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். பொருட்களுக்கான ஏற்றுமதி வரியைப் போல் சேவைகளுக்கான ஏற்றுமதி வரி என்பதற்கான திட்டமே இது. சேவைகளை முன்வைத்து உலகமயமாக்கல் என்பதே இதன் நோக்கம்,”