ரபேல் ஒப்பந்த சர்ச்சை: மறுபடியும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

ரபேல் ஒப்பந்த சர்ச்சை: மறுபடியும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

நாட்டில் இன்றளவும் சர்ச்சையை ஏற்படுத்திய ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரும் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

பிரான்சுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப் பதாகக் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதோடு, ரபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை பாஜகவினர் கடுமையாகத் தாக்கி பேசி வந்தனர். ரபேல் தொடர்பாகப் பொய் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, தீர்ப்பு வந்த மறுநாள் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “டிசம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரம், ’36, ரபேல் போர் விமானத்தின் விலை விபரம் தொடர்பான சிஏஜி (மத்திய தணிக்கை குழு) அறிக்கை பொது கணக்கு குழுவிடம் (பிஏசி) கொடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால் அதுபோன்று எந்த ஒரு அறிக்கையும், பொது கணக்கு குழுவிடம் கொடுக்கப்படவில்லை ஏனென்றால் பொது கணக்கு குழுவின் தலைவராகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளார். அவரே சிஏஜி அறிக்கையைப் பார்க்காத நிலையில், அந்த அறிக்கை பொது கணக்கு குழுவிடம் எப்படிக் கொடுக்கப்பட்டிருக்கும்” என்று கேள்வி எழுப்பினார். சுப்ரீம் கோர்ட் பாஜக அரசு தவறுதலாக வழிநடத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் இதற்கு மத்திய அரசு சார்பில், ” தீர்ப்பின் 25ஆவது பக்கத்தில் இலக்கணப் பிழை ஏற்பட்டுள்ளதாகவும், பிழை உடனே திருத்தப்பட வேண்டும் என்றும்” சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசே தீர்ப்பில் பிழை இருப்பதாகக் கூறியதால், தீர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்நிலையில்தான் ரபேல் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி மற்றும் யஸ்வந்த் சின்ஹா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. தொடர்ந்து இன்று (பிப்ரவரி 21) வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் மறுசீராய்வு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மறுசீராய்வு மனுக் களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. ரஃபேல் வழக்கு அமர்விலிருந்த நீதிபதிகள் வேறுவேறு அமர்வில் இருப்பதால் புதிதாக ஒரு அமர்வை உருவாக்க இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சீராய்வு மனுக்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் ஏதேனும் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக்கும்.

Related Posts

error: Content is protected !!